வெங்கட் பிரபு, பார்ட்டி படத்தை முடித்த பின்னர் அடுத்து சிம்புவுடன் மாநாடு படத்துக்காக இணைந்து கொண்டார். இத்திரைப்படம், அரசியலை மையப்படுத்தி உருவாகஇருந்தது.இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தமானார்.

மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் பல மாதங்களாக சினிமா படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது.  ஆனால் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி,  காலமும் நேரமும் கடந்துகொண்டே போவதால் படத்தைக் கைவிடுவதாக சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார்.

மேலும் வெங்கட் பிரபு இயக்க மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு விரைவில் தொடங்கும் என்றும் அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறியிருந்தார்.

மாநாடு படம் கைவிடப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில் ‘மகா மாநாடு’ என்ற படத்தை தானே தயாரித்து, இயக்கி, நடிக்கவும் சிம்பு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்தப் படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் ரூ.125 கோடி செலவில் 5 மொழிகளில் படமாக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் நடிகர் சிம்பு இன்று(திங்கள்கிழமை) பிறந்தநாள் காணும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் மாநாடு படத்தில் மீண்டும் இணைய சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மீண்டும் சிம்பு, சுரேஷ் காமாட்சி, வெங்கட் பிரபு கூட்டணி இணைந்து விரைவில் மாநாடு படத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.