நீதிமன்ற உத்தரவை மீறி, அதிகாரியை பணியிட மாற்றம் செய்த வழக்கில் சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

அதாவது, சிபிஐ அதிகாரி ஏ.கே. ஷர்மாவை பணியிட மாற்றம் செய்த வழக்கில், நாகேஸ்வர ராவ் நேற்று நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்ட நிலையில், இன்று காலை நேரில் ஆஜராகியிருந்தார்.

அப்போது, வழக்கு விசாரணையை முடித்து உத்தரவை பிறப்பித்த உச்ச நீதிமன்றம், நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்ட நாகேஸ்வர ராவ், இன்று ஒரு நாள் முழுவதும் நீதிமன்ற அறையிலேயே அமர்ந்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், நாகேஸ்வர ராவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கில், நாகேஸ்வர ராவுக்கு உச்சநீதிமன்றம் கடந்த 7ஆம் தேதி நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு உச்சநீதிமன்றத்தில் நாகேஸ்வர ராவ் தனது பதிலை பிரமாண பத்திரமாக நேற்று தாக்கல் செய்தார். அதில் அவர், எனது தவறை உணர்ந்து கொண்டேன். இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன். உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீற வேண்டும் என்ற விருப்பமோ, உள்நோக்கமோ எனக்கு கனவில்கூடத் துளியும் கிடையாது எனத் தெரிவித்திருந்தார்.

பீகார் காப்பக விவகாரம் தொடர்பான வழக்கை ஏ.கே. சர்மா விசாரித்து வந்தார். அவரை சிஆர்பிஎஃப் படைப்பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்து நாகேஸ்வர ராவ் உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஏ.கே. சர்மா மனு தொடுத்திருந்தார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம், நாகேஸ்வர ராவுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

இதையடுத்து, இன்று காலை நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நாகேஸ்வர ராவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here