கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் கடந்த 2 வாரமாக பெய்த பலத்த மழை காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேற்று காலை அடிபாலாறு வழியாக பிற்பகல் மேட்டூர் அணைக்கு வர தொடங்கியது. தொடக்கத்தில் 1000 கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 15 ஆயிரம் கனஅடியாகவும், இரவு 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இன்று காலையில் அணைக்கு 32 ஆயிரத்து 421 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நீர்வரத்து அதிகரிப்பால் நேற்று காலை 40 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 45.05 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் 5 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் திறப்பை விட நீர்வரத்து பல மடங்கு அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் மிக வேகமாக உயர தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் மழை தீவிரம் குறைந்ததால் கபினி அணைக்கு இன்று 9 ஆயிரத்து 599 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருகிறது.இதன் காரணமாக கபினி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

நீர்வரத்து குறைந்ததால் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட 35 ஆயிரம் கன அடி தண்ணீர் நேற்று முன்தினம் விநாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டு இந்த நீர்திறப்பு இன்று காலை 729 கனஅடியாக குறைக்கப்பட்டது. இன்னும் ஓரிரு நாளில் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைவதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன.

நீர்வரத்து காரணமாக பல மாதங்களாக வறண்டு கிடந்த காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் காவிரி ஆற்றில் முகாமிட்டு இருந்த மீனவர்கள் தங்களின் கூடாரங்களை மேடான பகுதிக்கு மாற்றி சென்றனர். மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை 2-வது நாளாக நீடிக்கிறது. இதற்கிடையில் கர்நாடகாவில் மழை குறைந்ததால் இன்று ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 23 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

காவிரி கரையில் விதைக்கப்பட்டிருந்த எள், கம்பு, சோளம், ராகி உள்ளிட்ட தானிய பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்