மெய்நிகர் என்னும் மாயப்பரப்பு

'Staying connected virtually' can mean a physically disconnected condition

0
635
மெய்நிகர் ஹெட்செட்டுடன் இரவில் ஒரு பெண்; பின்னணியில் பெருநகரத்து விளக்குகள்.

Virtual Reality (மெய் நிகர்) என்ற சொல்தான், இந்தக் காலத்தின் மிகப்பெரிய Oxymoron (முரண்தொடர்) ஆக இருக்கும் என நினைக்கிறேன். மெய்நிகரின் மாயச் சுவருக்குள் அல்லது மாயவலைக்குள் நாம், நாமாகவே சென்று நம்மை சிக்கவைத்துக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது.

நான் இப்படி நினைப்பது, கொஞ்சம் அதிகப்படியானதாகவே இருக்கலாம் அல்லது நான் இப்படி நினைப்பது தவறாக கூட இருக்கலாம். தவறாக இருக்க வேண்டும் என்ற ஓர் ஆசை என்னிடம் நிச்சயம் இல்லாமல் இல்லை; ஆனால் நான் இப்படி நினைப்பதற்கான காரணங்கள் நம்மைச் சுற்றி ஏராளமாக பரவிக் கிடப்பது, நிச்சயம் இந்தக் காலத்தின் மிகப்பெரிய வேதனை.

அவனுடைய பெயர் வேண்டாம் அல்லது சொன்னாலும் உங்களுக்குத் தெரியப் போவது இல்லை. ஏனென்றால் அவன் பெயர் என நான் நினைத்திருந்தது அவனது முகநூல் ஐடியைத் தான், அது அவனது பெயர் இல்லை என்பது அவனை முதல் முறை சந்திக்கும்போதுதான் தெரிந்தது. அது ஒரு தற்செயலான சந்திப்பு. எவ்வளவு தற்செயலானது என்றால் அந்தச் சந்திப்பு நிகழாமலேயே போயிருந்திருக்கலாமோ என்று நான் இப்போது நினைக்கும் அளவுக்கு தற்செயலானது. ஆனால் தற்செயல் நிகழ்வுகளில் நமது பங்கு என்ன இருக்க முடியும்? நாம் எப்படி அதைத் தவிர்த்திருக்க முடியும்?

ஒரு புத்தகக் கடையில்தான் அவனைப் பார்த்தேன். எப்போதும் போல கூட்டங்கள் ஏதுமற்ற அமைதியான புத்தகக்கடை அது; அவனை முதல் முறை பார்க்கும் போது, அவனது முகம் நன்கு அறிமுகமான முகம் போலிருந்தது. ஆனால் என்னால் உடனடியாக யாரென்று கணிக்க முடியவில்லை. அவன் அருகே போய் நின்றுகொண்டு, புத்தகம் எடுப்பதுபோல் அவனுக்குத் தெரியாமல் அவனது முகத்தை இன்னும் நெருக்கமாக பார்த்தேன். நான் பார்ப்பதை அவன் தெரிந்து கொண்டான், மெலிதாக என்னைப் பார்த்து முறைத்தான்.

எனக்கு கொஞ்சம் அவமானமாகப் போய்விட்டது. வேறு வழியில்லாமல் அவனைப் பார்த்து “உங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது” என்றேன்.

அவனுக்கும் ஆச்சரியம். அவனது பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டான். எனக்கு அது பரிச்சயம் இல்லாத பெயர். அந்தப் பெயருள்ள ஒருவருடன் பழகியதாய் எனக்கு எந்த நினைவும் இல்லை.

திரும்பவும் முழித்தேன்.

“நான், சிவபாலன்” என்றேன்.

அவனுக்கு முகம் பளிச்சென்று மாறியது “சிவபாலன் இளங்கோவன்தானே” என்றான்.

அவன் கேட்ட அந்த நொடியிலே அவன் யாரென்று தெரிந்து விட்டது. அவனது முகநூல் ஐடியைக் குறிப்பிட்டு “நீங்கள்தானே” என்றேன்.

சிரித்தான்.

அவன் ஒரு பிரபல முகநூல் பதிவன். முகநூலில் அவனுக்கு ஏராளமான நண்பர்கள், பின் தொடர்பாளர்கள் இருக்கிறார்கள். மிகுந்த எழுத்துத் திறமையும், சினிமா ரசனையும், நகையுணர்வும், முற்போக்குப் பார்வையும் கொண்டவன். அவனது ஒவ்வொரு நிலைத்தகவலிலும் அவனது இந்தக் குணங்கள் நிறைந்திருக்கும், அது ஏராளமான விருப்பங்களை அந்தப் பதிவிற்கு கொண்டு வந்து சேர்க்கும்.

