முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் திறமையான தலைமையின் கீழ் தமிழக அரசு செயல்படுவதாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இன்று (பிப். 23) கலைவாணர் அரங்கில், 2021-2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியதாவது:

“ஜெயலலிதா மறைந்த பின்னர், இந்த அரசு அதன் ஆட்சிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யாது என பலராலும் ஊகிக்கப்பட்டது. அவ்வாறு விமர்சனம் செய்த அனைவரின் கணிப்புகளும் தவறு என தீர்க்கமாக நிரூபிக்கப்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் திறமையான தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த அரசு, அதன் ஆட்சிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்தது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டை நாட்டிலேயே தலைசிறந்த மாநிலமாக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் நோக்கத்தை நிறைவேற்றியுள்ளது.

தமிழக அரசு, இந்திய அளவிலும், உலக அளவிலும் பல விருதுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. இந்திய அரசால் 2019 ஆம் ஆண்டு முதன்முறையாக கணக்கிடப்பட்ட நல் ஆளுமைத்திறன் குறியீட்டுப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளோம். கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ‘இந்தியா டுடே’ பத்திரிகை நடத்திய ‘மாநிலங்களின் நிலை’ என்ற தலைப்பில் மேற்கொண்ட ஆய்வில், ‘ஒட்டு மொத்த செயல்திறன் மிக்க மாநிலம்’ என்று தமிழ்நாடு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் மீட்டெடுப்பு

கொரோனா தொற்றுநோயின் ஆரம்ப காலக்கட்டத்தில், தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்ததாக, நாட்டில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு இருந்தது. மேலும், இறப்பு எண்ணிக்கை ஒரு சவாலாக இருந்தது. ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பும் ஒருங்கிணைந்து செயல்பட்டது. கோவிட்-19 தொற்றுநோயை கையாளுவதில் தமிழ்நாடு ஒரு சிறந்த முன்னோடி மாநிலமாக பாராட்டப்படுகிறது. தீர்க்கமாக முடிவெடுக்கும் ஆற்றலுடைய தலைமையினாலும், பொது சுகாதார வல்லுநர்களின் ஆலோசனையைப் பின்பற்றியதாலும் இது சாத்தியமானது.

தமிழகத்தில் மொத்த நோய்த்தொற்று இறப்பு வீதம் 1.47 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதே நோய்த்தொற்று எண்ணிக்கையுள்ள பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தின் நோய்த்தொற்று இறப்பு வீதம் கணிசமான அளவில் குறைவாக உள்ளது.

ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனை வசதிகள் மாநிலம் முழுவதும் அதிகரிக்கப்பட்டு, தற்போது 68 அரசு மருத்துவமனைகளிலும், 186 தனியார் மருத்துவமனைகளிலும் செயல்பாட்டில் உள்ளன. 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல், பரிசோதனைகளின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 70 ஆயிரம் மாதிரிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன. 1.68 கோடிக்கும் மேற்பட்ட மாதிரிகளை பரிசோதனை செய்து, நாட்டிலேயே அதிக அளவில் ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

கோவிட்-19 பெருந்தொற்று மீட்டெடுப்பு நடவடிக்கைகளுக்காக, அரசு 13 ஆயிரத்து 352.85 கோடி ரூபாய் செலவினங்களை மேற்கொண்டுள்ளது.

இத்தகைய தீவிர நடவடிக்கைகளால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 500-க்கு கீழ் நிலைப்படுத்தப்பட்டு, நோய்த்தொற்று வீதம் கணிசமாகக் குறைந்துள்ளது. மிகச் சில கட்டுப்பாடுகளுடன் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டதால், தமிழ்நாடு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புகின்றது.

மத்திய அரசின் வரவு-செலவுத் திட்டத்தில், கோவிட்-19 தடுப்பூசி அளிக்கும் பணிகளுக்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததனால், தடுப்பூசி அளிக்கும் பணிகளுக்கான முழு செலவினத்தை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என எதிர்பார்க்கிறோம்.

பெருந்தொற்று பரவலால் சமூகப் பொருளாதாரத்தில் பெருமளவில் தாக்கம் ஏற்பட்டது. இதனால், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்ட உயர்மட்டக் குழுவை அரசு அமைத்தது. இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமை தாங்கினார். இந்தக் குழு, பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மற்றும் மாநில அரசின் கொள்கை முடிவுகள் குறித்து பகுப்பாய்வை மேற்கொண்டது. கோவிட்-19 தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு மிக விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஏழைகள் மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீது குறிப்பிட்ட கவனம் செலுத்தி, பல்வேறு அவசரகால மற்றும் இடைக்கால நடவடிக்கைகளை செயல்படுத்தியது என குழுவால் பாராட்டப்பட்டுள்ளது.

