மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்திற்கு அனுமதி அளித்ததற்கு கண்டனம் தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அந்த தீர்மானத்தில், 5.12.2014 மற்றும் 27.3.2015 ஆகிய நாட்களில் கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டக் கூடாது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவற்றைக் கருத்தில் கொள்ளாமலும், கீழ்படுகை மாநிலங்களின் முன் அனுமதி பெறாமல் கர்நாடக அரசு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி மேகதாதுவில்
அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர்வளக் குழுமம் அனுமதி வழங்கியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நீர்வளக் குழுமம் வழங்கிய அனுமதியை திரும்பப் பெற அக்குழுமத்திற்கு மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று தீர்மானத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஆகியவற்றை மீறும் வகையில் கர்நாடகா அரசோ அல்லது அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களோ கர்நாடகாவில் உள்ள காவேரி படுகையிலும் மேகதாது அல்லது எந்த ஒரு இடத்திலும் தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி எவ்வித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடவும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here