முஸ்லிம்களைப் பற்றி ரஜினிகாந்த் சொன்னது இதுதான்

What did Rajinikanth say about Muslims?

0
321
நடிகர் ரஜினிகாந்த்

துபாயில் அக்டோபர் 28, 2017 அன்று எந்திரன் 2.0 இசை வெளியீட்டில் நடிகர் ரஜினி பேசியது இதுதான்:

நான் பல்வேறு வெளிநாடுகளுக்கு செல்லும்போது துபாய் விமான நிலையம் வழியாகத்தான் சென்றுள்ளேன். ஆனால் துபாய்க்கு வந்ததில்லை. இப்போது தான் துபாய்க்கு முதன் முறையாக வந்து இருக்கிறேன். மத்திய கிழக்கு நாடுகளிலேயே துபாய் நகரம் அமெரிக்காவைப் போன்று உள்ளது.

2.0 திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவரும். நல்ல படங்களை மக்கள் ஆதரிக்க வேண்டும். இந்த படம் ஹாலிவுட் தரத்துக்கு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பெருமையை நானே சொல்லக்கூடாது. மக்கள் பார்த்து விட்டு சொல்வார்கள். நல்ல படங்களை மக்கள் ஆதரிக்க வேண்டும்.

40 வருட சினிமா வாழ்க்கை

உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இதில் பணம், புகழ் நமக்கு நிம்மதியைத் தரும் என்று சொல்ல முடியாது. புகழ், பணம் இருந்தாலும் கூட நிம்மதி இருக்காது, நிம்மதி இருக்கும்போது பணம் இருக்காது என்று நான் என்னுடைய 40 வருட சினிமா வாழ்க்கையில் கற்றுக்கொண்டேன். ஆனால் இப்போதுள்ள இளைய சமுதாயத்தினர் நிறையவே மாறிவிட்டனர். அவர்கள் நமது பாரம்பரியம், கலாசாரம் உள்ளிட்டவற்றை கடைப்பிடிக்க வேண்டும். ஆண்டவனின் அனுக்கிரகமும், மக்களின் அன்பும் என்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது.

இளைஞர்கள் தாய்நாடு மற்றும் தாய்மொழியை அதிகமாக நேசிக்கிறார்கள். இதை வரவேற்கிறேன். ஆனால் சிலர் கலாசார வழக்கங்களை மறந்து வருகின்றனர். பணம், பெயர், புகழ் எல்லாமே மற்றவர்கள் பார்ப்பதற்குத்தான் நன்றாக இருக்கும், ஓரளவு தான் மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஆரம்பத்தில் இவை சந்தோஷத்தைக் கொடுக்கும். ஆண்டவன் மேல் நம்பிக்கை இருப்பதால் ரஜினிகாந்த் ஆக இருப்பது சந்தோஷத்தைக் கொடுக்கிறது. இல்லாவிட்டால் ரொம்ப கஷ்டத்தைக் கொடுத்திருக்கும்.

இஸ்லாமியர்களின் பங்கு

இஸ்லாமிய சகோதரர்களுக்கும், எனக்கும் ஒரு பந்தம் உள்ளது. எனது வளர்ச்சி, உயர்வில் இஸ்லாமிய சகோதரர்களும் பெரும் பங்கு வகித்துள்ளனர். நான் கண்டக்டராக இருக்கும் போது எனக்கு பல உதவிகளைச் செய்தவர்கள் என் இஸ்லாமிய நண்பர்கள்தான். சென்னையில் நடிக்க வந்தபோது, முதன் முதலாக நண்பர் ஒருவர் வீட்டில்தான் தங்கி இருந்தேன். அந்த வீட்டின் உரிமையாளர் இஸ்லாமியர்.

மேலும் சினிமாவில் பெயர், பணம், புகழ் வந்த பிறகு, தற்பொழுது நான் இருக்கும் போயஸ் கார்டன் வீட்டை எனக்கு விற்றவரும் ஒரு இஸ்லாமியர்தான். ராகவேந்திரா மண்டபத்தின் இடத்தை எனக்கு விற்றவரும் ஒரு இஸ்லாமியர்தான். அனைத்துக்கும் மேல் என் குரு ராகவேந்திரா சுவாமி கோவில் அமைய மந்த்ராலயாவில் இடம் கொடுத்தவரும் ஒரு நவாப்தான். அதற்கும் மேலாக நான் நடித்த படங்களிலேயே ஒரு படத்தின் பெயரை சொன்னால் அதிரும் என்றால் அது பாட்ஷா படம்தான். அதுவும் ஒரு இஸ்லாமியர் பெயர்தான். இப்படி பல வகைகளில் இஸ்லாம் என் வாழ்க்கையில் உள்ளது. இதை நான் குறிப்பிட்டு செய்யவில்லை. தானாக அதுவாகவே நிகழ்ந்ததாகும்.

கிடைக்கும் வாய்ப்பு

நமது வாழ்க்கையில் ஒரு வாய்ப்பு கிடைப்பதென்பது மிகவும் கஷ்டம். அந்த வாய்ப்பு கிடைக்கும்போது அதைச் சரியாக பயன்படுத்த வேண்டும். அதைச் சரியாக பயன்படுத்தவில்லை என்றால் நம்மைப் போல் முட்டாள் யாரும் இல்லை. ஒருவர், பெயர் புகழுடன் இருக்கிறார் என்றால் அது திறமையாலோ, கடின உழைப்பாலோ, மட்டும் அல்ல. அவருக்கு கிடைத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்பதால்தான். வாய்ப்புகள் சிலருக்கு தானாக வரும் அது ஆண்டவன் அருள். அப்படி வரவில்லை என்றால் நாம்தான் அந்த வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

நன்றி: தினத்தந்தி, அக்டோபர் 29, 2017

இதையும் படியுங்கள்: ரஜினிக்கு வந்தனம்

அன்புச் சொந்தங்களே, கீழேயுள்ள CLICK HERE பொத்தானை அழுத்தி இப்போதுவுக்கு நன்கொடை வழங்குங்கள்; சந்தேகங்களை நிவர்த்தி செய்ய +919445515340ஐ அழையுங்கள்:

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்