இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

ஏற்கனவே விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றுத் தொடரைச் சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களம் கண்டது.

டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து, களமிறங்கிய ஷிகர் தவானும், லோகேஷ் ராகுலும் சேர்ந்து பவர் பிளே-யான முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் சேர்த்தனர்.

கேஎல் ராகுல் 26 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 47 ரன்கள் சேர்த்து அவுட்டானார். தவான் 24 பந்தில் 14 ரன்கள் சேர்த்து வெளியேறினார். ரிஷப் பந்த் 1 ரன் எடுத்து வெளியேறினார்.

பின்னர் விராட் கோலியுடன் தோனி ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து 4 வது விக்கெட்டுக்கு 50 பந்தில் 100 ரன்களைச் சேர்த்தனர். இந்நிலையில் தோனி 40 ரன்கள் ( 23 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து வெளியேறினார்.

இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது. விராட் கோலி 72 ரன்கள்( 38 பந்தில் 2 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

191 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

ஸ்டோனிஸ் 7 ரன்னிலும், ஆரோன் பின்ச் 8 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர். அடுத்து இறங்கிய அனுபவ வீரர் மேக்ஸ்வெல் ஷார்ட்டுடன் இணைந்தார். இருவரும் அதிரடியாக ஆடி நாலா பக்கமும் பவுண்டரி, சிக்சர் என விளாசினர்.

இதனால், முதல் 10 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்தது. 73 ரன்கள் சேர்த்த நிலையில் ஷாக் 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆனால் கடைசிவரை ஆட்டமிழக்காமல் மேக்ஸ்வெல் கிடைத்த பந்துகளை பவுண்டரி, சிக்சர் எனச் சிதறடித்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். சிறப்பாக ஆடிய மேக்ஸ்வெல் சதமடித்து அசத்தினார். அவர் 113 ரன் ( 55 பந்தில் 7 பவுண்டரி, 9 சிக்சர்) எடுத்தார்.

இறுதியில், ஆஸ்திரேலியா அணி 19.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதையடுத்து, டி20 தொடரை ஆஸ்திரேலியா 2-0 என கைப்பற்றியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here