மேட்டுப்பாளையம் ஆணவப் படுகொலை: ‘என் தம்பியுடன் உன் மகள் பழகினால் அது எங்க குலசாமிக்கு ஆகாது’

0
855

எங்கள் சாதி பையனோடு பேசினால் வெட்டி ஆற்றில் வீசி விடுவோம் என்று கொலை செய்யப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் தங்களை ஏற்கனவே மிரட்டியதாக, மேட்டுப்பாளையத்தில் சாதியை மீறி காதல் திருமணம் செய்ய முயன்றதால் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் உயிருக்குப் போராடிவரும் பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட கனகராஜின் சகோதரர் கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்துள்ளதாக காவல்துறை தெரிவிக்கிறது. மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வினோத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கொலை செய்த வினோத்குமார் சரணடைந்து உள்ளதாகவும் காவல் துறை தெரிவிக்கின்றது.

இந்தச் சம்பவம் குறித்து சமூக செயற்பாட்டாளரும், இச்சம்பவத்துக்கு நீதி கிடைக்க பெண்ணின் குடும்பத்தாரோடு இணைந்து போராடுபவரான வின்சென்ட் ராஜ் (எவிடன்ஸ் கதிர்) தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது – 

கனகராஜ் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணவறையில் கிடக்கிறான். அந்த பிணவறையிலிருந்து சுமார் 100 அடி தொலைவில் அவசர சிகிச்சை பிரிவில் இன்றோ நாளையோ உயிர் போகும் என்கிற நிலையில் வர்சினி பிரியா கிடக்கிறாள். என் மகள் இறக்கப் போவது உறுதி. மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். கொலை செய்தவர்களுக்கு உச்சபட்சமாக மரண தண்டனை கிடைக்கலாம். ஆனால் என் மகள் உயிருடன் கிடைப்பாளா? பட்டியல் சாதியில் பிறந்ததற்காக கொல்லுவார்களா? என்று கதறலுடன் கேள்வி எழுப்புகிற அமுதாவிற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்து நின்றேன்.

மேட்டுப்பாளையத்தில் துப்புரவு பணியாளராக பணி செய்யக்கூடிய அமுதாவின் இளைய மகள் வர்சினிபிரியா. கடந்த ஒரு வருடமாக கனகராஜ் என்கிற ஆதிக்கசாதி இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு கனகராஜின் அண்ணன் வினோத் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளான்.

சக்கிலிய ……. முண்டங்களா உங்களுக்கு என் தம்பி கேட்குதா? என் தம்பியுடன் உன் மகள் பழகினால் அது எங்க குலசாமிக்கு ஆகாது. எங்க வம்சத்தையே கொன்றுவிடும். எங்க கௌரவத்திற்கும் கெட்டபெயர். எங்க சாதியும் கெட்டுப்போய்விடும். மரியாதையாக உன் மகளை இருக்கச் சொல். பேசினாலோ பழகினாலோ உன்னையும் உன் மகள்களையும் கொன்றுவிடுவேன் என்று மிரட்டி வந்திருக்கிறான்.

பயந்துபோன அமுதா, தன் மகளிடம் கனகராஜோடு பேசாதே என்று கெஞ்சி பலமுறை அழுதிருக்கிறார். இதனை உணர்ந்த வர்சினிபிரியா நாம் இருவரும் இனிமேல் சந்திக்க வேண்டாம் என்று கனகராஜிடம் கூற, அவனோ என்ன நடந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன், தைரியமாக இரு என்று ஆறுதல் கூறியிருக்கிறான்.

இந்த நிலையில்  25.06.2019 அன்று மாலை 5.30 மணியளவில் வர்சினிபிரியாவும் கனகராஜும் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த கனகராஜின் அண்ணன் வினோத்தும், இன்னொரு இளைஞரும் கனகராஜை கொடூரமாக வெட்டி படுகொலை செய்தனர். வர்சினிபிரியாவிற்கு தலையில் கடுமையான வெட்டுக் காயம். தலையில் இரத்தம் உறைந்து போய் மூளையும் பாதிக்கப்பட்டுள்ளது. உயிர் பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து நிற்கின்றனர் தலித் மக்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், பெரியார் திராவிடர் கழகம், தமிழ்ப்புலிகள், ஆதித்தமிழர் பேரவை, தலித் விடுதலை கட்சி, அனைந்திந்திய மாதர் சங்கம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட அமைப்புகள் நீதி வேண்டி களத்தில் உள்ளனர்.

இன்று நேரடியாக களத்திற்கு சென்றிருந்தேன். அமுதாவிடம் வாக்குமூலம் பெற்று தலைமைச் செயலர், காவல்துறை இயக்குனர் உள்ளிட்ட 9 அரசு நிறுவனங்களுக்கு புகார் அனுப்பினோம். மாவட்ட ஆட்சியரையும் நேரடியாக சந்தித்து புகார் கொடுக்கப்பட்டது.

வர்சினிபிரியாவின் குடும்பதினருக்கு ரூ.25 இலட்சம் நிவாரணமும் அரசு வேலை, குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது. சிறப்பு அரசு குற்றவழக்கறிஞர் குழுவினை ஏற்படுத்த வேண்டும். கோவை மண்டலத்தை ஆணவக் கொலைகள் நடைபெறும் மண்டலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினோம். கோவையை சேர்ந்த இயக்கத் தோழர்கள் நீதிக்காக வீரியமாக போராடி வருகின்றனர். அந்த போராட்டமும் உணர்வும் நம்பிக்கையை தருகிறது. அண்ணன் கோவை ராமகிருஷ்ணன், தோழர்கள் சிவஞானம், சுசி கலையரசன், சித்தார்த், இளவேனில் உள்ளிட்ட தோழர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேச சொன்னதனால் ஆட்சியரிடமும் பல்வேறு ஊடகத்தினரிடமும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினேன்.

நீதியை விட நீதிக்கான நம்பிக்கை முக்கியம். அந்த நம்பிக்கை அமுதாவிடம் ஆழமாக வேரூன்றி இருப்பது ஆறுதல். தொடர்ந்து பயணம் செய்வோம்.

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 185 ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளதாகவும் அவற்றில் மூன்று கொலைகளுக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளதாகவும் எவிடென்ட்ஸ்’ கதிர் கூறியுள்ளார்.  தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் சாதி ஆணவப் படுகொலைகள் மற்றும் சாதியக் குற்றங்கள் அதிகம் நடப்பதால் அதை ஆணவக் குற்றங்கள் அதிகம் நடக்கும் மண்டலமாக அறிவித்து, அதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு அக்குழுவால் சாதிய ஒடுக்குமுறைகள் சார்ந்த குற்றங்களை கண்காணித்து, அவை தொடர்பான விழிப்புணர்வு, சட்ட நடவடிக்கைகள் ஆகியன கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here