மதசார்பற்ற அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத்தில் வரவிருக்கும் முத்தலாக் மசோதாவை வீரியத்துடன் எதிர்க்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை

முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யக்கூடிய முஸ்லிம்களைத் தண்டிப்பதற்கான ஒரு மசோதாவை பாராளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. முத்தலாக் சொல்லி விட்டால் விவாகரத்து நடைபெறாது, அது சட்டத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் முத்தலாக் சொன்னவர்களைத் தண்டிக்கிற சட்டம் என்பது தேவையில்லாதது. மத்திய அரசு முத்தலாக்கிற்கு எதிரான சட்டத்தை கொண்டு வருகிற முயற்சியை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

sdpi

இந்த சட்டம் என்பது பெண்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்காக கொண்டு வரப்படும் சட்டம் என்று மோடி அரசு கூறினாலும், எதார்த்தத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான பாஜக அரசு எடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த சட்டம் பார்க்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்கு ஏற்கனவே இருக்கக்கூடிய குடும்ப வன்முறை சட்டம், குழைந்தகள் பராமரிப்பு சட்டம், குற்றவியல் சட்டம் ஆகிய சட்டங்களே போதுமானது.

மோடி அரசு கொண்டு வரும் இந்த சட்டம் முஸ்லிம்களின் தனியார் சட்டத்தை அவமதிப்பதற்கும், அந்த சட்டத்தைக் குறித்த தவறான பார்வையை உருவாக்குவதற்காகவே மத்திய அரசு இச்சட்டத்தைக் கொண்டுவர முயலுகிறது. உச்சநீதிமன்றம் முத்தலாக் கொடுப்பவர்களுக்கு தண்டனை கொடுக்கும் படியான சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிடவில்லை. ஆனால், ஒரு முஸ்லிம் விரோத போக்கோடு நிரபராதியான ஆண்கள் தண்டிக்கப்படும் விதத்தில் மத்திய அரசு ஒரு சட்டத்தைக் கொண்டுவர முனைவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. வன்மையாக கண்டிக்கத்தக்கது.

பா.ஜ.க. அரசு கொண்டுவரும் அவசர கோலத்திலான இச்சட்டம் என்பது பலகேள்விகளை முன்வைக்கிறது;

முத்தலாக்கை எதிர்த்து சட்ட உதவியை எதிர்பார்க்கும் பெண், கணவருடன் வாழ்வதற்காகவும், பொருளாதார பாதுகாப்புக்காகவுமே நீதிமன்றத்தின் ஆதரவை நாடுகிறார் எனில், இச்சட்டத்தின் படி கணவனை சிறைக்கு அனுப்பினால் அந்த பெண்ணுக்கு தேவைப்படும் இரண்டு அடிப்படை ஆதரவுமே கேள்விக்குறியாகிவிடுகிறது.

திருமணம் ஒரு சமூக ஒப்பந்தம் என்னும்போது, திருமணத்தை முறித்துக் கொள்ளுவதை, குற்றவியல் வழக்காக தொடுக்கப்படுவது ஏன்?

முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக எதிர்க்கும், நிரபராதியான முஸ்லிம் ஆண்கள் பாதிக்கப்படும் விதத்தில் இயற்றப்பட இருக்கும் இந்த மசோதாவை ஒரு போதும் சட்டமாக்க கூடாது என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்துகிறது. இந்த கூட்டத்தொடரிலேயே முஸ்லிம் விரோத போக்கோடு இந்த சட்டத்தை நிறைவேற்றத் துடிக்கும் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுப்பதும். இந்த மசோதாவை தோற்கடிப்பதும் மதசார்பற்ற அரசியல் கட்சிகளின் பொறுப்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சி கருதுகிறது. எனவே, மதசார்பற்ற அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத்தில் வரவிருக்கும் இந்த மசோதாவை வீரியத்துடன் எதிர்க்க வேண்டும். அதை, தோற்கடிக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

நாடு முழுவதும் வாழும் முஸ்லிம் அறிஞர்களும், இஸ்லாமிய அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களின் விவகாரங்களில் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக செயல்படுகிற முஸ்லிம் தனியார் சட்ட வாரியமும் மத்திய அரசு கொண்டு வரும் இச்சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது. எனவே, மத்திய அரசு ஒட்டுமொத்த முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், கோரிக்கைகளுக்கு செவி சாய்த்தும் சட்டத்தை கொண்டு வரும் முயற்சியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இதையும் படியுங்கள்: சிறுதொழில் தொடங்க வேண்டுமா? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்