மேற்குவங்கத்தில் இன்று நடைபெறும் பாஜக கூட்டத்தில் கலந்து கொள்ள உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் தரையிறங்க மம்தா பானர்ஜி அனுமதி மறுத்து விட்டார். ஜார்க்கண்ட் வரை ஹெலிகாப்டரில் பயணம் செய்து அங்கிருந்து காரில் மேற்கு வங்கத்தில் இருக்கும் புருலியா சென்றடைந்தார். இதையடுத்து காரில் சென்ற யோகி ஆதித்யநாத் அங்கு உரையாற்றி வருகிறார்.

2019 மக்களவைத் தேர்தலையொட்டி, மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக 200 தேர்தல் பொதுக்கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாகப் பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன்பு துர்காபூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

ஞாயிற்றுக்கிழமை , மால்டா மாவட்டம், வடக்கு தினாஜ்பூரில் பாஜக பேரணி நடைபெற்றது. இதில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்க இருந்தார். அவருடைய ஹெலிகாப்டர் தரையிறங்க மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்துவிட்டது.

இதனால், உத்தர பிரதேச முதல்வர் வருகை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, காணொலிக் காட்சி மூலம் ஆதித்யநாத் பேரணியில் உரையாற்றினார்.

இன்றும் மேற்குவங்க மாநிலம் புருலியாவில் யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் தரையிறங்க மேற்குவங்க அரசு மீண்டும் அனுமதி மறுத்து விட்டது. எனவே, ஜார்க்கண்ட் மாநிலம் போகாரோ வரை ஹெலிகாப்டரில் சென்று, அங்கிருந்து காரில் புருலியாசென்றார் ஆதித்யநாத்.

பொதுக்கூட்டத்தில் பேசி வரும் யோகி ஆதித்யநாத் ‘‘பழிவாங்கல், வன்முறை, ஊழலில் ஈடுபடும் மம்தா பானர்ஜி பாஜகவை பார்த்து பயப்படுவது இயல்பு தான். இதுபோன்ற நடவடிக்கைகளால் மேற்குவங்கத்தில் பாஜக வளருவதை அவரால் தடுக்க முடியாது. மேற்கு வங்க அரசு ஊழலால் நிறைந்துள்ளது. மம்தா பானர்ஜி முகரம் பண்டிகைக்கு அனுமதி கொடுக்கிறார். துர்கா பூஜைக்கு அனுமதி கொடுப்பதில்லை. ஹெலிகாப்டருக்கு அனுமதி அளிக்காததால் ரோடு வழியாக வந்தேன். மாநில முதல்வரே போராட்டத்தை நடத்துவது என்பது வெட்க கேடானது என்றார்.

முன்னதாக யோகி ஆதித்யநாத்தின் வருகைக் குறித்து கருத்து தெரிவித்த மம்தா பானர்ஜி ஆதித்யநாத்தை உத்தர பிரதேச நிர்வாகத்தை கவனிக்க பாஜக தலைமை கூற வேண்டும். அவர் மாநிலத்தை நிர்வகித்து விட்டு மேற்குவங்கத்துக்கு வரட்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here