இயக்குநர் மிஷ்கின் மூன்று வருடங்கள் காக்க வைத்து ஏமாற்றிவிட்டார். கொடுத்த அட்வான்ஸ் பணத்தையும் தரவில்லை என இளம் நடிகர் மைத்ரேயா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அடுத்து உன்னை வைத்துதான் படம் எடுப்பேன் என்று மிஷ்கின் இளம் நடிகர்களுக்கு வாக்குறுதி தருவதும், மிஷ்கின் படத்தில் நடித்தால் ஒரு பிரேக் கிடைக்கும் என சம்பந்தப்பட்ட நடிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருப்பதும், கடைசியில் அவர்களை கண்டு கொள்ளாமல் வேறு நடிகருடன் மிஷ்கின் கைகோர்ப்பதும் அடிக்கடி நடந்து வருகிறது. சமீபத்தில் அப்படி காத்திருந்து காயப்பட்டவர் நடிகர் சாந்தனு. நடிகர் மைத்ரேயாவும் மிஷ்கினால் ஏமாற்றப்பட்டுள்ளார். அது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மைத்ரேயா. மிஷ்கினின் சவரக்கத்தி படவிழாவில், எனது அடுத்தப் படத்தின் நாயகன் என்று மிஷ்கினால் அறிமுகப்படுத்தப்பட்டவர் இவர்.

“என் பெயர் மைத்ரேயா. இயக்குநர் மிஷ்கின் கொடுத்த பெயர். ஜூலை 10, 2015 அன்று மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்துக்கான ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் நான் ஹீரோ. என் தந்தையின் நிறுவனம்தான் தயாரிப்பதாக இருந்தது. இதற்காக ஒரு மிகப்பெரிய தொகையை மிஷ்கினுக்கு என் தந்தை அட்வான்ஸாகக் கொடுத்தார். எந்தவொரு தயாரிப்பாளரும் ஒரு இயக்குநருக்கு இவ்வளவு பெரிய தொகையை அட்வான்ஸாகக் கொடுத்திருக்க மாட்டார்கள். இந்தப் படம் ஒப்பந்தமான பிறகு, இனி நான் தான் உனக்கு அப்பா, அம்மா, குரு, பிதாமகன் எல்லாம் என்று மிஷ்கின் என்னிடம் சொன்னார்.

இந்நிலையில் என் தந்தையிடம் மிஷ்கின் ஒரு கோரிக்கை வைத்தார். அதாவது சவரக்கத்தி என்ற ஒரு படத்தை தான் தயாரிப்பதாகவும் அந்தப் படம் முடிந்த பிறகு நவம்பர் 2015-ல் இந்தப் படத்துக்கான வேலைகளைத் தொடங்குகிறேன் என்பதே அந்தக் கோரிக்கை. ஆனால் அந்த கெடுவுக்குள் அவரால் அந்தப் படத்தை முடிக்க முடியவில்லை. அதன் பிறகு மார்ச் 2016-ல் மிஷ்கினுடன் பேசிக் கொண்டிருக்கும்போது விஷாலுடன் ஒரு படம் பண்ண வேண்டியுள்ளது. எனக்கு ஒரு 6 மாதம் வேண்டும் என்று கூறினார். ஒப்பந்தப்படி எங்களுக்குத்தான் முதலில் படம் பண்ண வேண்டும் என்று உள்ளது என்று நான் கூறியதற்கு, ஒரு தந்தை மகனிடம் கேட்கும் உதவியாக நினைத்து இந்த உதவியை எனக்கு செய் என்றார். சினிமா மீது சத்தியமாக துப்பறிவாளனுக்குப் பிறகு உன்னோடுதான் படம் பண்ணுவேன். அதில் நீ தான் ஹீரோங என்று வாக்குறுதி கொடுத்தார். இதை என் தந்தையிடம் கூறினேன். தந்தையும் ஆறு மாதம் தானே என்று சம்மதித்தார். ஆனால் ஙதுப்பறிவாளன்ங எடுத்து முடிக்க 2017 ஆகிவிட்டது.

அதன்பிறகு மிஷ்கினின் மேனஜர் ஜோயலிடம் எப்போ சார் நம்ம படம் தொடங்கலாம் என்று கேட்டேன். அதற்கு அவர், இப்போது மிஷ்கின் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். உங்கள் படத்துக்கான கதை விவாதங்களிலும் ஈடுபட்டிருக்கிறார். விரைவில் பட வேலைகள் தொடங்கும் என்று பதிலளித்தார்.

அதன் பிறகு மிஷ்கின் சைக்கோ என்ற படத்துக்கு ஒப்பந்தமாகியிருப்பதாக கேள்விப்பட்டேன். இது பற்றி மிஷ்கினிடம் கேட்டபோது, ஆம். புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறேன். உங்களுக்குப் படம் பண்ண முடியாது. இப்போதைக்கு அட்வான்ஸ் பணமும் திருப்பித் தர முடியாது என்று கூறினார். சைக்கோ படத்தின் கதை எனக்காக உருவாக்கப்பட்டது. இது மிஷ்கினுக்கே தெரியும். இந்தப் படத்தின் கதாபாத்திரத்துக்காக பயிற்சி எல்லாம் எடுக்கச் சொன்னார். இவ்வளவு நாள் காக்க வைத்து விட்டு இப்போது அந்தக் கதையை வேறு ஒருத்தருக்காக செய்கிறார். இந்த 3 ஆண்டுகளில் என்னை அணுகிய நான்கைந்து இயக்குநர்களிடம், மிஷ்கினுக்கு அட்வான்ஸ் கொடுத்து விட்டோம் என்று கூறி அனுப்பி விட்டேன். என்னை அணுகிய இயக்குநர்கள் படம் எடுத்து முடித்து தற்போது ரிலீஸ் செய்தே விட்டார்கள்.

மிஷ்கின் கூறியதைத்தான் நான் இதுவரை செய்தேன். என் தந்தை மிஷ்கினுக்கு கொடுத்த பணத்தை விட அவரிடம் காட்டிய மரியாதையும் அன்பும் அதிகம். மூன்று ஆண்டுகளாக ஒரு விஷயத்துக்காக காத்திருந்து அது நடக்காது என்று தெரியவரும்போது ஏற்படும் வலி எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஆறாது. நீதிமன்றத்தை நாடலாம் என்று சிலர் கூறினார்கள். ஆனால் உச்சபட்ச நீதிமன்றம் என்பது மிஷ்கினின் மனசாட்சிதான். அந்த மனசாட்சியிடமே இந்த விஷயத்தை ஒப்படைக்கிறேன். நன்றி.”

மிஷ்கின் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்