’மிகமோசமான நம்பிக்கையின்மை நெருக்கடியை உச்சநீதிமன்றம் எதிர்கொண்டுள்ளது’

0
518

உச்சநீதிமன்ற நீதிபதிகள் வைத்துள்ள குற்றச்சாட்டின் மீதான நியாயத்தை உணர்ந்து நீதித்துறையின் மாண்பைக் காக்க அரசும், நீதித்துறையும் முன்வர வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர், ”உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகூர் மற்றும் குரியன் ஜோசஃப் ஆகியோர் இன்று நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்து உச்சநீதிமன்ற நிர்வாகம் மற்றும் தலைமை நீதிபதி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

உச்சநீதிமன்ற நிர்வாகத்தில் குறைபாடுகள் இருப்பதாகவும், அதனை சரிசெய்ய தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே, தங்களது முயற்சி தோல்வியடைந்த காரணத்தால், என்ன நடந்தது என்பதை நாட்டு மக்களிடம் தெரிவிப்பதற்காக செய்தியாளர் சந்திப்பை நடத்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக அவர்கள் தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய வழக்குகள் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டாலும், அவை தலைமை நீதிபதியால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமர்வுகளுக்கு ஒதுக்கப்படுவது உச்சநீதிமன்றத்தின் மாண்பைக் குறைத்திருப்பதாக தங்கள் கடிதத்தில் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சமீப காலமாக நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வழக்குகளை விசாரிக்கும் அமர்வு, தங்களுக்கு வேண்டிய வகையில், ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தலைமை நீதிபதி மீது அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தொடர்புடைய செராஹ்புதீன் என்கவுண்ட்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயா 2014-ம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்தார். இது தொடர்பான வழக்கை யாருக்கு ஒதுக்கீடு செய்வது என்பதும் தலைமை நீதிபதிக்கு எதிரான போர்க்கொடிக்கான காரணங்களில் ஒன்று என்று உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி ரஞ்சன் கோகோய் செய்தியாளர்களின் தொடர் கேள்விக்கணைகள் மூலம் தெரிவித்துள்ளார்.

குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்த போது அம்மாநில உள்துறை அமைச்சராக இருந்தவர் அமித்ஷா. 2005-ம் ஆண்டு நரேந்திர மோடியை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக சொராஹ்புதீன் சேக், அதனைத் தொடர்ந்து அவரது மனைவி கவுசர்பீ, நண்பர் துளசிபி ரஜாபதி ஆகியோர் என்கவுண்ட்டரில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அமித்ஷா கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

முன்னதாக இவ்வழக்கை விசாரித்த நீதிபதி லோயா, 2014-ம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார். அதற்கு முன்பாக அமித்ஷாவை விடுவிக்ககோரி தனக்கு அழுத்தம் வருவதாக அவரது குடும்பத்தினரிடம் நீதிபதி லோயா தெரிவித்திருந்தார். நீதிபதியின் மரணத்தை தொடர்ந்து ஒரு மாதத்தில் அமித் ஷா வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது நீதிபதி லோயாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது சகோதரி புகார் தெரிவித்தார். இதேபோல் உச்சநீதிமன்றத்திலும் மும்பை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை பிற மூத்த நீதிபதிகளுக்கு ஒதுக்கீடு செய்யாமல் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பெஞ்ச்சே விசாரித்து வருகிறது. இதுவும் நீதிபதிகளின் பிரச்சனைக்கு காரணம் என்பது தான் செய்தியாளர்கள் சந்திப்பின் போது நீதிபதி ரஞ்சன் கோகோயின் வெளிப்படுத்தியிருக்கும் குற்றச்சாட்டு.

பொதுவாக பாஜக தலைவர்கள், இந்துத்துவா தொடர்புடைய வழக்குகளை நேர்மையாக விசாரிக்கும் விசாரணை அதிகாரிகள், நீதிபதிகள் மிரட்டப்படுவது அல்லது ஒதுக்கப்படுவதும், அவர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களுக்கு பதவி உயர்வு அளிப்படுவதுமான நடவடிக்கைகள் இருப்பதாக பரவலாக குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகளின் இந்த குற்றச்சாட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

உலகின் அதிகாரமிக்க நீதிமன்றங்களில் ஒன்றான இந்திய உச்சநீதிமன்றத்துக்கு இது நற்செய்தி அல்ல. கடந்த சில மாதங்களில் உச்சநீதிமன்றத்தில் எழுந்துள்ள நம்பிக்கை குறைபாட்டை, இந்நிகழ்வு சுட்டிக் காட்டுவதுடன், இந்நீதிமன்றத்தின் எதிர்காலம் தொடர்பான முக்கியக் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. நீதித்துறையின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை உரிய மரியாதையோடு நடத்த நீதிபதிகள் தவறவிட்டுள்ளதாகவே தெரிகிறது. அவசர காலத்துக்குப் பிறகு, தற்போது மோடி தலைமையிலான ஆட்சியில் மிகமோசமான நம்பிக்கையின்மை நெருக்கடியை உச்சநீதிமன்றம் எதிர்கொண்டுள்ளது.

ஜனநாயகத்தின் நான்கு தூண்களின் ஒன்றாகவும், ஜனநாயகத்தின் கோட்பாடுகளுக்கு பொறுப்புள்ளவையாகவும் உள்ள நீதித்துறையின் உச்சபட்ச அமைப்பான உச்ச நீதிமன்றத்தில் நிலவும் இந்த அசாதாரண நிலையை மக்கள் அனைவரும் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆகவே, நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை காக்கும் வகையிலும், நீதித்துறையின் புனிதத்துவத்தை தக்கவைக்கும் வகையிலும், குற்றச்சாட்டுக்கு ஆளான தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தனது பதவியை தானே ராஜினாமா செய்ய வேண்டும்.

மேலும், உச்ச நீதிமன்ற நிர்வாவகத்தின் மீதும், தலைமை நீதிபதி மீதும் வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை முன்வைத்த மூத்த நீதிபதிகள் செய்தது சரியானதா? அவர்கள் மீது எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பதை ஆராய்வதை விட்டுவிட்டு, அவர்கள் வைத்த குற்றச்சாட்டின் மீதான நியாயத்தை உணர்ந்து நீதித்துறையின் மாண்பை காக்க அரசும், நீதித்துறையும் முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here