அப்துல் அலிம் எலிப்பொறி போன்ற சுரங்கங்களில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்

இந்தியாவில் வடமேற்கு மாநிலமான மேகாலயாவில் டிசம்பர் 13 ஆம் தேதி 15 பேர் எலிப்பொறி சுரங்கம் என்று கூறப்படும் சுரங்கம் ஒன்றில் சிக்கிக் கொண்டனர். அந்தச் சுரங்கத்தில் வேலை பார்ப்பது மிகவும் ஆபத்தானது என்று கருதியதால் அங்கிருந்து சில தினங்களுக்கு முன்பு வேலையில் இருந்து விலகிய சுரங்கத் தொழிலாளியிடம் பிரியங்கா போர்புஜாரி பேசினார்.

அங்கே இருந்திருந்தால் தாமும் கொல்லப்பட்டிருப்போம் என்று அப்துல் அலிம் நம்புகிறார்.

6

இவருடைய ஒன்றுவிட்ட சகோதரர்கள் ஓமர், ஷிராபத் அலி ஆகியோர் மூன்று வாரங்களாக சுரங்கத்தில் சிக்கியுள்ள 15 பேரில் அடங்குவர்.

அவர்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம் அப்துலுக்கு வாய் குளறுகிறது. அவர்கள் இந்நேரம் இறந்திருப்பார்கள் என்று அவர் சொல்கிறார்.

நிலக்கரியை வெளியே எடுத்து வருவதற்கான வாயில் குறுகலாக இருப்பதால் எலிப்பொறி சுரங்கம் என்று இதனைக் குறிப்பிடுகிறார்கள். வெள்ளம் காரணமாக அதனுடைய நுழைவாயில் அடைபட்டுவிட்டது.

அவர்களை மீட்பதற்கான முயற்சிகளில் சிறிதளவு தான் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது – இதில் அப்துலுக்கு ஆச்சர்யம் ஏதும் கிடையாது.

“நாங்கள் உள்ளே போய்விட்டால், வெளியில் இருந்து வெளிச்சம் உள்ளே வருவது மிக அபூர்வம்” என்று அவர் நினைவுகூர்கிறார்.

“நான் முன்பு வேலைபார்த்த சுரங்கங்கள் 30 அடி (9 மீட்டர்) அளவுக்கு மட்டுமே ஆழமாக இருந்தன. ஆனால் இது இன்னும் அதிக ஆபத்தானது. இது 400 அடி ஆழமானது.”

சுரங்கத்தின் ஆழத்தைப் பார்த்து பயந்துவிட்டதாக அப்துல் கூறுகிறார்.

அப்துலுக்கு 25 வயதாகிறது. தனது மனைவி அனுஜ்ராவுடன் மூங்கில் மற்றும் சேறால் கட்டப்பட்ட வீட்டில் மேகாலயாவின் மேற்கு எல்லையில் மகுர்மரி என்ற கிராமத்தில் வசிக்கிறார்.

மலைகள் நிறைந்த இந்த மாநிலத்தில் நிலக்கரி படிமங்கள் அதிகமாக உள்ளன. முதலில் குழிகள் தோண்டி, உருவாக்கப்படும் குறுகலான வாயில்கள் வழியாக நிலக்கரி வெட்டி வெளியே கொண்டு வரப்படுகிறது.

சுரங்கங்கள் குறுகலாக இருப்பதால், மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள பல துறையினரும் உள்ளே நுழைய முடியாமல் போராடி வருகின்றனர். ஏராளமான முயற்சிகளுக்குப் பிறகு, கடற்படையின் நீர்மூழ்கி வீரர்கள் திங்கள்கிழமை சுரங்கத்தின் அடிப்பகுதிக்குச் சென்றனர். ஆனால் மனிதர்கள் யாரையும் தங்களால் காண முடியவில்லை என்று கூறி அவர்கள் திரும்பி வந்துவிட்டனர். சுரங்கத்தில் இருந்து தண்ணீரை முழுமையாக வெளியேற்றினால் மட்டுமே மீட்புப் பணிக்கு முயற்சிக்க முடியும் என்று அவர்கள் கூறிவிட்டனர்.

எலிப்பொறி சுரங்கங்களுக்கு 2014-ல் தடை விதிக்கப்பட்டுவிட்டது. ஆனால் மாநிலத்தில் இன்னும் பரவலாக இவை நீடிக்கின்றன. குறிப்பாக, தற்போது தொழிலாளர்கள் சிக்கியுள்ள கிழக்கு ஜெயின்டியா மலைப் பகுதியில் இவை இன்னும் பயன்பாட்டில் உள்ளன.

இந்தச் சுரங்கங்களை தனியார் நடத்துகின்றனர். இதுபோல எத்தனை சுரங்கங்கள் இருக்கின்றன என்பது சரியாகத் தெரியவில்லை.

