பஞ்சாப் நேஷனல் வங்கி மும்பை கிளையில் முறைகேடான பண பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக தொழிலதிபர் நீரவ் மோடி மீது அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையொன்றில் 11,400 கோடி ரூபாய் வரை முறைகேடாக பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாகவும், இது ஒரு சிலரது வங்கிக் கணக்குகள் மூலம் நடந்துள்ளதாகவும் செபி என்னும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு (Securities and Exchange Board of India) புதன்கிழமை (நேற்று) வங்கி நிர்வாகம் தெரிவித்ததை அடுத்தே, இந்த மிகப்பெரிய ஊழல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய வங்கியாகவுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் இதுபோன்ற முறைகேடு நடந்துள்ளது வங்கி வாடிக்கையாளர்கள் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த முறைகேடால் வாரக்கடன் வசூலிப்பதில் சிக்கல் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.

பஞ்சாப் நேஷல் வங்கி ஏற்கனவே பரிவர்த்தனை முறைகேடு தொடர்பாக விசாரித்து வருகிறது. கடந்த ஜன.29ஆம் தேதியன்று, வைர வியாபாரியான நீரவ் மோடி, 280 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாக பரிவர்த்தணை செய்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

மேலும் நீரவ் மோடியின் மனைவி அமி மோடி, சகோதரர் நிஷால் மோடி, அவரது உறவினர் மெஹூல் சோக்ஸி ஆகியோர் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், இந்த மோசடி 280 கோடி ரூபாயிலிருந்து 11,400 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்.13), மேலும் ஒரு புகாரை சிபிஐயிடம் வங்கி நிர்வாகம் அளித்தது. சிபிஐ வழக்குப் பதிவு செய்ததை அடிப்படையாகக் கொண்டு, அமலாக்கத்துறையும் நீரவ் மோடி மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

கடந்த ஜனவரியில், நீரவ் மோடிக்கு சொந்தமான 50 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி, பணம், நகை, ஆவணங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருந்தனர்.

யார் இந்த நீரவ் மோடி?

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நீரவ் மோடி, வைர நகை வியாபாரி. டெல்லி, மும்பை மட்டுமில்லாமல் நியூ யார்க், லண்டன், ஹாங்காங், மக்காவ் ஆகிய நகரங்களிலும் தனது நகை ஷோரூம்களை வைத்துள்ளார்.

நியூ யார்க்கின் இவரது கடைதிறப்பு விழா நிகழ்ச்சியில் தற்போது அமெரிக்க ஜனாதிபதியாகவுள்ள டொனால்ட் டிரம்ப் கலந்துகொண்டுள்ளார். ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட 2017ஆம் ஆண்டின் பில்லியனர் பட்டியலிலும் இவர் இடம்பெற்றுள்ளார்.

நீரவ் மோடி பிராண்டுக்கு உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். மேலும் நீரவ் மோடி பிராண்டுக்கு சர்வதேச சந்தையின் தூதுவராக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கடந்தாண்டு நியமிக்கப்பட்டார்.

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here