மும்பை பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்ட திவாலான பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்கள்; சமாதானம் செய்த நிர்மலா சீதாராமன்

0
309

பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கியின் மீது இந்திய ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கை, அதன் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய வங்கித்துறையிலும் சலசலப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.

செப்டம்பர் 23 ஆம் தேதி பிஎம்சி வங்கியின் வாடிக்கையாளர்கள், அடுத்த ஆறு மாதங்களுக்கு தங்களது வங்கி கணக்கிலிருந்து அதிகபட்சம் ஆயிரம் ரூபாய்தான் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாட்டை இந்திய ரிசர்வ் வங்கி விதித்தது. இதனால்  அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் அனைத்து பிஎம்சி வங்கிக் கிளைகளிலும் பெருமளவு குவிந்தனர். தங்களது சேமிப்பு பணம் தங்களுக்கு கிடைக்கால் போய்விடுமோ என்று பெரும் அச்சம் அடைந்தனர்.  பின்பு இந்தக் கட்டுப்பாட்டை தளர்த்தி ரூ 10000 வரைக்கும் எடுக்கலாம் என்று ஆர்பிஐ அறிவித்தது . 

எனினும் நிறைய பணத்தை முதலீடாக வங்கியில் போட்டவர்கள் திருமணம், மருத்துவ செலவு உள்ளிட்ட அவசர தேவைக்கு பயன்படுத்த முடியாத நிலையில் தான் உள்ளனர்

ஹவுசிங் டெவலப்மெண்ட் மற்றும் இன்பிராஸ்ட்ரக்சர் லிமிடெட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு ரூ. 6,500 கோடி வரை பிஎம்சி வங்கி கடன் வழங்கியுள்ளது. இது ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாட்டு வரம்பை விட 4 மடங்கு அதிகமாகும். அத்துடன் வங்கியின் மொத்த சொத்து மதிப்பான ரூ.8,800 கோடியில் 73 சதவீதம் இந்நிறுவனத்துக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

பிஎம்சி வங்கி மோசடி தொடர்பாக மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடன் வாங்கிய ஹெச்டிஐஎல் ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. அதன் இயக்குநர்கள் சரங் வாத்வான், ராகேஷ் வாத்வான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரூ.3,500 கோடி மதிப்பிலான சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. பிஎம்சி வங்கியின் இயக்குநர் ஜாய் தாமஸ் மற்றும் வங்கியின் முன்னாள் தலைவர் வார்யம் சிங்கும் கைதாகியுள்ளனர்.

பிஎம்சி வங்கி மோசடியில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததை உறுதிப்படுத்தியுள்ள அமலாக்கப்பிரிவு இதுதொடர்பாக சோதனைகள் நடத்தி வருகிறது.

பிஎம்சி வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை திருப்பி தரக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வங்கி மோசடி புகாரில் கைது செய்யப்பட்டவர்களை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவர்களை ஜாமீனில் விடக்கூடாது எனக் கூறி வங்கியின் வாடிக்கையாளர்கள் திரண்டு கோஷமிட்டனர்.

 பாஜக அலுவலகத்துக்கு வெளியே பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்கள் கூடி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்களை பாஜக நிர்வாகிகள் பாஜக அலுவலகத்துக்குள் அழைத்து பேசினர். நிர்மலா சீதாராமனை சந்தித்து தங்கள் பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவேசமாக கேட்டனர்.

அப்போது இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநரிடம் உடனடியாக பேசுவதாகவும், நடவடிக்கை எடுப்பது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிப்பதாகவும் நிர்மலா சீதாராமன் மக்களிடம் வாக்குறுதி அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here