முசாஃபர்நகர் கலவரம்;எதிர் சாட்சியங்களாக மாறிய உறவினர்கள்; விடுதலையான கொலைக் குற்றவாளிகள்; என்ன நடந்தது? இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்

0
646

சாட்சியங்கள் எதிராக திரும்பியதன் விளைவு , ஆதாரங்கள் தொலைந்து போனதன் விளைவாக நீதிமன்றம் அனைத்துக் குற்றவாளிகளையும் விடுவித்திருக்கிறது 

10 கொலை வழக்கு விசாரணையில் பல ஓட்டைகள் இருப்பதை நீதிமன்ற ஆவணங்கள் காட்டுகிறது என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்ட புலனாய்வு செய்தி கூறுகிறது 

#5 சாட்சிகள் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள், கொலையை நேரில் பார்த்தவர்கள் என்று முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அந்த 5 சாட்சிகளும் கடைசி நேரத்தில் அந்தக் கொலையை நாங்கள் பார்க்கவில்லை என்று கூறினார்கள் 

#6 அரசு தரப்பு சாட்சியங்கள் எதிராக மாறினர். போலீஸார் தங்களிடம் வெற்றுத் தாளில் கையெழுத்து வாங்கினார்கள் என்றனர். 

# ஐந்து வழக்குகளில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை நீதிமன்றத்தில் போலீஸார் ஒப்படைக்கவில்லை. 

# அரசு தரப்பு  ஒருபோதும் காவல்துறையினரை குறுக்கு விசாரணை செய்யவில்லை.

# இறுதியில், அனைத்து சாட்சிகளும் எதிர் சாட்சியங்களாக மாறினர் 

உத்தரப் பிரதேசம் , முசாஃபர் நகரில் 2013-ஆம் ஆண்டு முஸ்லிம்கள் மீது இந்துத்துவா கலவரக்காரர்கள் திட்டமிட்டு நடத்திய வன்முறையில் 65 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறி, அகதிகளாக முகாம்களில் குடியேறினர். 65 பேர் கொல்லப்பட்டிருந்தாலும் 10 பேரை கொன்றது மட்டும்  வழக்குகளாக பதியப்பட்டு, விசாரணை நடந்தது.  இந்த  கலவர வழக்குகளில் பல ஓட்டைகள் இருப்பதை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கண்டுபிடித்துள்ளது. 

கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள்தான் சாட்சியங்களாக இருந்தனர். அவர்கள் கடைசி நேரத்தில் எதிர் சாட்சியங்களாக பல்டியடித்தனர். இந்த சாட்சியங்களின் அடிப்படையில்  10 கொலை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜனவரி 2017 முதல் பிப்ரவரி 2019 வரையான நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் அனைவருமே விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சாட்சியங்களின் அடிப்படையிலும், பெரும்பாலும் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள்  எதிராக  மாறிவிட்ட நிலையிலும்  குற்றவாளிகளை விடுவித்துள்ளது  நீதிமன்றம்.

உண்மையில், 2017 முதல் முசாஃபர் நகர் நீதிமன்றங்கள், இந்தக் கலவரம் தொடர்பான 41 வழக்குகளில் ஒரே ஒரு வழக்கில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டது. மற்ற 40 வழக்குகளிலிருந்தும் அதாவது முஸ்லிம்கள் தாக்கப்பட்டது தொடர்பான வழக்குகள் அனைத்திலிருந்தும் குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு அனைத்து வழக்குகளையும் பதிந்து விசாரணையை தொடங்கியது. அகிலேஷ் யாதவ் ஆட்சிக் காலத்திலும் தற்போதைய யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சியிலும் இந்த வழக்குகளின் விசாரணைகள் நடைபெற்றது. 

ஒரே ஒரு வழக்கில் அமர்வு நீதிமன்றம் முசாமில், முஜாஸ்மின், ஃபர்கான், நதீம், ஜஹாங்கீர், அப்சல் மற்றும் இக்பால் ஆகிய ஏழு பேரை குற்றவாளிகளாக அறிவித்தது. ஆகஸ்ட், 27, 2013 இல் கவால் கிராமத்தைச் சேர்ந்த சகோதர்கள் கௌரவ் மற்றும் சச்சின் ஆகியோரை கொன்றதற்காக மேற்கூறிய 7 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. இந்தக் கொலைதான் கலவரத்தைத் தூண்டியது என்றும் நீதிமன்றம் கூறியது.   

