இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி, புனேவில் நடைபெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்நிலையில்,  இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், கோலி  295 பந்துகளில்  இரட்டை சதம் அடித்தார். இது டெஸ்ட் போட்டிகளில் அவரது 7 வது சர்வதேச இரட்டைச் சதமாக அமைந்தது. இதன் மூலம் 6 இரட்டைச் சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோரின் சாதனையை கோலி முறியடித்தார்.

மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தனது முந்தைய தனிநபர் அதிகபட்ச ஸ்கோரான 243-ஐ கடந்து 254 சேர்த்தார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை 150 ரன்களுக்கும் மேல் ரன் குவித்த கேப்டன் என்ற சாதனை படைத்தார். ஜாம்பவான் வீரர் டான் பிராட்மேன் 8 முறை 150 ரன்களுக்கு மேல் ‌சேர்த்த சாதனையையும் அவர்  முறியடித்தார்.

இந்நிலையில், இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் 3 வது டெஸ்ட் போட்டி, நாளை(சனிக்கிழமை) ராஞ்சியில் ஆரம்பிக்கிறது. இந்தப் போட்டியில் விராட் கோலி மேலும் ஒரு புதிய  சாதனையை எட்டவுள்ளார். இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சதம் அடிக்கும் பட்சத்தில் டெஸ்ட் அரங்கில் அதிக சதங்கள் விளாசிய கேப்டன்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறுவார்.

டெஸ்ட் அரங்கில் அதிக சதங்கள் அடித்த கேப்டன்கள் பட்டியலில் 19 சதங்கள் அடித்து இரண்டாவது இடத்தில் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் இருந்தார். அவருடைய சாதனையை இந்திய கேப்டன் விராட் கோலி சமன் செய்துள்ளார். 3-வது டெஸ்டில் விராட் கோலி ஒரு சதம் அடிக்கும் பட்சத்தில் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்து இரண்டாம் இடத்திற்கு முன்னேறுவார். 

இந்த பட்டியலில் 25 சதங்களுடன் முன்னாள் தென் ஆப்பிரிக்க கேப்டன் கிரேம் ஸ்மித் முதலிடத்திலும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆகியோர் 19 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஆலன் பார்டர் ஆகியோர் 15 சதங்களுடன் மூன்றாவது இடத்திலும் ஆஸ்திரேலியாவின் பிராட்மேன் 14 சதங்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here