மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் அணை கட்டுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுக தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணை கட்டுவதற்கான பணிகளில் கர்நாடக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கான ஆரம்பகட்ட ஆய்வு நடத்த கர்நாடக அரசின் சார்பில் மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. அணை கட்ட தமிழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோது, ஆய்வுக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கிறோம், அணைக்கு அல்ல என்று மத்திய அரசு பதில் அளித்தது. இந்த நிலையில் மேகதாது அணை தொடர்பான செயல் திட்ட வரைவு அறிக்கையை மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்திருந்தது.

அணை அமையும் இடம், அணைக்கான திட்ட மதிப்பீடு, அணையின் பலன்கள் உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கிய இந்த வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வளத்துறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே அணைகட்டுவதாக கர்நாடக தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தற்போது வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் பெற்றுவிட்டதால், இறுதி அறிக்கை தயாரிக்கும் பணியில் கர்நாடக அரசு ஈடுபடும் எனத் தெரிகிறது. அதற்கும் மத்திய அரசின் ஒப்புதலை அவர்கள் பெற்றுவிட்டால், மேகதாதுவில் அணை அமைவதை தடுக்க இயலாது.

இந்நிலையில் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வரைவு அறிக்கைக்கு நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலை ரத்து செய்யவும் தமிழக அரசு கோர உள்ளது.

மேகதாதுவில் அணை கட்டினால், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு குறைந்துவிடும் என, தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேகதாதுவில் அணை… உச்சநீதிமன்றத்தை அணுக தமிழக அரசு முடிவு
➡️: https://goo.gl/37jfG7
#Mekedaatu, #Karnataka, #tamilnadu, #NewsIppodhu #Supreme_Court

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here