கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் காணாமல்போய், கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் செயற்பாட்டாளர் முகிலன், இப்போது பாலியல் குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். முகிலன் காணாமல் போன பின்னணியும், அவர் மீதான குற்றச்சாட்டுகளும் அவரைப் பற்றி முரண்பட்ட சித்திரங்களை அளிக்கின்றன.

சமூக செயற்பாட்டாளராக அறியப்படும் முகிலன், ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்தவர். 1967ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்த முகிலனின் இயற்பெயர் சண்முகம். சென்னிமலையில் உள்ள குமரப்ப செங்குந்தர் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் பள்ளிப்படிப்பையும் பொள்ளாச்சியில் உள்ள நாச்சிமுத்து பல்தொழில்நுட்பப் பயிலகத்தில் சிவில் எஞ்சினீயரின் படிப்பில் டிப்ளமோவும் படித்தவர்.

சண்முகம் துவக்கத்தில் அரசுப் பணியில் இருந்ததாகவும் பிறகு அதனைவிட்டு வெளியேறியதாகவும் கூறப்பட்டாலும், அவர் நிரந்தர அரசுப் பணியில் இருந்தவர் இல்லை. கட்டடப் பொறியாளராக இருந்த காரணத்தால் ஒரத்துப்பாளையம் அணை கட்டும் பணிகள் நடைபெற்றபோது, அதில் தொகுப்பூதியத்திற்கு பணியாற்றினார் சண்முகம்.

இதற்குப் பிறகு அந்தப் பணியைவிட்டு, சென்னிமலை பகுதியிலேயே இறைச்சிக் கடை ஒன்றை நடத்தி வந்தார் அவர்.

இந்த காலகட்டத்தில், அதாவது 1987 – 88ல் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் மாவோயிசத்தை அடிப்படையாகக் கொண்ட மார்க்சிய லெனினிய கட்சியான தமிழ்நாடு மார்க்சிய லெனினிய கட்சி தீவிரமாக இயங்கிவந்தது. அதன் இளைஞர் அமைப்பான புரட்சிகர இளைஞர் முன்னணி என்ற அமைப்பில் இணைந்து செயல்பட ஆரம்பித்தார் சண்முகம்.

2006ஆம் ஆண்டுவரை இந்த அமைப்பில்தான் இணைந்து செயல்பட்டுவந்தார் அவர்.

இதற்கிடையில் காவிரி அச்சகம் என்ற அச்சகத்தை சொந்தமாக நடத்தினார் சண்முகம். அந்த காலகட்டத்தில்தான் தன் மனைவி பூங்கொடியைச் சந்தித்து, காதல் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு கார்முகில் என்ற மகனும் இருக்கிறார்.

முகிலன்என்றபெயர்வந்ததுஎப்படி?

சண்முகம் புரட்சிகர இளைஞர் முன்னணியில் இருந்த காலகட்டத்தில் தமிழ்நாடு மார்க்சிய லெனினிய கட்சியின் அமைப்பாளராக இருந்தவர் கார்முகில். இவரால் பெரிதும் ஈர்க்கப்பட்ட சண்முகம், தனது பெயரை முகிலன் என மாற்றிக்கொண்டார். பின்பு தன் மகனுக்கும் கார்முகில் என்றே பெயர் சூட்டினார்.

2006வாக்கில் புரட்சிகர இளைஞர் முன்னணியில் இருந்து வெளியேறிய முகிலன், சில காலம் தமிழ் தேசிய அமைப்புகளில் ஈடுபாடு காட்டி வந்தார்.

இதற்குப் பிறகு, சிப்காட் பகுதிகளில் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பான போராட்டங்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவான சிறுசிறு போராட்டங்களிலும் ஈடுபட்டுவந்தார் முகிலன்.

இந்த காலகட்டத்தில்தான் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, எஸ்.பி. உதயகுமார் ஒருங்கிணைத்த அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அவரது கவனத்தை ஈர்த்தது.

