ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தால் கடும் அதிருப்தி அடைந்துள்ள காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள், இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் பூமிக்கடியில் இருக்கும் திரவ, வாயு கரிமங்களை (கார்பன்) கண்டறியும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது.

இதனடிப்படையில், புதுவையில் உள்ள பாகூர் முதல் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வரை 28,000 மில்லியன் டன் அளவுக்கு நிலக்கரியும், 98,000 கோடி கன மீட்டர் அளவுக்கு எரிவாயுவும் இருப்பதாக கண்டுபிடித்த மத்திய அரசு, இவற்றை எடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் புதிய பெட்ரோல் – எரிவாயு கிணறுகள் அமைப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டபோது மக்களிடம் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

ராமநாதபுரத்தில் மன்னார் வளைகுடா பகுதியில் பறவைகள் சரணாலயம், குடியிருப்புகள் அமைந்துள்ள இடங்களில் 22 புதிய கிணறுகள் அமைக்க 2015-இல் நடத்திய கருத்துக் கேட்பு கூட்டம், பொதுமக்கள் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மக்களின் எதிர்ப்பின் காரணமாக ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் புதிய கிணறுகளுக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்க மறுத்தது.
கடலூர் மாவட்டத்தில் 14 புதிய கிணறுகள் அமைப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் 2016-ஆம் ஆண்டு, ஜூலை 8-ஆம் தேதி காட்டுமன்னார்கோவிலில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை, பருவநிலை மாற்றத்துக்கான நிபுணர்கள் மதிப்பீட்டுக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, அந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.
மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்பட்டதாகவே காவிரி டெல்டா விவசாயிகள் நம்பி வந்தனர். இந்த நிலையில், மீண்டும் மீத்தேன் திட்டம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் எண்ணெய் வளங்களைக் கண்டறிந்து உற்பத்தி செய்வதற்காக ஹைட்ரோ கார்பன் வளங்களைக் கண்டறிதல் மற்றும் உரிமம் வழங்கும் புதிய கொள்கையை மத்திய அரசு 30.3.2016 அன்று அறிமுகம் செய்தது.
அனைத்து வகையான ஹைட்ரோ கார்பன் வளங்களையும் ஒரே உரிமத்தின் மூலம் கண்டறிந்து எடுப்பதுதான் இந்தக் கொள்கையின் நோக்கமாகும். அதன்படி திறந்தவெளி நிலப்பரப்பு உரிமக் கொள்கை மூலம் இந்தத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு  முடிவெடுத்தது.
இதையடுத்து, நாடு முழுவதும் 55 புதிய வட்டங்களில் ஹைட்ரோ கார்பன் வளங்களை எடுக்க கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

ஒட்டுமொத்தமாகப் பெறப்பட்ட 110 விண்ணப்பங்களிலிருந்து 6 நிறுவனங்களின் 55 விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவதை இறுதி செய்வதற்கான ஹைட்ரோ கார்பன் இயக்ககத்தின் கூட்டம் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் தில்லியில் நடைபெற்றது.


நாட்டில் 36 மண்டலங்களை நிலப் பரப்பிலும், 4 மண்டலங்களை மேற்கு கடற்கரையோரப் பகுதிகளிலும், 5 மண்டலங்களை கிழக்கு கடற்கரையோரப் பகுதியிலும் அமைத்து, கிணறுகள் தோண்ட திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 3 மண்டலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் காவிரி டெல்டா பாசனப் பகுதியில் கடற்கரை ஓரத்தில் 1,794 சதுர கி.மீ. பரப்பளவில் விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்திலிருந்து கடலூர் வரை ஒரு மண்டலம் அமைக்கப்படுகிறது.

இதேபோல, 2,574 சதுர கி.மீ. பரப்பளவில் பரங்கிப்பேட்டையிலிருந்து வேதாரண்யம் வரை 2-ஆவது மண்டலம் அமைக்கப்படுகிறது. இந்த 2 மண்டலங்களுக்கும் உரிமம் பெற்ற வேதாந்தா நிறுவனம், மத்திய அரசிடம் ஒப்பந்தம் செய்துள்ளது. 3-ஆவதாக 731 சதுர கி.மீ. பரப்பளவில் குள்ளஞ்சாவடி முதல் தரங்கம்பாடி வரை ஒரு மண்டலத்தை உருவாக்கி, அதுதொடர்பாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டது.

அனைத்து ஒப்பந்தங்களும் கடந்த அக்.1-ஆம் தேதி புதுதில்லியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன.
இது விவசாயிகளிடையே மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்க மாநில பொதுச் செயலர் பெ.ரவீந்திரன் கூறியதாவது: புதிதாக அமைக்கப்பட உள்ள ஹைட்ரோ கார்பன் கிணறுகளில் இருந்து கச்சா எண்ணெய், மீத்தேன், பாறை எரிவாயு உள்ளிட்ட அனைத்து ஹைட்ரோ கார்பன் வளங்களையும் எடுக்கலாம்.

காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன், ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட மாட்டாது என பல முறை நாடாளுமன்றத்தில் உறுதியளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தற்போது விவசாயிகளுக்கு விரோதமாக ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதியளித்து ஒப்பந்தம் கையெழுத்திட்டது கண்டிக்கத்தக்கது.


காவிரி பாசன மாவட்டங்கள் வளம் கொழிக்கும் பூமியாக உள்ளது. விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் அதற்கு எதிராக செயல்படுவதை அனுமதிக்க முடியாது.
ஏற்கெனவே ஆய்வு செய்த இடங்களில் மேற்கொண்டு எவ்வித பணிகளும் தொடர அனுமதிக்க மாட்டோம்.
மத்திய அரசின் இந்தத் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசும் துணை போவதாகக் கருதுகிறோம். இதனால்தான் கடைமடை பாசனப் பகுதிகளுக்கு போதிய பாசன நீரை வழங்காமல் தமிழக அரசு தாமதம் செய்து வந்தது. 
விளைநிலங்களை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்கக்  கூடாது.

காவிரி பாசனப் பகுதிகளில்  மீத்தேன், ஷேல் எரிவாயு எடுப்பதற்கான ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தும் முடிவை கைவிட மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும். 
அதற்காக வழங்கிய உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். காவிரி பாசனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என்றார் அவர்.

courtesy:dinamani

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்