நீதிமன்ற பதிவுகள் மற்றும் புகார்களின் சாட்சியங்களை ஆராய்ந்தது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் . மேலும் இந்த 10 வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது பற்றி சாட்சியங்களிடமும்,  அதிகாரிகளிடமும் பேசியது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ். 

ஒரு குடும்பம் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டது முதல் 3 நண்பர்களை இழுத்து வந்து வெட்ட வெளியில் வைத்து கொலை செய்தது , ஒரு தந்தை வாளால் வெட்டப்பட்டு கொலைசெய்யப்பட்டது, மற்றொருவர் மண்வெட்டியால் கொலைசெய்யப்பட்டது தொடர்பான வழக்குகளில் 53 கொலைக் குற்றவாளிகள்  விடுவிக்கப்பட்டுள்ளனர்.  

இதுமட்டுமல்ல 4 கூட்டு பாலியல் வன்முறை வழக்குகளிலும் , 26 கலவர வழக்குகளிலும் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது குறித்து மேல் முறையீடு செய்யமாட்டோம் என்று யோகி ஆதித்யநாத் அரசு கூறியுள்ளது. துஷ்யந்த தியாகி , மாவட்ட அரசு ஆலோசகர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசுகையில் 2013 முசாஃபர் நகர் கலவர வழக்குகளில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது குறித்து மேல் முறையீடு செய்யமாட்டோம். ஏனென்றால் சாட்சியங்கள் எதிர் சாட்சியங்காளாகி விட்டனர். மேலும் முதல் தகவல் அறிக்கைகள் சாட்சியங்கள் கூறியதன் பேரிலேயே பதிவு செய்யப்பட்டிருந்தது என்றார். 

மேலும் சாட்சியங்கள் எதிராக மாறியதால் அவர்கள் மீது 344-வது பிரிவின்படி குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். 

10 வழக்குகளில் விடுவிக்கப்பட்ட குற்றவாளிகள் குறித்த விசாரணையில் தெரியவந்த முக்கியமான விசயங்கள் 

# புகாரில் 69 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது; ஆனால் 24 பேர் மீது மட்டுமே விசாரணை நடந்தது . மற்ற 45 பேர் குறித்து  முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடவில்லை. 

#ஒவ்வொரு முதல் தகவல் அறிக்கையிலும் கொலை ஆயுதங்கள் குறித்து பதிவு செய்யப்பட்டிருந்தது ஆனால் 5 வழக்குகளில் குறிப்பிடப்பட்ட ஆயுதங்கள் மட்டுமே போலீஸாரால் கைப்பற்றபட்டிருக்கிறது . உதாரணமாக செப்டம்பர்8, 2013 இல் புதானாவில் அம்ரோஜ், மெஹர்பென், அஜ்மல் ஆகியோர் கொலைசெய்யப்பட்ட வழக்கை மூன்றாக பிரித்து குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்தது நீதிமன்றம். ஒரு குற்றவாளியிடமிருந்து கொலைசெய்யப்பட்ட ஆயுதமான அரிவாளையும் போலீஸார் கைப்பற்றியிருந்தனர். ஆனால்  ஒரு வழக்கில் இந்த ஆயுதம் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை;  இரண்டாவது வழக்கில் இந்த ஆயுதம் சமர்பிக்கப்பட்ட போதிலும் அரிவாளில் ரத்தக் கறைகள் இல்லாததால் பரிசோதனைக்கு அனுப்பவில்லை என்று போலீஸ் நீதிமன்றத்தில் கூறியது; 3வது வழக்கில் போலீஸார் இந்த அரிவாளை கைப்பற்றிய போலீஸாரிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. 

#செப்டம்பர் 8, 2013 இல் புகானாவில் கொலைசெய்யப்பட்ட கணவன் மனைவி அசிமுதீன், ஹலிமா ஆகியோர் கொலைசெய்யப்பட்ட வழக்கின் ஆதாரங்கள் 2 சாட்சிகளின் முன்னிலையில் திரட்டப்பட்டது என்று போலீஸார் குறிப்பிட்டிருந்தனர். அந்த 2 சாட்சியங்களும் தங்கள் முன்னிலையில் போலீஸார் எந்த ஒரு ஆதாரத்தையும் கைப்பற்றவில்லை என்றும் போலீஸார் தங்களிடம் வெற்றுத் தாளில் கையெழுத்து கேட்டனர் என்றும் கூறியுள்ளனர். இதேமாதிரிதான் ரோஜுதீன் வழக்கிலும் நடந்துள்ளது. செப்டம்பர் 8 இல் டிடாவில் நடந்த ரோஜுதீன் கொலையின்  சாட்சியும் தன்  முன்னிலையில் போலீஸார் எந்த ஒரு ஆதாரத்தையும் கைப்பற்றவில்லை என்றும் என்னிடம் கையெழுத்து வாங்குவதற்கு முன் அனைத்து ஆவணங்களையும் போலீஸாரே எழுதினர் என்றும் கூறியுள்ளார்.  

