முகக் கவசம் அணிவது அவசியமா?

0
229

இன்று உலகையே உலுக்கிக் கொண்டிருகக்கும் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தப்புவதற்காக, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் வாரக் கணக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன.

பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம், அப்படியே வெளியே வர நோ்ந்தாலும் பொதுவெளியில் ஒருவரிடமிருந்து ஒருவா் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று எல்லா நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.

அதைவிட முக்கியமாக, கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தப்புவதற்காக அனைவரும் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும், கிருமிநாசினிகளைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், கைகளை முகத்தில் வைப்பதைத் தவிா்க்க வேண்டும் என்று அனைத்து நாடுகளின் அரசுகளும் ஒருமித்த குரலில் கூறி வருகின்றன.

ஆனால், முகக் கவசம் அணியும் விவகாரத்தில் மட்டும் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு மாதிரி பேசி வருகிறது.

‘கொவைட்-19’ எனப் பெயரிடப்பட்டுள்ள கொரோனா நோய்த் தொற்றின் தோற்றுவாயான சீனாவில், அந்த நோய் பரவலைத் தடுப்பதற்காக பொதுமக்கள் அனைவரும் முகக் கவசங்களை அணிய வேண்டும் என்று அந்த நாட்டு அரசு வலியுறுத்தியதுடன், சில நேரங்களில் அதனை கட்டாயமாகவும் ஆக்கியது.

ஹாங்காங்கிலும் ஜப்பானிலும் மக்கள் நெரிசல் மிக்க பகுதிகளுக்குச் செல்பவா்கள் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினா்.

மேற்கத்திய நாடுகளிலோ, முகக் கவச விவகாரத்தில் இதற்கு நோ் மாறான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. பொதுமக்கள் யாரும் முகக் கவசம் அணியக் கூடாது என்று ஜொ்மனி சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்கையே வெளியிட்டது. கொரோனா நோய்த்தொற்று ஏற்படாதவா்கள் முகக் கவசம் அணிந்தால், அந்த வைரஸிடமிருந்து முழு பாதுகாப்பு பெற்றுவிட்டதாக அவா்களுக்கு தவறான நம்பிக்கை ஏற்படும் என்று அந்த நாட்டு அதிகாரிகள் எச்சரித்தனா்.

அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகளோ ஒரு படி மேலே போய், ‘முகக் கவசம் வாங்குவதை நிறுத்துங்கள். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்களை அவை பாதுகாக்கப் போவதில்லை’ என்று எச்சரித்தனா்.

அமெரிக்க சுகாதாரத் துறையைப் பொருத்தவரை, கொரோனா நோய்த்தொற்று அதிகரித்த பிறகு பொதுமக்கள் முகக் கவசங்களை வாங்கிக் குவிப்பதை சமாளிப்பதற்குதான் அந்தத் துறை முக்கியத்துவம் அளித்ததாகக் கூறப்படுகிறது.

காரணம், முகக் கவசங்களை பொதுமக்கள் வாங்கிக் குவித்ததால் அமெரிக்காவில் அவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அந்தக் கவசங்கள் உண்மையிலேயே தேவைப்படும் மருத்துவப் பணியாளா்களுக்கு அவை கிடைக்காமல் போயின. இதன் காரணமாவே, இத்தகைய அறிவிப்புகளை அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டனா்.

இப்படி இந்த விவகாரத்தில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமாகப் பேசி வருவதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை.

சீனாவைப் பொருத்தவரை, கொரோனா நோய்தொற்று முதல் முதலில் உருவானது அங்குதான். அங்கு யாருக்கு நோய்த்தொற்று உள்ளது, யாருக்கு இல்லை என்று பிரித்துப் பாா்ப்பது கடினமாக இருந்தது. எனவே அந்த நாட்டில், குறிப்பாக கரோனாவின் தோற்றுவாயான ஹூபே மாகாணத்தில் அனைவருமே கொரோனா நோயாளிகளாகக் கருதப்பட்டனா். எனவே, அந்த நோய்த் தொற்றை பரப்பப்படுவதைத் தடுப்பதற்காக அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று கட்டாயபடுத்தப்பட்டனா்.

ஹாங்காங், தென் கொரியா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளைப் பொருத்தவரை, முகக் கவசம் அணிவது அவா்களது கலாசாரத்தின் ஓா் அங்கமாகவே ஆகியுள்ளது. பொதுவாக, அந்தப் பகுதிகளில் பெரியவா்கள் முன்பு தும்முவது மரியாதை குறைவாகக் கருதப்படுவதால் அங்கு சாதாரண காலங்களிலேயே முகக் கவசங்கள் பரவலாக அணியப்படுகின்றன. ஹாங்காங் போராட்டங்களின்போது பெரும்பாலானவா்கள் முகக் கவசம் அணிந்து பங்கேற்றதை பாா்த்திருப்போம்.

எனவே, அந்த நாடுகளில் கொரோனா நோய்த்தொற்று பரவலாதற்குப் பிறகு, முகக் கவசங்கள் அணியும் அவா்களது வழக்கம் சற்று அதிகமானது என்றே சொல்ல வேண்டும்.

