முற்போக்குவாதிகளே சற்று தள்ளி இருங்கள்… சினிமா பிழைத்துப் போகட்டும்

0
382
Nayantara & Vijay

யூடியூபில் இரண்டு டஜன் ஆள்கள் படங்களை விமர்சனம் செய்கிறார்கள். படம் வெளியாகும் அன்றே விமர்சனங்கள் சுடச்சுட வந்துவிடுகின்றன. அந்த அமெச்சூர் விமர்சனங்களை பொறுத்துக் கொள்ளலாம். பலநேரம் திரைப்படத்தின் நாடித்துடிப்பை துல்லியமாக சொல்லியும் விடுகிறார்கள். ஆனால், இலக்கியவாதிகள், முற்போக்காளர்கள், பெண்ணியவாதிகள், கம்யூனிஸ்டுகள் என்றெல்லாம் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறவர்கள் ஒரு திரைப்படத்தை விமர்சிக்கவோ பாராட்டவோ முற்படும்போது ஆகக்கழிச்சடையாக அவை அமைந்துவிடுகின்றன.

அறம் திரைப்படத்தைக் குறித்து இப்போது தைரியமாக பேசலாம். அறம் ஹேங் ஓவரிலிருந்து இணையதள சமூகம் மீண்டிருக்கிறது. அறம் நல்ல படமா கெட்ட படமா என்று பட்டிமன்றம் நடத்த வேண்டாம். இரண்டே வரிகள். நாயகன் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தை நல்லவனாக காண்பிப்பது கமர்ஷியல் சினிமாவின் வழமை. அறத்தில் நயன்தாராதான் நாயகன், நாயகி எல்லாம். கமர்ஷியல் சினிமா வழக்கப்படி அவர் ஏற்று நடித்த கலெக்டர் கதாபாத்திரத்தை அப்பழுக்கற்றதாக காட்டியிருந்தார்கள். இங்கேயே நல்ல படம் என்ற அம்சம் அடிபட்டுப் போகிறது.

பை சைக்கிள் தீவ்ஸ் படத்தை ஏன் நல்ல படம் என்கிறோம்? அந்தப் படத்தின் நாயகன் தனது சைக்கிள் தொலைந்தது குறித்து புகார் செய்ய காவல்நிலையம் செல்வான். அங்கிருக்கும் அதிகாரி அவனது புகாரை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டான். இதுதான் சராசரி கமர்ஷியல் சினிமாவின் வழக்கம். ஆனால், பை சைக்கிள் தீவ்ஸ் படத்தில் அந்த அதிகாரியின் நிலையும் சுட்டிக்காட்டப்படும். அவன் இன்னொரு இடத்தில் சார்ஜ் எடுத்தாக வேண்டும். அவனை ரிலீவ் செய்ய வேண்டிய அதிகாரி இன்னும் வந்திருக்க மாட்டான். இங்கு இரு தரப்பும் ஜஸ்டிபை செய்யப்பட்டிருக்கும். அதனால்தான் பை சைக்கிள் தீவ்ஸை நல்ல படம் என்று சொல்கிறோம். அறம் இதனை முற்றாக நிராகரித்த ஒரு படைப்பு. அரசியல்வாதிகள் என்றால் கெட்டவர்கள் என்ற தமிழ் சினிமா மொண்ணைத்தனத்தை சுவீகரித்துக் கொண்ட படம். இப்படி சொல்லும்போது அரசியல்வாதிகள் நல்லவர்களா என்ற கேள்வி வரும். அவர்கள் அனைவரையும் போல நல்லத்தன்மையும் கெட்டத்தன்மையும் கொண்டவர்கள். ஆனால் நிச்சயம் அறத்தில் வருவதைப் போன்றவர்கள் அல்ல. ஒரு பிரச்சனையை அதன் அனைத்து மட்டங்களிலும் சீர்தூக்கிப் பார்க்காமல் ஒரு கதாபாத்திரத்தை தூக்கிப் பிடித்து, அதன் மூலம் அந்த கதாபாத்திரத்தில் நடித்தவரை கொண்டாடும் ரசிக மனோபாவத்தை தூண்டும் படைப்பே அறம்.

தென்தமிழகத்தில் ஒரு இளம் பெண் கலெக்டர் குறித்து தினம் செய்திகளில் வருகிறது. ஏழைக்குழந்தைகளை எடுத்து கொஞ்சுகிறார், சாதாரணர்களுடன் அமர்ந்து உணவருந்துகிறார், அவர்தான் உதாரண கலெக்டர் என்று இணைய மொண்ணைகள் கொண்டாடுகின்றன. அந்த கலெக்டர் இந்த விளையாட்டுகளை தமிழ் சினிமாவிலிருந்தே கற்றிருக்க வேண்டும். கலெக்டரின் பணி குழந்தையை கொஞ்சுவதும், சாதாரணர்களுடன் உணவருந்தி ஒரு நாடகத்தன்மையை ஏற்படுத்துவதும் அல்ல. அந்த கலெக்டர் அரசு மருத்துவமனையில் பல வருடங்களாக நேர்மையுடன் பணியாற்றிவந்த மருத்துவர் ஒருவரை அனைவர் முன்னிலையிலும் திட்ட, மனம் உடைந்து போன அந்த மருத்துவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். தங்களை ஹீரோவாக்கி காட்டிக் கொள்ள இவர்கள் மேற்கொள்ளும் அபத்தமான நடவடிக்கைகள், இவர்கள் இந்த சமூகத்தை இதன் சிஸ்டத்தை உண்மையிலேயே உணர்ந்திருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்புகின்றன. அறத்தின் மதிவதினிக்கும் இந்த கலெக்டருக்கும் அதிக வித்தியாசமில்லை.