“2012 ஆகஸ்ட் – செப்டம்பரில் வாக்கில் எங்களை வந்து சந்தித்தார் முகிலன். போராட்டத்தில் இணைந்துகொள்ள விரும்புவதாகவும் விவசாயிகளுக்கான போராட்டங்களில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறினார். சேர்த்துக்கொண்டோம். 2014 மார்ச் 14ஆம் தேதிவரை எங்களுடன்தான் இருந்தார். இடிந்தகரையிலிருந்து வெளியில் வந்த பிறகு நான், மை.பா., புஷ்பராயன் தேர்தலில்போட்டியிட்டோம். அவர் அங்கேயே இருந்தார். பிறகு ஒரு கட்டத்தில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தை விட்டு விலகினார்.” என நினைவுகூர்கிறார் எஸ்.பி. உதயகுமார்.

இதற்குப் பிறகு, ‘அணுசக்தி எதிரான போராட்டக் குழு’ என்ற பெயரில் இயங்கிவந்தார் முகிலன். அதன்பின் இடிந்தகரை ஊரைவிட்டு போக முடிவுசெய்து அங்கிருந்து வெளியேறினார் அவர். இந்த காலகட்டத்தில் அவர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டன.

மீண்டும் ஊர் திரும்பிய முகிலன், 2014 செப்டம்பர் மாதத்தில் கே.ஆர். சுப்பிரணியன் என்பவர் ஒருங்கிணைத்த காவிரி பாதுகாப்பு இயக்கத்தில் இணைந்து, மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டார்.

பிறகு தமிழகம் முழுவதும் நடந்த சூழல் சார்ந்த போராட்டங்களிலும் பிற போராட்டங்களிலும் பங்கேற்றார் முகிலன். 2017ஆம் ஆண்டின் துவக்கத்தில் அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்துகொண்டபோது, காவல்துறையினரால் தான் கடுமையாகத் தாக்கப்பட்டதாக தெரிவித்தார் முகிலன்.

இதற்குப் பிறகு, தூத்துக்குடியில் நடந்த ஆழ்துளை கிணறுகளுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றபோது காவல்துறை அவரைக் கைதுசெய்தது.

இந்தக் கட்டத்தில் தன் மீதான வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர தானாக முன்வந்து திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார் முகிலன். அவரை சொந்த ஜாமீனில் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டும், அதை முகிலன் ஏற்க மறுத்ததால் பாளையங்கோட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

“அந்தத் தருணத்தில் நான் பார்க்கச் சென்றபோது, என்னைப் பார்க்க விரும்பவில்லை என்றுகூறிவிட்டார்” என்கிறார் உதயகுமார்.

ஆனால், வழக்குகள் அவர் நினைத்த வேகத்தில் நடக்கவில்லை. உடல்நலமின்மையால் திருநெல்வேலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மீண்டும் சிறைக்குத் திரும்பவில்லை. பிறகு மறுபடியும் சரணடைந்த முகிலன், ஓராண்டுவரை சிறையில் இருந்தார்.

“தனி மனிதராக சாகசம் செய்வது என்ற ஒரு இயல்பு அவரிடம் இருந்தது. தான் ஒரு ஆளுமையாக வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. அதைத் தவறெனச் சொல்ல முடியாது” என்கிறார்கள் அவருடன் நெருங்கிப் பழகியவர்கள்.

இந்த நிலையில்தான் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி சென்னையில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஆவணப் படம் ஒன்றை வெளியிட்டார் முகிலன். அன்று இரவு சென்னையிலிருந்து மதுரைக்கு ரயிலில் புறப்பட்ட முகிலன் அதற்குப் பிறகு காணாமல் போனார். முகிலன் கடத்தப்பட்டதாகவும் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் மனித உரிமை ஆர்வலர்கள், சூழல் செயல்பாட்டாளர்கள் போராட்டங்களை நடத்தினர்.

மனித உரிமை செயல்பாட்டாளரான ஹென்றி திபேன், வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் முகிலனைக் கண்டுபிடித்துத் தர வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை தமிழக காவல்துறையின் சிபிசிஐடி பிரிவு விசாரித்துவந்தது.