உலக அளவில் நிலக்கரி உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் உள்ளது இந்தியா. நாட்டின் எரிசக்தி தேவையில் 60% இதன் மூலம் கிடைக்கிறது. ஆனால் இந்தத் தொழில் மோசமாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

டிசம்பர் மாத ஆரம்பத்தில், தனது ஒன்றுவிட்ட சகோதரர்களை காரில் அழைத்துக் கொண்டு 16 மணி நேரம் பயணம் செய்து, இந்தச் சுரங்கம் அமைந்துள்ள க்சான் பகுதியை அடைந்திருக்கிறார் அப்துல்.

சட்டவிரோதமானது என்றாலும், எலிப்பொறி சுரங்கங்கள் பரவலாகக் காணப்படுகின்றன

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்துல் சுரங்கங்களில் வேலை பார்க்கத் தொடங்கி இருக்கிறார். அதற்கு முன்பு அவர் மேஸ்திரியாக வேலை பார்த்திருக்கிறார். அதில் ரூ.400 சம்பாதித்திருக்கிறார். ஆனால் எலிப்பொறி சுரங்கங்களில் வேலை பார்த்தால் அவருக்கு ஒவ்வொரு மாதமும் 30,000 ரூபாய் தரப்பட்டிருக்கிறது. ஆபத்தான வேலை சூழல்களைக் கருத்தில் கொண்டு இந்தத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது.

8 – 10 பேர் இரும்பு கண்டெய்னரில் ஏறிக் கொள்ள, கிரேன் மூலம் அதை சுரங்கத்தின் பள்ளத்தில் இறக்குவார்கள் என்று அப்துல் தெரிவிக்கிறார். “நாங்கள் தரையை அடைந்ததும், வெவ்வேறு திசைகளில் சுரங்கங்கள் பிரிந்து செல்லும். நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு பக்கமாக தவழ்ந்து செல்வோம். 30 அடி தூரம் வரை செல்வோம்” என்று அவர் கூறுகிறார்.

இதைச் சொன்னபோது, அவர் படுக்கையில் இருந்து எழுந்து, உட்கார்ந்து கொண்டு வளைந்து அதை விவரித்தார். “சுரங்கம் இரண்டு அடிக்கு இவ்வளவு உயரம் தான் இருக்கும்” என்று தன் கையை உயர்த்திக் காட்டினார்.

“எங்கே தோண்ட வேண்டும் என்று எங்களுடைய சர்தார் (தலைவர்) சொல்வார். பக்கவாட்டில் படுத்துக் கொண்டு மண்கொத்திகளைக் கொண்டு நிலக்கரியை உடைத்து எடுப்போம். என்னுடைய தள்ளுவண்டியை என் கால்களுக்கு இடையில் வைத்திருப்பேன். நான் வெட்டும் நிலக்கரி அதில் விழுவதற்கு வசதியாக அப்படி வைத்திருப்பேன். அதை இழுத்து வந்து, சேகரிப்புக்கான மத்தியப் பகுதிக்குக் கொண்டு வருவேன்.”

காதுக்கு அருகே கட்டியிருக்கும் சிறிய டார்ச் வெளிச்சம் மட்டும் தான் உள்ளே இருக்கும்.

எவ்வளவு தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள், எவ்வளவு இடைவெளியில் தள்ளுவண்டியில் நிலக்கரி கொண்டு வருகிறார்கள் என்பதை ஒரு மேற்பார்வையாளர் கவனித்துக் கொண்டிருப்பார் என்றும், அதுதான் தங்களுக்கான கூலியை நிர்ணயிக்கும் என்றும் அப்துல் கூறுகிறார்.

ஓய்வு நேரத்துக்கு முன் நான்கு மணி நேரம் அவர் இடைவிடாமல் வேலை பார்ப்பார். பெரும்பாலும் அதிகாலை 5 மணிக்குத் தொடங்கி மதியம் வரையில் அவர் வேலை பார்ப்பார்.

குளிர்காலங்களில் வெளியில் உள்ளதைவிட சுரங்கத்தின் உள்ளே இதமாக இருப்பதால் அதை விரும்புவதாக அவர் கூறினார்.

தவழ்ந்து செல்வதாலும், நீண்ட நேரம் பக்கவாட்டில் படுத்துக் கொண்டு வேலை பார்ப்பதாலும் உடல்நிலை பாதிக்கவில்லையா என்று நான் கேட்டபோது, அவருடைய மனைவி அனுஜ்ரா பதில் அளித்தார்.

“அவருடைய பின்பக்கத்தில் தோல் கடினமாகி, லெதர் போல கடினமாகிவிட்டது” என்று அவர் சொன்னார்.

“என்னுடைய வலதுபுறம் மட்டும்தான். ஏனென்றால் நான் அந்தப் பக்கமாகத்தான் படுத்துக் கொண்டு வேலை பார்ப்பேன்” என்று அப்துல் கூறினார்.

ஒரு எலிப்பொறி சுரங்கத்தில் சாதாரணமாக 200 பேர் வரை ஷிப்டுகளில் வேலை பார்ப்பார்கள்.

ஆனால் க்சான் சுரங்கத்தில் கடந்த டிசம்பரில் தொழிலாளர் பற்றாக்குறை இருந்தது என்று அப்துல் கூறினார். பலரும் அருகில் உள்ள அசாம் மாநிலத்தவர்கள் என்பதால் பற்றாக்குறை இருந்தது என்கிறார்.