இக்குழு, 2020-21 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சிக்கான கணிப்புகளை இரண்டு சூழல்களில் காட்சிப்படுத்தியுள்ளது. ஒரு சூழலில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 1.31 சதவீதமாகக் குறையும் எனவும், மற்றொன்றில் எதிர்மறை வளர்ச்சி (-) 0.61 சதவீதமாக இருக்கும் எனவும் குறிப்பிட்டது. உடனடிப் பொருளாதார நிவாரணம், புதுப்பித்தல் நடவடிக்கைகள், வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த துறைகள், தொழில்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறைகள், வளர்ந்து வரும் துறைகள், கட்டுமானம் மற்றும் வீட்டுமனை விற்பனை தொழில், நிதி மற்றும் வங்கிகள், சுற்றுலா, சமூகத் துறைகள், மாநிலங்களுக்கு இடையே புலம் பெயரும் தொழிலாளர்கள் மற்றும் மாநில நிதி நிலை தொடர்பான துறை சார்ந்த 413 பரிந்துரைகளையும் குறிப்புகளையும் இக்குழு வழங்கியது. தமிழ்நாடு அரசு குழுவின் பரிந்துரைகள் மற்றும் குறிப்புகளை முனைப்புடன் செயல்படுத்தத் தொடங்கி, இதுவரையில் 273 பரிந்துரைகளைச் செயல்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட விரைவாக மீண்டெழுந்துள்ளது. எதிர் சுழற்சி நிதிமுறையைப் பின்பற்றியதால், 2020-21 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த வருவாய் வரவினங்கள் கணிசமான அளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்த போதிலும், 2020-21 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மதிப்பிடப்பட்டதை விட, ஒட்டுமொத்த வருவாய் செலவினங்கள் அதிகரித்துள்ளன. 2020-21 ஆம் ஆண்டில், குறைந்தபட்சம் 10 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் மூலதனச் செலவினங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற சி.ரங்கராஜன் குழுவின் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் மீது இந்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. 2020-21 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் செய்த ஒதுக்கீட்டிற்கு மேல் நீர்ப்பாசனம், கட்டடங்களின் கட்டுமானம், சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள், வீட்டுவசதி, குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரம் போன்ற மூலதனப் பணிகளுக்கு ஒட்டுமொத்தமாக 20 ஆயிரத்து 13 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதலாக ஒப்புதல்கள் வழங்கப்பட்டன. இதனால், இந்த ஆண்டில் ஏற்படும் மூலதனச் செலவினங்கள், ஆரம்பக்கட்ட இலக்கைவிட அதிகமாக இருக்கும்.

அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளின் விளைவாக, 2020-21 ஆம் ஆண்டில் தமிழ்நாடு, 2011-12 ஆம் ஆண்டின் நிலையான விலை விகிதத்தில் 2.02 சதவீதம் நேர்மறை வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, 2020-21 ஆம் ஆண்டின் அகில இந்திய பொருளாதார வீழ்ச்சி விகிதமான 7.7 சதவீதத்திற்கு மாறாக உள்ளது. கால்நடைத் துறை மற்றும் மீன்வளத் துறையில் வலுவான வளர்ச்சி உட்பட முதன்மைத் துறை 5.23 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உற்பத்தித் துறையில் 1.25 சதவீதமும், சேவைத் துறையில் 1.64 சதவீதமும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று நோயை எதிர்கொள்வதற்காக தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்ட முனைப்பான நடவடிக்கைகளால், 2020-21 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும் இவை மிகச்சிறந்ததாக அமைந்தது. 2021-22 ஆம் ஆண்டில், பொருளாதார வளர்ச்சி மேலும் வலுவானதாக அமையும் என்பதில் அரசுக்கு எந்த ஒரு ஐயமும் இல்லை.

தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023

வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், ஜெயலலிதாவின் சிந்தையில் உருவான திட்டம் ‘தொலைநோக்குத் திட்டம் 2023’ ஆகும். இத்திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்ட 217 திட்டங்களில், 157 திட்டங்களுக்கான பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல முக்கிய திட்டங்களான, முதன்மையான மாநில நெடுஞ்சாலைகள், மெட்ரோ இரயில், துணைக்கோள் பேருந்து முனையம் மற்றும் வேளாண் உட்கட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்தும் பணிகள், செய்து முடிக்கப்பட்டுள்ளன. மேலும், 18 திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 19 திட்டங்களுக்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன”.

இவ்வாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here