#மிராபூரில் ஷாரிக்கும், டிடாவில் ரோஜூதீனும் , மிராபூரில் நதிமும் கொலைசெய்யப்பட்ட வழக்குகளில் உடற்கூறு ஆய்வு செய்த டாக்டர்களை அரசு தரப்பு சாட்சியங்களாக சேர்த்திருந்தது. நீதிமன்றம் அவர்களிடம் மருத்துவ பரிசோதனை ஆவணங்களைப் பற்றி மட்டுமே கேட்டது. அவர்களிடம்  காயங்கள் குறித்தோ அல்லது இறப்புக்கான காரணம் குறித்தோ குறுக்கு விசாரணை எதுவும் நடத்தவில்லை.  

#அசிமுதீன், ஹலிமா ஆகியோர் கொலை  வழக்கில்  உடற்கூறு ஆய்வு செய்த ஆவணங்கள் எதுவும் அரசு தரப்பில் சமர்பிக்கப்படவில்லை. முதல் தகவல் அறிக்கையையும், உடல்கள் கைப்பற்றிய  இடம் குறித்த தகவல்களைத் தவிர வேறு எந்த ஆவணத்தையும் அரசு தரப்பு நீதிமன்றத்தில் சமர்பிக்கவில்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.  

இந்த பத்து வழக்குகளில்,செப்டம்பர் 8, 2013 இல்  65 வயதான இஸ்லாமை கொலை செய்த குற்றவாளியும் விடுவிக்கப்பட்டுள்ளார். 

இஸ்லாமின் மகன் ஸாரிஃப் பதிந்த முதல் தகவல் அறிக்கையில், “ஹர்பால், சுனில், பிரமன் சிங், ஸ்ரீபால், சம்ஸ்வீர், வினோத், சுமித், குல்தீப், அரவிந்த் ஆகியோர் மதவாத முழக்கங்களை எழுப்பிக்கொண்டு எங்கள் குடும்பத்தினரை ஆயுதங்களால் தாக்கினர். ஸ்ரீபால் கூரான ஆயுதம் கொண்டு என் தந்தையின் தலையில் தாக்கினார். மற்ற ஆறுபேரும் கத்தியால் அவரை தாக்கினர். எங்கள் வீட்டை அவர்கள் கொளுத்தினர். என்னுடைய சகோதரர் தந்தையை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். அங்கே அவர் இறந்துவிட்டதாக சொன்னார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் விசாரணையின் போது இஸ்லாமின் மகன் ஸாரிஃப் (குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட உத்தரவில்) நீதிமன்றத்தில் என்னுடைய அப்பா கொல்லப்பட்டார் அது குறித்த புகாரை என்னுடைய உறவினர் எழுதினார். நான் கையெழுத்து மட்டுமே போட்டேன். நீதிமன்றத்தில் இருக்கும் இந்தக் குற்றவாளிகள் அப்பா கொலையில் சம்பந்தப்படவில்லை. மேலும் 3 சாட்சியங்களும் இந்தக் குற்றவாளிகள் இஸ்லாம் கொலையில் சம்பந்தப்படவில்லை என்று நீதிமன்றத்தில் கூறியுள்ளனர். 

இஸ்லாமின் மகன் ஸாரிஃப் (கூலித் தொழிலாளி)  தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசுகையில் நான் நீதிமன்றத்தில் என்றைக்கு பேசினேன் என்று எனக்கு நினைவில் இல்லை என்று கூறியுள்ளார்.  குற்றவாளிகளை அவர் அடையாளம் காண தவறிவிட்டார் என்று அவர் நீதிமன்றத்தில் கூறியுள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகிறது. 

