#முடிவுசெய்: அடக்குமுறை தடுப்போம்

தமிழ்ச் சமூகத்தின் மீதும் அதைப் பிரதிபலிக்கும் ஊடகங்கள் மீதும் அத்துமீறல்களும் வன்முறைகளும் தீவிரமாகின்றன.

0
1145

தமிழ்நாட்டில் தொலைக்காட்சி ஊடகங்கள் வளர்ச்சியடையவும் அவை மக்களுக்குப் பெருமளவில் கொண்டு சேர்க்கப்படவும் காரணமாக இருப்பது அரசு கேபிள் நெட்வொர்க்; தொலைக்காட்சி வினியோகத்தில் 60 சதவீதம் அரசு கேபிள் வழியாகவே நடக்கிறது. ஆனால் தமிழ்நாட்டு அரசுக்குத் தலைமை தாங்கியுள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இப்போது தொலைக்காட்சி எதுவும் இல்லாத காரணத்தால், கடந்த ஒன்றரை வருடமாகவே மற்ற தொலைக்காட்சிகளிலுள்ள செய்திகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு கேபிளை துஷ்பிரயோகம் செய்கிறது. சன் டிவி நெட்வொர்க்கிற்கும் ஜெயா டிவி நெட்வொர்க்கிற்கும் எதிராக தொடங்கிய இந்த அடக்குமுறை இப்போது காவேரி நியூஸ், தந்தி டிவி, டைம்ஸ் நவ், மதிமுகம், சத்தியம் டிவி, புதிய தலைமுறை, நியூஸ் 18, நியூஸ் 7 என்று அனேகமாக எல்லோரையும் பாதித்திருக்கிறது.

அரசு கேபிளில் மார்ச் 2, 2018 முதல் தொடர்ந்து 48 மணி நேரம் தந்தி டிவி முடக்கப்பட்டது நாடறிந்த செய்தி. டிசம்பர் 10, 2017இல் அரசு கேபிளில் இணைந்த காவேரி நியூஸ், டிசம்பர் 21, 2017இல் சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்கே நகர்) இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெறுகிறார் என்கிற கருத்துக் கணிப்பை வெளியிட்டதற்காக அரசு கேபிளிலிருந்து அகற்றப்பட்டது. இது தொடர்பாக காவேரி நியூஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 2018இல் வழக்குத் தொடர்ந்துள்ளது. மே 22ஆம் தேதி நடந்த தூத்துக்குடி படுகொலைகளைப் பற்றிய விவாதத்தை ஒளிபரப்பிய நியூஸ் 18 தமிழ்நாடு சுமார் 13 மணி நேரம் அரசு கேபிளிலிருந்து அகற்றப்பட்டது. தமிழ்நாட்டு அரசுக்கு எதிரான போராட்டங்களைப் பற்றி ஜூன் 9, 2018இல் கோயம்புத்தூரில் விவாதத்தை ஒருங்கிணைத்த புதிய தலைமுறை தொலைக்காட்சி அரசு கேபிளில் 124வது இடத்திலிருந்து 499வது இடத்துக்குத் தூக்கியடிக்கப்பட்டிருக்கிறது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவான மதிமுகம் டிவி சேனல் அரசை விமர்சிக்கும் செய்திகளை ஒளிபரப்பியதால் அரசு கேபிளில் கண்காணா இடத்துக்குப் பின்தள்ளப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னதாக 2017 ஜனவரியில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அரசு வன்முறையைப் படம்பிடித்த நியூஸ் 7 இதைப்போல தண்டிக்கப்பட்டது. சன் செய்திகளும் ஜெயா செய்திகளும் கலைஞர் செய்திகளும் இதைப்போல பன்மடங்கு தண்டிக்கப்பட்டுள்ளன. தைரியமாக கருத்துக்களை வெளியிட்டதற்காக சத்தியம் தொலைக்காட்சியும் பல முறை அரசு கேபிளில் மக்கள் பார்க்க முடியாத இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஜூன் 12, 2017இல் எம்.எல்.ஏக்கள் விலை பேசப்பட்ட புலனாய்வு செய்தியை ஒளிபரப்பியபோதும் டிசம்பர் 8,2017இல் சேகர் ரெட்டி டயரீஸ் என்ற புலனாய்வு செய்தியை ஒளிபரப்பியபோதும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி அரசு கேபிளில் தடுக்கப்பட்டது. இது அரசியலமைப்பு உத்தரவாதப்படுத்தியுள்ள பேச்சு சுதந்திரத்தின் மீதான நேரடி தாக்குதல்; தூத்துக்குடி படுகொலைகள் என்பது தமிழ் குடிமைச் சமூகத்தின் மீதான அரசின் நேரடி பயங்கரவாதத் தாக்குதல். ஊடகங்களின் வழியாக வெளியாகும் குடிமைச் சமூகத்தின் குரலை அடக்குவதும் ஜனநாயகப் படுகொலை. #முடிவுசெய். அடக்குமுறை தடுப்போம்.

ஜெயலலிதாவின் மூன்று மந்திரங்கள்

The Raya Sarkar Interview

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here