அறம் கதை தனது இமேஜை அதிகரிக்கும் என அறிந்து கொண்டே அதில் நடிக்க நயன்தாரா ஒப்புக் கொண்டார். அதன் தயாரிப்பு முதற்கொண்டு அனைத்தையும் ஏற்றுக் கொண்டார். படத்தில் பிரதானமாக வரும் ஆழ்துளை கிணறு காட்சிகள் சண்டை இயக்குனர் பீட்டர் ஹெயினின் மேற்பார்வையில் எடுக்கப்பட்டன. படத்தின் இறுதியில் நயன்தாரா ஆங்கிலத்தில் பேசும் அம்பேத்கரின் மேற்கோளை வைத்தவர் விக்னேஷ் சிவன். மதிவதினியாகிய நான் என்று படத்தின் இறுதியில் ஒலிக்கும் வசனமும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் விருப்பத்தின் பேரில் வைக்கப்பட்டதே. படத்தின் டப்பிங்கின் போது நயன்தாரா கோபியை உள்ளேயே அனுமதிக்கவில்லை. எடிட்டிங் செய்யப்பட்ட படம் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் பிடிக்காமல் போக எடிட்டரை மாற்றினர். ரசிகர்களுக்கு தேவையில்லாத இந்த உள்குத்துகளை இங்கே குறிப்பிட காரணம், நயன்தாரா அனைத்தையும் தெரிந்து கொண்டேதான் செய்தார். அறத்தில் முடக்கப்பட்டது அவரது பணம்.

படம் வெளிவந்ததும் நயன்தாரா எதிர்பார்த்ததைப் போல பெண்ணியவாதிகள் அவரை கொண்டாடினர். தோழர் என்று தூக்கிப் பிடித்தார்கள். அந்த தோழர் தனது அடுத்தப் படமான வேலைக்காரனின் புரமோஷனில் கலந்து கொள்ளவில்லை. சென்னையில் இருந்து கொண்டே சென்னையில் நடந்த வேலைக்காரன் ஆடியோ விழாவை புறக்கணித்தார். கத்தியில் விவசாயத்தை விஜய் பேசியதற்கும் அறத்தில் நயன்தாரா ஏற்று நடித்த வேடத்துக்கும் பெரிய வித்தியாசமில்லை. இரண்டு படங்களின் முடிவுகளும் ஒன்றே. விஜய், நயன்தாரா என்ற தனி மனிதர்கள் புனிதராக்கப்பட்டார்கள்.

இலக்கியவாதிகளும், முற்போக்காளர்களும் பாராட்டிய இன்னொரு படம் மீரா கதிரவனின் விழித்திரு. ஒரேயிரவில் நடக்கும் பல்வேறு சம்பவங்களின் தொகுப்புதான் அந்தப் படம். அதில் ஒரு சிறுமி தனது கண் தெரியாத தந்தையுடன் காணாமல் போன தனது நாயக்குட்டியை தேடிக் கொண்டிருப்பாள். நடுநிசியில் ஆளேயில்லாத ரோட்டில் அடம்பிடிக்கும் அந்தச் சிறுமியைப் பார்த்தால் முதுகில் இரண்டு போட்டு வீட்டுக்குப் போ என்றுதான் சொல்லத் தோன்றும். அதுதான் சரி. ஆனால் அதனை ஏதோ மனிதாபிமானமாக இயக்குனர் கட்டியெழுப்ப படாதபாடுபட்டிருப்பார். திருட வந்த பெண்ணை தனது மனைவி என்று நினைக்கும் ஒரு மறைகழன்ற கிழவன், திருடிய பொருளை பங்குபோட்டு வீடு போய் சேராமல் இரவெல்லாம் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும் இரண்டு பேர் என்று படத்தில் எல்லாமே இயல்புக்கு மாறான செயற்கை கதாபாத்திரங்கள். அடித்து துவைக்க வேண்டிய இந்தப் படத்தை ஆகா ஓகோ என்று நமது முற்போக்காளர்கள் பாராட்ட என்ன காரணம்? படத்தின் ஆரம்பத்தில் சம்பந்தமே இல்லாமல் திருமுருகன் காந்தி ஏதோ தொலைக்காட்சியில் பேசுகிறார், படத்தில் வந்து போகும் ஈழத்தமிழரின் வீட்டில் திலீபன் என்று எழுதப்பட்டிருக்கிறது, படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் முத்துக்குமார். நம்புங்கள்… படத்துக்கு சம்பந்தமில்லாத இந்த துக்கடா விஷயங்களுக்காகத்தான் விழித்திரு படத்தை தூக்கிப் பிடித்தார்கள். படம் சமூக அவலங்களை தொட்டுச் செல்கிறது என்று சப்பு கொட்டினார்கள்.

அளவுக்கு மீறி கொண்டாடுவது, அர்த்தமில்லாமல் பாராட்டுவது என்று முற்போக்காளர்களின் கூடாராம் சினிமா விஷயத்தில் சீரழிவை கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. சினிமா ஒரு தனித்த கலைவடிவம். அதனை உங்களின் சீக்குப்பிடித்த கொள்கைகளை கொண்டு அளக்காதீர்கள். ஒரு படத்தை எப்படிப் பார்ப்பது என்பதை கற்றுக் கொள்ளும் இடத்தில் இருக்கும் நீங்கள், ஒரு படம் எப்படிப்பட்டது என்று தீர்மானிக்காதீர்கள்.

முற்போக்காளர்களே சினிமாவிலிருந்து தயவுசெய்து தள்ளி இருங்கள்… பாவம் சினிமா பிழைத்துப் போகட்டும்.

இதையும் படியுங்கள் : திருநங்கைகள்/திருநம்பிகள் சட்டத்தை ஏன் தடுத்து நிறுத்த வேண்டும்?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்