ஆனால் அவரது தந்தை கொல்லப்பட்ட நாள் பற்றிய அவரது நினைவுகள் தெளிவாக இருக்கிறது. என் அப்பா மருத்துவமனையில் உயிரிழந்தார். ஹர்பால் , சுனில், ஶ்ரீபால், சம்ஸ்வீர், வினோத், சுமித் பால் , குல்தீப் மற்றும் அர்விந்த் ஆகியோரை என் அப்பாவே அடையாளம் காட்டியிருந்தார். இந்த குற்றவாளிகளின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தது ஏனென்றால் அவர்களை என் அப்பாவே அடையாளம் காட்டியிருந்தார் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறியுள்ளார். 

கலவர நாளில்  பல  முஸ்லிம் குடும்பங்கள் கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டது . நாங்கள் அங்கேதான் இருந்தோம் . கிராம்த்தில் இருக்கும் பெரியவர்கள் மற்றும் கிராமத் தலைவர் எங்களை மசூதியில் தங்க வைத்து எங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்தார்கள் என்றும் இஸ்லாமின் மகன் ஸாரிஃப் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறியுள்ளார். 

ஆனால் சில மணி நேரங்களில் நிலைமை பதட்டமானதை உணர்ந்தோம். என்னுடைய அப்பா கிராமத் தலைவரை ஃபோனில் அழைத்தார் ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. நாங்கள் உள்ளூர் அரசியல்வாதி ஒருவரிடம் உதவி கேட்டோம் அப்போது அவர் ராணுவம் பாதுகாப்புக்காக வருகிறது என்றார். எங்களை பாதுகாப்பாக தங்க வைத்தவர்களே எங்கள் அப்பாவை கொன்றனர் என்றும் இஸ்லாமின் மகன் ஸாரிஃப் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறியுள்ளார். 

அக்டோபர், 9, 2018 இல் முசாஃபர் நகர் அமர்வு நீதிமன்றத்தில் , ஹிமான்சு பட்நாகர் நீதிபதி முன்பு இஸ்லாமின் மகன் ஸாரிஃப் குற்றவாளிகளை அடையாளம் காட்டுவதில் தோற்றுவிட்டார்.   

ஏன் நீதிமன்றத்தில் குற்றவாளிகளை அடையாளம் காட்டவில்லை என்றூ தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கேட்டபோது   ஸாரிஃப் கூறியதாவது – கொலையில் விடுவிக்கப்பட்டவர்கள்தான் கொன்றவர்கள். எங்களுடைய பலவீனத்தின் காரணமாக நாங்கள் சமரசம் செய்துகொண்டோம். எங்களுக்கு திராணி இருந்திருந்தால் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றத்துக்கும் சென்றிருப்போம். ஆனால், எங்களுடைய குடும்பத்துக்கு உணவே இல்லை என்னும்போது, நீதிமன்றத்திடம் நீதி கேட்டு எங்களால் எப்படி போராட முடியும்? என்றார். 

இஸ்லாம் கொலை வழக்கில்  அவரின் மகன் எதிர் சாட்சியானதால் வேறு வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலையானது போல் இந்த வழக்கிலும் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணைகளே  முரண்பாடுகளோடு இருக்கிறது என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகிறது . 

உதாரணமாக வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எட்டு பேரில் ஐந்து பேர் (ஹர்பால், குல்தீப், சம்ஸ்வீர், சினில், வினோத் ) மீது மட்டுமே விசாரணை நடத்தப்பட்டது. அதோடு, இஸ்லாம் இறப்பதற்கு முன் போலீஸார் அவருடைய வாக்குமூலத்தை பதிவு செய்ய மறுத்தனர் என்று இஸ்லாமின் மகன் ஸாரிஃப் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறியுள்ளார். 

அவர்கள் தாக்கிய பின்னர் என்னுடைய தந்தை சில மணி நேரம் உயிரோடு இருந்தார். மோசமாக தாக்கப்பட்டிருந்தாலும் தன்னுடைய வாக்குமூலத்தை பதிவு செய்யும்படி போலீஸாரிடம் கேட்டார். தன்னை தாக்கியவர்களை அடையாளம் தெரியும் எனவும் சொன்னார். ஆனால், அவர்கள் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றார்கள். ஏனெனில் குற்றவாளிகளை பாதுகாக்கவே போலீஸார்  ஆரம்பம் முதல் முயன்றனர் என்றும்  இஸ்லாமின் மகன் ஸாரிஃப் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறியுள்ளார்.

  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here