சென்னை மெரினாவில் கலைஞர் உடல் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் உடல் அடக்கம் செய்ய மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே திமுக, கருணாநிதியின் குடும்பத்தினர் சார்பில் இடம் ஒதுக்கத் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, மெரினாவில் நினைவிடம் அமைப்பது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அங்கு நிலம் ஒதுக்க முடியாது.

அதற்குப் பதிலாக, சர்தார் வல்லபாய் படேல் பிரதான சாலை முகப்பில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு எதிரே, காந்தி மண்டபம், ராஜாஜி மணிமண்டபம் மற்றும் காமராஜர் நினைவகத்திற்கு அருகே, அவரை நல்லடக்கம் செய்வதற்கு ஏதுவாக இரண்டு ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்யத் தயாராக இருப்பதாகத் தமிழக முதல்வர் தெரிவித்தார்” என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில், மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே திமுக கருணாநிதியின் உடல்நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்க உத்தரவிடக் கோரி நேற்று இரவு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு திமுக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் குலுவாடி ரமேஷ் உள்ளிட்டோர் முன் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை நேற்று இரவு தற்காலிக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் விசாரித்தார். மீண்டும் இந்த வழக்கு இன்று காலை விசாரிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி ரமேஷ், கருணாநிதி உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தார்.

முன்னதாக மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கு தடை கோரும் வழக்குகள் இருப்பதால், சட்ட சிக்கலை முன்வைத்து இடம் தர அரசு மறுத்தது. இன்று காலை ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த 5 வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்