மூன்று மாணவிகள் கொலையா? தற்கொலையா? நீதி விசாரணை வேண்டும்: திமுக தலைவர்

0
266

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவிகள் சரண்யா, மோனிஷா, பிரியங்கா ஆகியோரின் உடல்கள் கிணற்றில் மிதந்துள்ளன. அவர்களுடைய மரணம் கொலையா தற்கொலையா என்பது குறித்து நீதி விசாரணை வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரியுள்ளார்.

இதுகுறித்து அவர் திங்கள் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூன்று மாணவிகளின் கைகள் கட்டப்பட்டும் உடம்பில் காயங்களோடும் இருந்ததாக செய்திகள் வருகின்றன. இவர்கள் இறந்ததை தற்கொலை என்று கூறி மறைக்க முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இவர்களின் பெற்றோரும் மற்றவர்களும் அதை மறுக்கின்றனர்.

கல்லூரி நிர்வாகத்தின் மீது, அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், மாணவிகளைக் கொடுமைப்படுத்தியதாகவும் புகார் கூறப்படுகிறது. அரசு அதிகாரிகளைக் கொண்டு விசாரணை என்ற பெயரில் உண்மைகளை மறைக்க முயற்சிப்பதாகக் குறை கூறுகிறார்கள். இறந்த மாணவிகள் மூவரும் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்திற்குத் தலைமை தாங்கியிருக்கிறார்கள்.

இந்த கல்லூரி பற்றி பலமுறை புகார் மனுக்கள் கொடுத்தும் அமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கைகள் வந்துள்ளன.

கொலையா, தற்கொலையா என்பதை உலகத்திற்கு அறிவிக்க வேண்டும். தற்கொலை என்றால்கூட, அதற்கு என்ன காரணம் என்பதையும் தெளிவாக்க வேண்டும். உயிரிழந்த அந்த மூன்று மாணவிகளின் குடும்பத்திற்கு அரசின் சார்பிலும், நிர்வாகத்தின் சார்பிலும் நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும். பல்வேறு அமைப்புகள் சார்பிலும், கட்சிகள் சார்பிலும் கேட்டுக்கொண்டவாறு, இதுகுறித்து தமிழக அரசே பதவியிலே உள்ள உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு சட்டப்படியான விசாரணை நடத்தி, உண்மைகளை உலகத்திற்கு அறிவிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்” என்று திமுக தலைவர் கருணாநிதி கோரியுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்