முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஆகஸ்ட் 31ம் தேதி வரை 139.99 அடியிலேயே வைத்திருக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வலியுறுத்தி கேரளாவின் ரசூல் ஜாய் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்து, அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 139 அடியாகக் குறைக்க அணையை கண்காணித்த துணைக் குழுவும், மத்திய அரசும் உச்ச நீதிமன்றத்தில் பரிந்துரைத்திருந்தது.
மேலும் கேரள வெள்ளத்துக்கு முல்லைப் பெரியாறு அணையே முக்கியக் காரணம் என்றும், அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும் என்று கேரள அரசு சார்பில் தமிழகத்துக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், தமிழக நீர்வளத்துறை செயலர் எந்த பதிலும் அளிக்கவில்லை.
முல்லை பெரியாறு அணையில் இருந்து எந்த அளவுக்குத் தண்ணீர் திறக்கப்பட்டது என்பது கூட எங்களுக்குத் தெரியவில்லை.
கன மழை காரணமாக கேரளாவில் உள்ள 13 அணைகளில் இருந்து இடுக்கி அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. முல்லை பெரியாறு அணையில் இருந்து ஆகஸ்ட் 12ம் தேதி 3 மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டு வந்த தண்ணீரின் அளவானது 9 ஆயிரம் கன அடியில் இருந்து 21,500 கன அடியாக திடிரென அதிகப்படியான தண்ணீர் திறக்கப்பட்டதால் இடுக்கி அணைக்கு அதிகப்படியான தண்ணீர் வந்தது.
இதனால் இடுக்கி அணையில் இருந்து 15 ஆயிரம் கன அடி வரை நீரைத் திறந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்று கேரள தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில், மத்திய அரசு மற்றும் அணையின் கண்காணிப்புக் குழுக்கள் அளித்த பரிந்துரையை ஏற்று, அணையின் நீர்மட்டத்தை 139.99 அடியாகக் குறைத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறபபித்துள்ளது.
வழக்கு விசாரணையை செப்டம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.

courtesy: dinamani