இந்த வழக்கு ஜூலை 8ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவிருந்த நிலையில் ஜூலை 6ஆம் தேதியன்று திருப்பதி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து கோஷமிட்டுக்கொண்டிருந்த முகிலனை ஆந்திர காவல்துறையினர் கைதுசெய்தனர். அவர்கள் அன்று இரவே தமிழக சிபிசிஐடி காவல்துறையினரிடம் முகிலனை ஒப்படைத்தனர்.

ஜூலை 7ஆம் தேதியன்று சென்னை சிபிசிஐடி வளாகத்தில் முகிலன் வைக்கப்பட்டிருந்தபோது, அவரது மனைவி, வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் உள்ளிட்டோர் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், முகிலன் இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகள் 417, 376ன் கீழ் கைதுசெய்யப்பட்டார். தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, பாலியல் ரீதியாக ஏமாற்றியதாக ஒரு பெண் அளித்த புகாரின் அடிப்படையில் முகிலன் கைதுசெய்யப்பட்டார்.

அன்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய முகிலன், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குக் காரணமாக காவல்துறை அதிகாரிகள்தான் தன்னைக் கடத்தியதாகக் குற்றம்சாட்டினார். இதன் பின்னணியில் வேதாந்தா நிறுவனம் இருப்பதாகவும் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக அவருடன் ஆரம்பகாலத்தில் இணைந்து செயல்பட்ட கி.வெ. பொன்னையன், கே.ஆர். சுப்பிரமணியன் போன்றவர்கள் எதிர்மறையான கருத்துகளை தெரிவிக்கிறார்கள். அவர் மீதான புகார்கள் உண்மையாக இருக்கக்கூடும் என்கிறார்கள் இவர்கள்.

ஆனால், எஸ்.பி. உதயகுமார் முகிலன் குறித்து நேர்மறையான கருத்தைக் கொண்டிருக்கிறார். “இடிந்தகரையில் இருந்த காலகட்டத்தில் அவர் மீது ஒரு புகார் வந்தது. அவருக்கும் இன்னொரு பெண்ணுக்கும் இடையில் நடந்ததாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் வெளிவந்தது. அதனை இருவருமே மறுத்தனர். இதற்குப் பிறகு 2 ஆண்டுகள் அங்கேயே இருந்தார். இடிந்தகரையிலிருந்து வந்த பிறகு எங்களுடன் காஷ்மீர், அசாம் ஆகிய இடங்களுக்கு வந்திருக்கிறார். ஆனால், ஒரு முறைகூட பெண்களிடம் தவறாக நடந்துகொண்டார் எனக் கூறமுடியாது” என்கிறார் உதயகுமார்.

ஆனால், ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஈடுபட்டதால்தான் அவர் கடத்தப்பட்டார் என்பதை பலரும் ஏற்க மறுக்கிறார்கள். அவர் காணாமல் போன காலகட்டத்தில் என்ன நடந்தது என்பதை அவர் தெளிவாகத் தெரிவிக்க வேண்டுமென்கிறார்கள் அவர்கள்.

முகிலன் காணாமல் போனவுடன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த வழக்கறிஞரான சுதா ராமலிங்கம், சென்னையில் போலீஸ் காவலில் இருந்தபோது சென்று சந்தித்தார். “அப்போது அவர் எதுவும் சொல்லவில்லை. நன்றி என்று மட்டும் கூறினார். இத்தனை நாட்களாக எங்கே இருந்தீர்கள் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை. மாஜிஸ்ட்ரேட்டிம் சொல்வதாகக் கூறினார். அதற்குப் பிறகு நான் வலியுறுத்தவில்லை” என்கிறார் சுதா ராமலிங்கம்.

இப்போது, பாலியல் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கும் முகிலன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். தான் காணாமல்போன காலகட்டம் குறித்து முகிலன் தெளிவாகக் கூறாதவரை, அவர் மீதான சந்தேகம் முழுமையாக விலகப்போவதில்லை.

Courtesy: BBC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here