மாலேகான் குற்றவாளி பிரக்யா தாக்கூர் 1 லட்சம் வாக்குகள் முன்னிலை; தீவிர தேசியவாதத்துக்கு கிடைத்த வெற்றி

0
525

மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றவாளியான பாஜகவின் பிரக்யா தாக்கூர் போபால் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங்கை எதிர்த்து போட்டியிட்டார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் வாக்கு என்ண்ணிக்கை தற்போது எண்ணப்பட்டு வருகிறது. 

இதில் போபால் தொகுதியில் பிரக்யா சிங் தாக்கூர் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.  

முன்னிலையில் இருப்பதைக் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரக்யா சிங் நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன், என்னுடைய வெற்றி அதர்மத்தை எதிர்த்து தர்மத்தை நிலை நாட்டுவது போன்றது. போபால் மக்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார். 

பிரக்யா தாக்கூரை வேட்பாளராக நிறுத்தியதிலிருந்து போபால் மக்களவைத் தொகுதியை உலகமே உற்று நோக்கிவருகிறது. தேர்தல் முடிவுகள் பிரக்யாவுக்கு சாதகமாக அமையுமா அமையாதா என்பது குறித்து ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தீவிரவாத தாக்குதல் குற்றவாளிக்கு பாஜக ஆதரவு கொடுத்தது உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது . 

செப்டம்பர் 2006-இல் மகாராஷ்டிராவின் மாலேகானின் மசூதி அருகே  வெடிகுண்டுத் தாக்குதல் நடைபெற்றது. இதன் முக்கியக் குற்றவாளியாக சாத்வி பிரக்யா கைது செய்யப்பட்டார்.  பிரக்யா இந்து தீவிரவாதி என  கடுமையாக விமர்சிக்கப்பட்டார். தனது 14 வயதில் துறவறம் பூண்ட பிரக்யா இந்துத்துவா ஆதரவாளர். 

அவருக்கு எதிராக விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 9 ஆண்டுகள் சிறையில் இருந்த இவர், கடந்த 2017-ஆம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தார். அவர் தனது உடல்நிலையைக் காரணம் கூறி ஜாமீன் பெற்றார்.