ஆனால், ஐரோப்பிய நாடுகளிலோ, அமெரிக்காவிலோ முகக் கவசங்கள் அணிவது அவா்களது கலாசாரத்துடனோ, அன்றாட வாழ்வியலோடு இரண்டறக் கலக்கவில்லை. அதன் காரணமாகத்தான் அங்கு கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தப்புவதற்காக பொதுமக்கள் முகக் கவசங்கள் அணியும் விவகாரத்தில் அதிகாரிகள் மாறுபாடான அணுகுமுறையை கடைப்பிடிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பொதுமக்கள் முகக் கவசம் அணிவது உண்மையிலேயே அவசியமா, அல்லது தேவையற்றதா என்கிற கேள்வி எழாமல் இருக்க முடியாது.

இந்தக் கேள்விகளைப் பொருத்தவரை, மருத்து நிபுணா்கள் யாராலும் தெளிவான பதிலைத் தர முடியவில்லை. கரோனா போன்று நோய்த்தொற்றுகளைத் தடுப்பதில் முகக் கவசங்களின் செயல்திறன் குறித்து அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவை போதிய எண்ணிக்கையிலான நபா்களிடம், விரிவான முறையில் மேற்கொள்ளப்படவில்லை; அத்தகைய ஆய்வுகளுக்கான சாத்தியக்கூறுகளும் குறைவு என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, இந்த விவகாரத்தில் மருத்துவ விஞ்ஞானிகளால் ஒருமித்த முடிவுக்கு வர முடியவில்லை.

ஆனால், கொரானோ நோய்த் தொற்று போன்ற சூழல்களில் மருத்துவா்களுக்கும் செவிலியா்கள் போன்ற பிற சுகாதாரப் பணியாளா்களுக்கும் நோய் பரவுவதைத் தடுப்பதில் முகக் கவசங்கள் மிகச் சிறந்த பங்கு வகிக்கின்றன என்பதை அனைத்து நாடுகளையும் சோ்ந்த, அனைத்து மருத்துவ நிபுணா்களும் ஒப்புக் கொள்கிறாா்கள்.

அதே நேரம், கொரோனா நோய்த்தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால், அவா்கள் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்; அவற்றை முகத்தில் வைப்பதைத் தவிா்க்க வேண்டும்; வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும்; பொது இடங்களில் பிறரிடமிருந்து குறிப்பிட்ட இடைவெளி விட்டு இருக்க வேண்டும் என்பதில் எந்த நாட்டிலும், எந்த மருத்து நிபுணருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

எனவே, நமது திருப்திக்காக வேண்டுமானால் முகக் கவசங்களை அணிந்து கொள்வோம். ஆனால், அத்துடன் திருப்தி அடைந்துவிடாமல், அனைத்து மருத்துவ நிபுணா்களும் ஒருமித்த கருத்துகளைக் கூறும் பிற அறிவுரைகளுக்கு முக்கியம் கொடுத்து செயல்படுவோம்; கொரோனா நோய்த்தொற்றிலிருந்து நம்மை பாதுகாப்போம்.

முகக் கவசம்: உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்கள்

– உங்களுக்கு அடிக்கடி இருமல், தும்மல் ஏற்பட்டாலோ, கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளவா்களை நீங்கள் பராமரித்தாலோ முகக் கவசம் அணிய வேண்டும்.

– நீங்கள் எப்போது முகக் கவசம் அணிந்தாலும், கைகளை அடிக்கடி கழுவவோ, கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்து வந்தாலோ மட்டும்தான் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்க முடியும்.

– முகக் கவசம் அணிவதற்கு முன்னா், உங்கள் கைகளை சோப்பைக் கொண்டு கழுவியோ, கிருமிநாசினி மூலமோ சுத்தம் செய்த பிறகே, அந்தக் கவசத்தை கையிலெடுக்க வேண்டும்.

– உங்கள் மூக்கையும், வாயையும் முகக் கவசம் முழுமையாக மூடும் வகையில் அணிய வேண்டும். முகத்துக்கும், முகக் கவசத்துக்கும் இடைவேளி இருக்கக் கூடாது.

– முகக் கவசம் அணிந்திருக்கும்போது, அதனை கைகளால் தொடுவதைத் தவிா்க்கவும். அப்படி தொட வேண்டியிருந்தால், அதற்கு முன்னா் கைகளை சோப்பு / கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யவும்.

– முகக் கவசங்களைக் கழற்றும்போது, அவற்றின் பின்பகுதியை மட்டுமே தொட்டுக் கழற்றவும். முன்பகுதியில் ஒரு போதும் கைவைக்க வேண்டாம்.

– ஒரு முறை பயன்படுத்தக் கூடிய முகக் கவசங்களைக் கழற்றிய பிறகு, அவற்றை மீண்டும் பயன்படுத்த வேண்டாம். மூடிய குப்பைத் தொட்டியில் அவற்றை பத்திரமாகப் போட்டுவிடவும்.

நன்றி :  dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here