எனக்கு, அவனது பதிவுகளைப் பார்க்கும்போது கொஞ்சம் பொறாமையாக கூட இருக்கும், நம்மால் இப்படி ரகளையாக எழுத முடியவில்லையென்று. அவனும் ஒரு ரகளையான ஆளாகத்தான் இருக்க வேண்டும் என நினைத்திருந்தேன். அவனைப் பற்றியஅப்படிப்பட்ட ஒரு பிம்பம்தான் என் மனதில் இருந்தது. அதனால் அவனைத் தற்செயலாக பார்த்தபோது மிகுந்த சந்தோஷமாய் இருந்தேன். அவனுடன் ஒரு சுயமி எடுத்து முகநூலில் போட வேண்டும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டேன்.

ஆனால், அவன் ஒரு வெற்றுச் சிரிப்பை மட்டும் என்னைப் பார்த்து உதிர்த்து விட்டு, திரும்பவும் புத்தக அலாமாரியில் தேடுவதில் மும்முரமானான். நான் விடாமல் அவன் அருகில் சென்று, ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக “வீடு இங்கதானா உங்களுக்கு?” என்றேன்.

அது அபத்தமான கேள்வியாகவும் இருந்திருக்கலாம் அல்லது அந்தக் கேள்வியை கேட்க எனக்கு என்ன உரிமை என்றுகூட அவன் நினைத்திருக்கலாம், அதனால் ‘ஆமாம்’ என்பதுபோல மெல்லத் தலையாட்டிவிட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்து சென்றான்.

அவன் அப்படி நடந்து கொள்வது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் எனக்குள் அவனைப் பற்றி நான் கொண்டிருந்த பிம்பம் நிச்சயம் வேறாக இருந்தது, முகநூலில் அவன் பக்கம், பக்கமாக பேசக்கூடியவன். மனிதர்கள் மீது அவ்வளவு கரிசனத்துடன் இருப்பவன், எண்ணிக்கையில்லா நண்பர்களுடன் எப்போதும் இருக்க வேண்டும் என நினைப்பவன்.

ஆனால் நிஜத்தில்?

வலிய வந்து பேசும் ஒருவனைக்கூட மிக சாதாரணமாய் நிராகரிக்கிறான்.

அன்று, அங்கிருந்த சூழலில் அவன் என்னுடன் நிச்சயம் நல்ல உரையாடலை மேற்கொண்டிருக்க முடியும். அவன் பேசும் சினிமாக்களைப் பற்றி, இலக்கியத்தைப் பற்றி, சில புத்தகங்களைப் பற்றி, அரசியல் பற்றி, குறைந்து வரும் சகிப்புத்தன்மையைப்பற்றி என என்ன வேண்டுமானாலும் அவன் என்னுடன் பேசியிருக்க முடியும். ஏனென்றால் இதைப் பற்றியெல்லாம் அவன் தீவிரமாக என்னுடன் முகநூலில் விவாதித்தவன்தான். ஆனால் அவன் அவ்வளவு அமைதியாக என்னை நிராகரித்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

முதல் முறை பார்க்கும் ஒரு நபரிடம், இதையெல்லாம் நான் எதிர்பார்த்தது எதன் அடிப்படையில்? அல்லது என்ன நியாயத்தில்?

ஒரு அசலான மெய்க்கும், மெய் நிகருக்கும் இடையே உள்ள முரண்பாட்டுச் சிக்கல் இதுதான்.

ஒருமுறை பத்தாவது படிக்கும் ஒரு மாணவனோடு உரையாடிக் கொண்டிருந்த போது “உனக்கு நண்பர்கள் இருக்கிறார்களா?” என்றேன்.

“ம், நிறைய” என்றான். அவன் அப்படிச் சொல்லும்போது அவனிடம் ஒரு பெருமிதம் தெரிந்தது.

“எங்க, பள்ளியிலா இல்லை வீட்டருகிலா?” என்றேன்.

“ஃபேஸ்புக்கில்” என்றான்.

அவனை, அவனது பெற்றோர் அழைத்து வந்திருந்தனர், யாருடனும் சரியாக பேசுவது இல்லை, பள்ளியில்கூட பெரும்பாலான நேரம் தனியாகவே இருக்கிறான் என்பதுதான் அவர்களது குறையாக இருந்தது.

ஒரே நேரத்தில் எல்லோருடனும் connected ஆகவும், அதே நேரத்தில் எல்லோரிடம் இருந்தும் disconnected ஆகவும் வாழும் ஒரு முரண்பட்ட வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

மெய்நிகரில், நாம் பார்க்கும் ஒருவருடைய பிம்பம் நிச்சயம் உண்மையானது அல்ல, அது கட்டமைக்கப்பட்டது.

சிக்மண்ட் ஃபிராய்ட் “ஒருவன் தனது ஆழ்மன இச்சையை எந்த அளவுக்குக் கட்டுப்படுத்துகிறான் என்பதுதான் அவனது ஆளுமையை நிர்ணயிக்கும்’ என்கிறார்.

