கர்நாடக மாநிலம் மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளித்ததற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் இன்று மனுத் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் அருகே மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணைகட்டித் தண்ணீரைக் குடிநீருக்காக எடுக்கவும், நானூறு மெகாவாட் நீர் மின்சாரம் தயாரிக்கவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்குத் தண்ணீர் கிடைக்காது என்பதால் இந்தத் திட்டத்துக்குத் தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. ஆனாலும் அணை கட்டும் இடம், செலவு, அணையின் அளவுகள், நிலவியல், நீரியல் கூறுகள் ஆகியவை அடங்கிய வரைவு அறிக்கையைக் கர்நாடக அரசு மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்பியிருந்தது.

இந்த வரைவு அறிக்கைக்கு, மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக அரசு, காவிரியின் குறுக்கே எந்த அணையும் கட்ட தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டியுள்ளது.

காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான இந்த ஒப்புதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில், இன்று மனுத் தாக்கல் செய்யப்பட உள்ளது. 

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்