காஷ்மீர் மாநிலத்தில், நேற்று(வியாழக்கிழமை) மாலை 3:15 மணியளவில், 78 வாகனங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து, வெடி குண்டுகள் நிரப்பிய காரில் வந்த பயங்கரவாதி ஒருவன், காரை பேருந்து மீது மோதி வெடிக்கச்செய்தான். அதில் அந்த பஸ் முற்றிலும் வெடித்துச் சிதறின. அத்துடன் வந்த பல வாகனங்களும் கடுமையாகச் சேதம் அடைந்தன.

தாக்குதலுக்கு உள்ளான ராணுவ வாகனத்தில் பயணம் செய்த வீரர்கள் அனைவரும் உடல் சிதறிப்போய் விழுந்தனர். இந்த பயங்கரவாதத் தாக்குதலில் 44 வீரர்கள் மரணம் அடைந்தனர். படுகாயம் அடைந்த வீரர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதலுக்கு உள்ளானவர்கள், CRPF இன் 92, 17 மற்றும் 54 வது பட்டாலியன்களைச் சேர்ந்தவர்கள். இந்த கொடூர தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

இந்தப் பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து, நேற்று தெற்கு காஷ்மீர் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணையவேகம் குறைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று(வெள்ளிக்கிழமை) ஜம்முவில் செல்போன் இணையதளசேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதலை கண்டித்து பல்வேறு அமைப்புகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதால், ஜம்மு காஷ்மீரில் இன்று நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here