மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் இதனை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும் என்றும் கூறியுள்ள தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துறைமுருகன், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் சூழ்ச்சி உள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

வேலூர்மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள சேனூரில் பகுதி நேர நியாயவிலைக்கடை திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.  இதில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பகுதி நேர கடையை திறந்து விவசாயிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன்,  மேகதாது அணை விவகாரம் குறித்து காவிரி மேலாண்மை  ஆணையத்தின் கூட்டம் வரும் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மேகதாது அணை கட்டுவது குறித்து விவாதிக்க ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என ஆணையம் அறிவித்துள்ளது.  இது தவறானது, ஏற்கனவே பலமுறை காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்க அதிகாரமில்லை என  ஆணையம் கூறியது. ஆனால் தற்போது தங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறுவது கண்டிக்கதக்கது.

இதனை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும். மேலும் மத்திய அரசின் ஆதரவில்லாமல் இவர்கள் பேசமாட்டார்கள். இதில் மத்திய அரசின் சூழ்ச்சி உள்ளது.  மேகதாது அணை விவகாரம் குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதித்தால் உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,  ஆன் லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்பது மாறுபட்ட கருத்தல்ல. அதனை தடை செய்ய வேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடு தான்.  தமிழகம் முழுவதும் உள்ள நதிகள் ஆறுகள் ஏரிகள் நீர்நிலைகள் போன்றவற்றில் நீர் வளத்துறை மூலம் கணக்கீடு செய்கிறோம். நீர்நிலைகள் குறித்து முழுமையான கணக்கீடு வந்தால் அது நமக்கு பயனுள்ளதாக அமையும் என்று கூறினார் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here