மேகாலயாவில் சட்டவிரோத சுரங்கங்களில் வேலை பார்க்கும் பலரும், இடம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள். அதிக வருமானம் ஈட்டலாம் என்பதற்காக வந்தவர்கள். அசாமில் டிசம்பர் முதல் வாரத்தில் வாக்களிப்பதற்காக பல தொழிலாளர்கள் சென்றுவிட்டனர். வேலையில் இருந்தவர்கள் அதிக ஷிப்டுகளில் வேலை பார்த்தனர்.

இதற்கிடையில், சுரங்கத்தில் ஒரு வாரம் இருந்த அப்துல் வெளியேறுவதற்கு வழி தேடினார். ஏற்கெனவே வேலை பார்த்த எலிப்பொறி சுரங்கங்களில் இருந்ததைப் போல தான் இங்கும் வேலை இருந்தது.

ஆனால் இதனுடைய அதிக ஆழம் அவருக்கு அச்சத்தைத் தந்திருக்கிறது. அதுதான் அவரை அங்கிருந்து வெளியேறச் செய்துள்ளது.

தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர்களையும் அந்த வேலையை விட்டுவிடுமாறு கூறியதாகவும், ஆனால் அவர்கள் அவ்வாறு விடவில்லை என்றும் கூறிவிட்டனர். எவ்வளவு வருமானம் கிடைக்கிறது என்பதை சொல்லி அவர்கள் மறுத்துவிட்டனர்.

“எனவே, ஒரு நாள் பகலில், உணவுக்குப் பிறகு எனக்கு ஒரு பெல்ட் வாங்க வேண்டும் என்று அவர்களிடம் நான் சொன்னேன். அருகில் உள்ள மார்க்கெட்டுக்கு நான் சென்று பெல்ட் வாங்கிக் கொண்டு, கண்ணில் பட்ட பேருந்தில் ஏறிக் கொண்டு ஊர் வந்து சேர்ந்தேன்” என்று கூறியபடி, சட்டையைத் தூக்கி தனது பிரவுன் நிற பெல்ட்டை காட்டினார்.

உண்மையிலேயே தனக்கு பெல்ட் தேவையாக இருந்தது என்று சொன்னார்.

இந்த விபத்து பற்றி குறிப்பிடும்போது, அருகில் உள்ள அருவியில் இருந்து, பக்கத்து சுரங்கத்தில் தண்ணீர் புகுந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று அப்துல் கூறினார். “நான் வேலை பார்த்த சுரங்கத்தின் துளை அருகில் உள்ள இன்னொரு சுரங்கத்தின் துளையுடன் சேரும் வகையில் இருந்தது. அநேகமாக அந்த வழியாக தண்ணீர் புகுந்திருக்கும்” என்று அவர் சொல்கிறார். “அந்தப் பக்கமாகத் தோண்ட வேண்டாம் என்று மேற்பார்வையாளர் எங்களுக்கு எச்சரிக்கை கொடுத்தார். ஆனால் அவர் சொன்னதை சிலர் கேட்கவில்லை.”

அதிகாரிகள் இதைக் குறை சொல்கிறார்கள். அருகில் உள்ள ஆற்றின் நீர் தான் புகுந்திருக்கும் என்று கூறுகிறார்கள்.

தண்ணீர் உள்ளே வரும் சப்தத்தை சுரங்கத் தொழிலாளர்கள் கேட்கும்போது, தப்பிக்க அவகாசம் இல்லாமல் போய்விடும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

சுரங்கத்தில் உள்ளவர்களைக் காப்பாற்ற முடியும் என்பது சாத்தியம் என நினைக்கவில்லை என்றும் அவர் சொல்கிறார்.

“தண்ணீர் முழுவதையும் வெளியேற்ற வேண்டுமானால், ஒரே நேரத்தில் அருகில் உள்ள 15 சுரங்கங்களில் இருந்து தண்ணீரை பம்ப் செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார்.

தண்ணீரை வெளியேற்றும் பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். ஆனால் தண்ணீரை வெளியேற்றுவதற்கு நீண்ட அவகாசம் தேவைப்படும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

மகுர்மரியில் சோகத்தின் நிழல் படிவதற்குக் காரணமான விபத்து நடப்பதற்கு மூன்று நாள்கள் முன்பு அப்துல் அங்கிருந்து வந்துவிட்டார். அவருடைய கிராமத்தைச் சேர்ந்த ஏழு பேர் அதில் சிக்கியுள்ளனர். தன்னுடைய அடையாள அட்டையுடன் மட்டும் அங்கிருந்து அப்துல் வந்துள்ளார். தனது துணிகளையும் ஏழு நாள்களுக்கான கூலியையும் விட்டுவிட்டு வந்துள்ளார்.

“நான் விட்டு வந்த பணத்தைப் பற்றி எனக்குக் கவலையில்லை. என் உயிரை நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது.”

Courtesy : BBC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here