ஆனால், மெய்நிகரில் பெரும்பாலான நேரங்களில் நாம் வெளிப்படுத்துவது எல்லாமே நமது ஆழ்மன இச்சைகள்தான். அதில் நமது ஆளுமை காணாமல் போகிறது அல்லது மறைந்து கொள்கிறது.

ஒரு பரந்த வெளியில், எந்த வித அகக்கட்டுபாடுகளும் அன்றி, நாம் நமது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளைப் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் அது தொடர்பான எந்த ஒரு குற்ற உணர்ச்சியும், நெருடலும் மெய்நிகரில் நமக்கு இல்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் நம்மால் அப்படி இருக்க முடியுமா?

தெரிந்தோ, தெரியாமலோ நாம்,நம்மைப் பற்றிய, நாம் விரும்பும் ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொள்கிறோம், அதை நம்முடைய மெய்நிகரில் பிரதிபலிக்கிறோம். சில நேரங்களில் நம்முடைய விருப்பத்தையும் தாண்டி எது கவனிக்கப்படுகிறதோ, எது நம்மை தனித்துவப்படுத்துகிறதோ அதை மெனக்கெட்டு நாம் உருவாக்கிக் கொள்கிறோம், முடிந்தவரை அந்தப் பிம்பம் சிதைந்து விடாதபடி பார்த்துக் கொள்கிறோம்.

எல்லோராலும் நாம் கவனிக்கப்பட வேண்டும் என்பதுதான் மெய்நிகரில் பிரதானம். ஆனால் நிஜ வாழ்வில், நாம் அதற்கு அத்தனை மெனக்கெடுவதில்லை, ஒரு வேளை நிஜ வாழ்வின் இயலாமைகூட இதற்கு காரணமாக இருக்கலாம்.

நிஜ வாழ்வில், நமது தோல்விகளுக்கும், துயரங்களுக்கும், துரோகங்களுக்கும், வாதைகளுக்கும் நாம் மெய்நிகரில் தீர்வைத் தேடிக்கொண்டிருக்கிறோம். அதன் வழியாக நாம் நம்மைச் சமரசம் செய்து கொள்கிறோம். அப்படிச் செய்யும்போது நாம் மெய்நிகரின் உண்மைத்தன்மையையை மறந்து விடுகிறோம் அல்லது மறுத்து விடுகிறோம்.

ஒரு சிறிய பிரிவு, ஒரு சிறிய தோல்வி, ஒரு சிறிய துரோகம்கூட நம்மை ஒட்டுமொத்தமாய் பலவீனப்படுத்திவிடுவதற்கு இதுதான் காரணம்.

முந்தைய காலங்களைப் போல, எந்த ஒரு சிக்கலான பிரச்சினைகளிலிருந்தும் நம் தலைமுறை மீண்டெழுவதில்லை. நிஜத்தில், ஒவ்வொரு பிரச்சினைகளும் நமக்குச் சில படிப்பினைகளைத் தரும், அவை நிஜ உலகிலிருந்து அசலான அனுபவத்தில் பெறப்பட்ட படிப்பினைகள். அப்படிப் பெறப்பட்ட படிப்பினைகளைக் கொண்டுதான் நாம் வாழ்க்கையை அணுக வேண்டும்.

பிரச்சினைகளைக் களைவதின் மேலிருந்த மெனக்கெடுதல் போய், பிரச்சினைகளே இல்லாத வாழ்க்கைக்காக நாம் தினம் தினம் யாசித்துக் கொண்டிருக்கிறோம்.

மெய்நிகர் என்பது வெறும் நிகரே. அது ஒரு மெய் போல இருந்தாலும் அது மெய் இல்லை என்பதை நாம் உணர்ந்து கொண்டிருக்கும்வரை இந்த மெய்நிகரால் நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அப்படி உணராத பட்சத்தில், மெய்நிகரை, நீங்கள் ஒரு அசலான மெய்யாக பாவிக்கும் தருணத்தில், நீங்கள் இந்த மெய்யான உலகிலிருந்து தனிமைப்படுத்தப்படுவீர்கள், அதன் பிறகு நீங்கள் என்பதும், உங்கள் அடையாளம் என்பதும் ஒரு முகநூல் ஐடியாக சுருங்கிப் போய்விடும். அது நிச்சயம் நல்லது இல்லை. ஏனென்றால் அந்த முகநூல் ஐடி நீங்களே இல்லை.

இதையும் படியுங்கள்: ‘ஹிந்து’வின் கதை

இதையும் படியுங்கள்: வடமாவுக்கும் பறையருக்கும் என்ன சம்பந்தம்?

அன்புச் சொந்தங்களே, கீழேயுள்ள GIVE 5 பொத்தானை அழுத்தி இப்போதுவுக்கு நன்கொடை வழங்குங்கள்; சந்தேகங்களை நிவர்த்தி செய்ய +919445515340ஐ அழையுங்கள்:

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்