மீன் விற்றுக்கொண்டே எம்பிபிஎஸ் படிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை என்று ஆன்லைனில் மீன் விற்கத் தொடங்கியுள்ள ஹனன் ஹமீது தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஹனன் ஹமீது. 21 வயதான இவர், கல்லுாரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு கெமிஸ்ட்ரி படித்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஹனன், குடும்பத்தை காப்பாற்றவும் படிப்பு செலவுகளைச் சமாளிக்கவும் கல்லுாரி முடிந்த பின் மீன் விற்பனை செய்து வந்தார். இவரை பற்றி மலையாள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது. இதையடுத்து அவருக்குப் பாராட்டுகள் குவிந்தன. பலர் உதவ முன் வந்தனர். இருந்தாலும் தன்னை பிரபலப்படுத்துவதற்காக, திட்டமிட்டு இதை செய்கிறார் என்ற விமர்சனமும் அவர் மீது எழுந்தது. அவரை அவதூறாக சமூக வலைத்தளத்தில் பலர் விமர்சித்தனர். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஹனனைஅழைத்து, உதவி செய்தார். பின்னர் அவரை,கேரள அரசின் மகள் என்றார். இதையடுத்து அவரை கடுமையாக விமர்சித்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் அவருக்கு உதவும் பொருட்டு சினிமாவில் நடிக்க சில இயக்குனர்கள் வாய்ப்புகள் அளித்தனர். பொதுநிகழ்ச்சிகளில், சிறப்பு விருந்தினராகவும் அழைக்கப்பட்டார்.

இந்நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வடகராவில் கடை திறப்பு நிகழ்ச்சியில், செப்டம்பர் மாதம் பங்கேற்றார் ஹனன். நிகழ்ச்சி முடிந்து திருச்சூர் நோக்கி சென்றுகொண்டிருந்த போது, அவர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில், ஹனன் படுகாயம் அடைந்தார். முதுகு தண்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது நலமாகிவிட்டார்.

இந்நிலையில் தெருவில் வைத்து மீன் விற்ற இவர், ஒரு கடையை வாடகைக்கு எடுத்து மீன் விற்க முடிவு செய்திருந்தார். இதற்காக எர்ணா குளம் அருகில் உள்ள தம்மனம் பகுதியில் ஒரு கடையை பேசி அட்வான்ஸ் கொடுத்திருந்தார். கடை உரிமையாளருக்கும் அவர் உறவினர்க ளுக்கு ஏதோ பிரச்னை. இதையடுத்து உரிமையாளரின் உறவினர்கள் கடையை திறக்க எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதனால் அத் திட்டத்தை கைவிட்டார் ஹனன்.

இதையடுத்து ஆன்லைனில் மீன் விற்க முடிவு செய்தார். இந்த விற்பனையை கொச்சி அருகிலுள்ள தம்மனம் பகுதியில் புதன்கிழமை தொடங்கி னார். தேசிய விருது பெற்ற நடிகர் சலீம்குமார் திறந்து வைத்தார். மீன்களை வாங்கி சுத்தம் செய்து, மசாலா சேர்த்து, அப்படியே சமையல் செய் வது போல, பாக்கெட்டில் அடைத்து விற்க முடிவு செய்துள்ளார். தொடக்க விழா அன்று அவருக்கு 3,500 ரூபாய் வருமானம் கிடைத்தது.

பின்னர் ஹனன் ஹமீது கூறும்போது, ’டிகிரியை முடித்துவிட்டு ’நீட்’பயிற்சி பெற இருக்கிறேன். நான் சுமாரான மாணவிதான். கொஞ்சம் கஷ்டப்பட்டு படித்தால் நன்றாக மார்க் வாங்குவேன். எம்பிபிஎஸ் படிக்க வேண்டும் என்பது என் நோக்கம். மீன் விற்றுக்கொண்டே படிப்பையும் தொடர்வேன். மீன் விற்பது லாபகரமானதாக இருக்காது என்று பலர் நம்புகின்றனர். அதை தவறு என்று உணர்த்துவேன்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here