‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு வரும் 12ஆம்   தேதி முதல் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 2021-ல் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மீண்டும் கமல் – ஷங்கர் கூட்டணியில் தொடங்கப்பட்ட படம் ‘இந்தியன் 2’. படப்பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டது. படத்தின் பட்ஜெட், கமலுக்கான மேக்கப் உள்ளிட்ட பல சிக்கல்கள் எழுந்தன. இதனால் மீண்டும் எப்போது படப்பிடிப்பு என்பதே தெரியாமல் இருந்தது.

இந்நிலையில், சென்னை வந்த லைகா நிறுவனர் சுபாஷ்கரன் இயக்குநர் ஷங்கரைச் சந்தித்து பேசினார் . இதில் இத்திரைப்படத்தின் பட்ஜெட் 200 கோடி என்பது உறுதிச் செய்யப்பட்டது. இதனால் மீண்டும் ‘இந்தியன் 2’ பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சித்தார்த், நெடுமுடி வேணு, காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் கமலுடன் நடிக்கவுள்ளனர். அனிருத் இசையமைக்கவுள்ளார்.

ஆனால் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்த ரவிவர்மன்  படத்தின் தாமதத்தால் தற்போது அதிலிருந்து விலகிவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை.

தற்போது மீண்டும் படப்பிடிப்பை வரும் 12ஆம் தேதி முதல் தொடங்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் ஷங்கர். இதற்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஏப்ரல்2021-ல் ’இந்தியன் 2’ வெளியிடலாம் என முடிவு செய்துள்ளனர்.

அதே நேரம் இந்தியன் 2-ல் கவனம் செலுத்திக் கொண்டே, தனது ‘தலைவன் இருக்கின்றான்’ படத்திலும் நடித்து, இயக்க முடிவு செய்துள்ளார் கமல்ஹாசன்.