மெக்கா மசூதி குண்டுவெடிப்பில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 2007ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதியன்று, ஹைதராபாத்தில் உள்ள மக்கா மஸ்ஜித் மசூதியில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்குத் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த சுமாமி அசீமானந்தா உட்பட ஐந்து பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, 2011ஆம் ஆண்டு அவரைத் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கடந்த 2017ஆம் அசீமானந்தா ஜாமின் பெற்றிருந்தார்.

நீதிபதி ரவீந்தர் ரெட்டி
நீதிபதி ரவீந்தர் ரெட்டி

கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி ரவீந்திர ரெட்டி, இன்று (ஏப்.16) தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாததால் அனைவரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பு வழங்கினார்.

இந்நிலையில், தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி ரவீந்திர ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மிக முக்கியமான வழக்கில், தீர்ப்பு வழங்கிய நாளன்றே நீதிபதி பதவியை ராஜினாமா செய்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இந்த வழக்கை விசாரித்து வந்த தேசிய புலனாய்வு அமைப்பின் பொறுப்பு அதிகாரியான பிரதிபா அம்பேத்கர், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதியும் இன்று (ஏப்.16) தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

இதையும் படியுங்கள்: என்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது இவர்தான் – புகைப்படம் வெளியிட்ட நடிகை