மீண்டும் சோதனை நடத்திய வட கொரியா

0
291

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் அணுகுண்டுகளை சோதித்து உலக நாடுகளுக்கு வடகொரியா சிம்மசொப்பனமாக விளங்கி வந்தது.

ஆனால் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் முதல் முறையாக சந்தித்து பேசிய பிறகு, வடகொரியா அடாவடி போக்கை கைவிட்டு, அமைதிக்கு திரும்பியது.

எனினும் வடகொரியா அணுஆயுதங்களை முழுமையாக கைவிடுவது, அதற்கு பிரதிபலனாக அந்நாடு மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளை திரும்பப்பெறுவது தொடர்பான விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து உரசல் நீடிக்கிறது.

இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இருநாட்டு தலைவர்களின் 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்ததால் நிலைமை மேலும் மோசமானது.

இந்த சூழலில் கடந்த மாத இறுதியில் தென்கொரியா சென்றிருந்த டிரம்பை, யாரும் எதிர்பாராத வகையில் கொரிய எல்லையில் வட கொரியா தலைவர் கிம் ஜாங் அன் சந்தித்தார்.

அப்போது அணுஆயுத விவகாரம் தொடர்பான இருதரப்பு பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை 2 வாரங்களில் தொடங்கும் என அமெரிக்கா கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது.

இந்த நிலையில், வடகொரியா நேற்று ஒரே நாளில் 2 குறுகிய தூர ஏவுகணைகளை சோதித்து பார்த்ததாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து தென்கொரிய ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

வடகொரியாவின் கிழக்கு கடலோரத்தில் அமைந்துள்ள வோன்சன் நகரில் இருந்து உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.34 மணிக்கு ஒரு ஏவுகணையும், 5.57 மணிக்கு மற்றொரு ஏவுகணையும் ஏவப்பட்டன. இந்த 2 ஏவுகணைகளும், 50 கிலோமீட்டர் வரையிலான உயரத்தில், 430 கிலோமீட்டர் தூரம் பறந்துச்சென்று ஜப்பான் கடல் பகுதியில் விழுந்தன.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும், வடகொரியா ஏவிய ஏவுகணைகள் குறித்து அமெரிக்க ராணுவமும், தங்கள் நாட்டு ராணுவமும் ஆய்வு செய்து வருவதாகவும், வடகொரியா மேலும் சில ஏவுகணைகளை ஏவுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. அதே போல் வடகொரியா சோதித்து பார்த்த 2 ஏவுகணைகளில் ஒன்று புதிய ரக ஏவுகணை என்றும், அது பற்றி ஆராய்ந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதே சமயம் வடகொரியா ஏவிய ஏவுகணைகள் தங்கள் நீர்பரப்பில் விழுந்தனவா? என்பதும் குறித்தும், இதனால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கிறதா? என்பது குறித்தும் ஜப்பான் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை. மேலும், ஏவுகணைகள் சோதனையை வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் நேரில் பார்வையிட்டாரா? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

அமெரிக்காவும்-தென்கொரியாவும் இணைந்து, கொரிய தீபகற்பத்தில் கூட்டு ராணுவ பயிற்சியில் மீண்டும் ஈடுபட்டால், அணுஆயுத மற்றும் நீண்டதூர ஏவுகணை சோதனைகளை 20 மாதங்களாக நிறுத்திவைத்துள்ள நிலையை மறுஆய்வு செய்ய நேரிடும் என வடகொரியா ஏற்கனவே எச்சரித்து இருந்தது.

எனவே, அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே வடகொரியா 2 குறுகிய தூர ஏவுகணைகளை சோதித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. வடகொரியாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்து உள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here