மெர்சல் அதிக கட்டணம் – கோர்ட்டில் வழக்கு

0
308
Vijay

புதிய படங்கள் வெளியாகும் போது திரையரங்குகள் பல மடங்கு டிக்கெட் கட்டணத்தை உயர்த்துகின்றன. இது குறித்து பலர் வழக்குத் தொடுத்தும் பலன் இல்லை. நீதிமன்றங்கள் இந்த ஊழலுக்கு அடிப்படையாக இருக்கும் அதிகாரிகள் சொல்வதையே நம்புகின்றன. அப்படியே நீதிமன்றம் அதிக டிக்கெட் கட்டணத்துக்கு எதிராக தீர்ப்பளித்தாலும், அதை யார் நடைமுறைப்படுத்துவது?

சென்னையைச் சேர்ந்த தேவராஜன் இந்த விஷயத்தில் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறார். திருவிழா காலங்களில் வெளியாகும் படங்களுக்கு டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகம் வசூலிக்கப்படும். பொதுவாக அடிபட்ட பிறகு நீதிமன்றம் செல்வது வழக்கம். தேவராஜன் இந்தமுறை உஷாராக தீபாவளிக்கு முன்பே நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். அதிக டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் 41 திரையரங்குகளை கண்டறிந்து அவை அதிக கட்டணம் வசூலிக்காமல் கண்காணிக்க வேண்டும், மீறி அதிக கட்டணம் வசூலித்தால் அந்த திரையரங்குகளுக்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று (வியாழகிழமை) விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு பொதுநல நோக்கத்துடன் இருப்பதால் இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற நீதிபதி உத்தரவிட்டார். எனவே இந்த வழக்கு இன்று (வெள்ளிகிழமை) தலைமை நீதிபதியின் அமர்வு முன் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேவராஜன் குறிப்பிட்டுள்ள 41 திரையரங்குகளில் 90 சதவீதம் மெர்சல் படத்தை வெளியிட இருப்பவை. அதிக பொருட்செலவில் தயாராகியிருக்கும் மெர்சலை மிக அதிக விலைக்கு திரையரங்குகள் வாங்கியுள்ளன. இந்த அதிகபடி கட்டணத்தை அவர்கள் டிக்கெட் கட்டணத்தில் வைத்து பார்வையாளர்களின் தலையில் கட்டவே பார்ப்பார்கள். இந்த வழக்கு இந்த கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், இந்தமுறையாவது நீதிமன்றம் கறாரான தீர்ப்பை தர வேண்டும், அதுவே சாமானியர்களின் எதிர்பார்ப்பு.

இதையும் படியுங்கள்: சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

இதையும் படியுங்கள்: அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகள் வரன்முறைப்படுத்தும் திட்டம் அறிவிப்பு; முழு விவரம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்