முதலமைச்சர் பதவி என்ற ஒன்றை மறந்து கீழ்த்தரமாக பேசிவருகின்றார் – மு.க.ஸ்டாலின்

0
182

பதவி என்ற ஒன்றை மறந்து முதல்வர் கீழ்த்தரமாக பேசி வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கேரளாவில் கனமழையாலும், பெரு வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மேற்கு மாவட்ட தி.மு.கழகத்தின் சார்பில் நிவாரணப் பொருட்கள் இன்று வழங்கப்பட்டது. 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,கேரள மாநிலம் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, அந்த மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருக்கக்கூடிய மக்கள் கடும் துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள். எனவே, இது குறித்து நான் நேற்றைய தினம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முடிந்தளவிற்கு அவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்ற அடிப்படையில் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தேன். 

அந்த வேண்டுகோளை ஏற்று இன்று முதல்கட்டமாக, சென்னை மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் கேரள மாநிலத்திற்காக, அங்கு பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மக்களுக்கு நிவாரணப் பொருட்களாக 400 மூட்டை அரிசி 1,880 புடவைகள், 1,185 லுங்கிகள், 800 பெட்சீட்கள், 500 மில்லியன் கொண்ட 2,000 வாட்டர் பாட்டில்கள், 8 பெரிய பெட்டி அளவில் பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் 38 டிபன் பாக்ஸ்கள் என ஏறக்குறைய 10 இலட்ச ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை அறிவாலயத்தில் ஒப்படைத்திருக்கின்றார்கள். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலிருந்து இது போன்ற நிவாரணப் பொருட்கள் வரவிருக்கின்றது.

கேரள மாநிலத்தில் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளை நான் சென்னைக்கு அழைத்த காரணத்தினால், இன்று அவர்கள் எல்லோரும் வந்திருக்கின்றார்கள். எனவே, நிவாரணப் பொருட்கள் அனைத்தையும் இன்றோ அல்லது நாளையோ இரயில் மூலமாக அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகளை திராவிட முன்னேற்றக் கழகம் முன்னின்று செய்துகொண்டிருக்கின்றது.

முதல்வர், அவர் தகுதிக்கு மீறி, நேற்றைய தினம் நீலகிரி சென்று வந்த என்னைப் பற்றி என்ன சொன்னாரென்றால் சீன் காட்ட, விளம்பரத்திற்காகப் போனேன் என்று சொன்னார். நான் நேற்றைய தினமே சொல்லியிருக்கின்றேன், அவர் அமெரிக்காவிற்கும், இலண்டனிற்கும் செல்வதாக ஒரு செய்தி வந்திருக்கின்றது. எனவே, அவர் அமெரிக்காவிற்கும், இலண்டனிற்கும் சீன் காட்டத்தான் செல்கின்றாரா? என்று சொல்வதற்கு எனக்கு ரொம்ப நேரம் ஆகாது. ஆனால், முதலமைச்சராக இருக்கக்கூடிய ஒருவர், அவரை மாதிரி ஒரு பொறுப்பிழந்து, பதவி என்ற ஒன்றை மறந்து இவ்வளவு கீழ்த்தரமாக பேசுவதற்கு நான் நிச்சயமாக போகமாட்டேன்.

அதுமட்டுமல்ல, நேற்றைய தினம், கோவைக்கு வந்திருக்கின்றார். அப்போது, அருகில் தான் ஊட்டி இருக்கின்றது நியாயமாக அவர் சென்றிருக்க வேண்டும். ஆனால், இதுவரையில் அவர் போகவில்லை. இதற்கு எந்தவிதமான பதிலும் சொல்லவில்லை. முதலில் அவர் இதற்கெல்லாம் பதில் சொல்லட்டும். அதன்பிறகு, நான் பதில் சொல்கின்றேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here