மேகதாது அணை விவகாரம் : கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு

0
150
File

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்தின் கோரிக்கையை மத்திய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழு நிராகரித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் தமிழகம்-கர்நாடகம் இடையே சுமுகத் தீர்வு எட்டப்பட வேண்டும் என்றும் அந்தக் குழு கருத்துத் தெரிவித்துள்ளது. அதன்பிறகே அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதி போன்றவற்றை ஆய்வு செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவின் 25-ஆவது கூட்டம், கடந்த ஜூலை 19-ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்கள் சார்பில் சுற்றுச்சூழல் அனுமதி கோரி தாக்கல் செய்த அணை கட்டும் திட்டங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 

அதில், காவிரி நதிநீர் ஆணையமானது மேகதாது பகுதியில், காவிரியின் குறுக்கே அணையைக் கட்ட சுற்றுச்சூழல் அனுமதி தர வேண்டுமென கர்நாடக மாநில அரசு கோரிக்கை விடுத்து திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தது. 

இது தொடர்பாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழு கடந்த மாதம் 19-ஆம் தேதி ஆய்வு செய்தது. குழுவின் தலைவர் எஸ்.கே.ஜெயின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் மத்திய மின்சார ஆணையத்தின் பிரதிநிதி ஷர்வண்குமார், இந்திய வனவிலங்குகள் கழகத்தின் சார்பில் ஜெ.ஏ.ஜான்சன், மத்திய நீர்வள ஆணையத்தின் சார்பில் என்.என்.ராய் உள்பட 11 பேர் மாநில அரசுகள் சமர்ப்பித்த திட்ட அறிக்கைகளை ஆய்வு செய்தனர். அதில், கர்நாடகம் தாக்கல் செய்த திட்ட அறிக்கையும் விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட இறுதி முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளன. 

கர்நாடகத்தின் திட்ட அறிக்கை குறித்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழு தெரிவித்த கருத்துகள்:

மேகதாது  பகுதியில் அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை காவிரி நதிநீர் ஆணையமானது மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த அணையைக் கட்டுவதற்கான திட்ட அறிக்கை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவின் விவாதத்துக்கு வைக்கப்பட்டது.  சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவின்  கூட்டத்தில் கர்நாடகம் தாக்கல் செய்த திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

கூடுதல் தகவல்கள் மற்றும் சில விளக்கங்கள் கோரி திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் தர சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழு மறுப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, மாற்று இடங்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. எனவே, விரிவாக ஆய்வு செய்து சிறந்த தகுதியான மாற்று இடத்தை முடிவு செய்து அளிக்க வேண்டும்.

இந்தத் திட்டத்துக்காக வனப் பகுதிகள் மற்றும் வன விலங்குகள் வாழும் பகுதிகள் அதிகமாக எடுக்கப்படுகின்றன. தனிநபர்களின் நிலங்களை கையகப்படுத்தும்போது 2013-ஆம் ஆண்டுக்கான நில எடுப்புச் சட்டத்தின் கீழ் தொகையை அளிக்க வேண்டும்.

மேலும் மேகதாது பகுதியில் அணை கட்டுவது தொடர்பாக பல்வேறு கடிதங்களை தமிழக அரசு அனுப்பியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே சுமுகமான தீர்வு எட்டப்பட வேண்டும். எனவே, அனுமதி அளிப்பது குறித்து மறுஆய்வு செய்ய வேண்டியுள்ளது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்குக் கிடைத்த வெற்றி: மேகதாது பகுதியில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.மேகதாது பகுதியில் அணை கட்ட அனுமதி தரவே கூடாது என்று சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், பிரதமர் நரேந்திர மோடி என பல்வேறு தரப்பினருக்கும்  தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதங்கள் மூலமாக தொடர்ந்து வலியுறுத்தினார். 

இந்த வலியுறுத்தல்களை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவும் தனது ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வனப் பகுதியில் அணை

மேகதாது அணையை வனவிலங்குகள் வாழும் 4,795 ஹெக்டேர் வனப் பகுதிகளில் கட்ட கர்நாடக அரசு முடிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் மிகப்பெரிய பாதிப்புகளை தமிழகம் உள்ளிட்ட  அண்டை மாநிலங்கள் சந்திக்க நேரிடும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வனம் மற்றும் வனவிலங்குகள் வாழும் பகுதியில் மேகதாதுவில் கட்டப்பட உள்ள அணையில் 67.16 டி.எம்.சி., தண்ணீர் தேக்க திட்ட அறிக்கை தயாரித்துள்ளது. எரிசக்தி உற்பத்தி, சேமிப்பு, வெள்ளத் தடுப்பு போன்ற நடவடிக்கைகளுக்காக கட்டப்பட உள்ளது. இந்த அணைக்காக மூன்று பிரிவுகளில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. அணையைக் கட்டுவதற்காக காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில்  2,925.5 ஹெக்டேர் நிலமும், வனப் பகுதியில் 1,869.5 ஹெக்டேர் நிலமும், வருவாய்த் துறையிடம் 201.0 ஹெக்டேர் நிலமும் என மொத்தம் 4,996 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து, மின்சார சேமிப்பு மையம், அணுகு சாலை ஏற்படுத்துவது போன்ற பணிகள் 256.4 ஹெக்டேர் பரப்பில் மேற்கொள்ளப்பட உள்ளன.மேகதாது  பகுதியில் அணை கட்டுவதற்காக மட்டும் மொத்தமாக 5,252.4 ஹெக்டேர் நிலங்களை கர்நாடக அரசு கையகப்படுத்த உள்ளது.