(டிசம்பர் 3,2015இல் வெளியான செய்தி மீள்பிரசுரமாகிறது.)

வியாழக்கிழமை இரவு 8.30 மணி :

மாம்பலம் ரயில் நிலையம் தண்டவாளத்தை மூடும் அளவுக்கு தண்ணீர் ஒடிக்கொண்டிருக்கிறது. புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு பல்லாவரத்திலிருந்து இங்கு வந்து நிறுத்தப்பட்ட புறநகர் மின்சார ரயில் நின்றுகொண்டிருக்கிறது. பெண்கள் கோச்சில் இரண்டு பெண்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

பக்கத்துப்பெட்டியில் சில இளைஞர்கள் தங்களுடைய பனியன்களையும், டிரவுசர்களையும் காயப்போட்டுக் கொண்டிருந்தார்கள். இதில் எல்லோரும் அதிகாலை வந்து இந்த ரயிலில் வந்து சேர்ந்தவர்கள் அல்ல. சென்னையில் செவ்வாய்க்கிழமை பெய்த மாமழையில் மழை அகதிகளாக மாறிய லட்சக்கணக்கானோரில் சிலருக்கு இந்த ரயில் புகலிடமாக இருக்கிறது. இன்று இரவு தங்கவும் தூங்கவும் இதுதான் உறைவிடம்.

இரவு 8.45 மணி :

திடீரென்று நீர்மட்டம் அதிகமாகிறது. நீரின் வேகமும் அதிகமாகிறது. இப்போது ரயிலில் தங்க விரும்பும் தேவராஜ் ஒரு தனியார் தொலைக்காட்சியில் வேலை பார்க்கிறார். தண்டவாளத்தைக் கடந்து ரயிலுக்குச் செல்ல முடியாது. பிளாட்பாரத்தைக் கடந்துதான் செல்லவேண்டும். நீரின வேகம் அதிகமாகிறது. யாரும் யோசிப்பதற்குள் இடுப்பளவுக்கு நீர் வந்துவிடுகிறது. அடையாறு கரைபுரண்டு ரங்கநாதன் தெருவுக்குள் பாய்கிறது.

ரங்கநாதன் தெருவில் கடைகளைச் சாத்திவிட்டு சாப்பிடப் புறப்பட்ட பணியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி. ஏற்கனவே தியாகராய நகரின் பேருந்து நிலையத்தில் இடுப்பளவு தண்ணீர் நிற்கிறது. அந்தப்பக்கம் தான் சாப்பிட போகவேண்டும். இப்போது எங்கிருந்தோ குபுகுபுவென்று தண்ணீர் வருகிறது. முழங்கால் அளவு நீரில் நடக்கத் தொடங்கியவர்கள் தெருமுனைக்கு வருவதற்குள் நீர் இடுப்பளவு தாண்டிவிடுகிறது.

தியாகராயர் நகருக்கு வந்த பேருந்துகளெல்லாம் உஸ்மான் ரோடு பாலத்திலேயே நிறுத்திவிட்டு பயணிகளை நீர்வழியில் நடக்கச் சொல்கிறார்கள். வீட்டுக்குச் செல்லும் ஆசையில் இடுப்பளவு, நெஞ்சளவு தண்ணீரில் மக்கள் நடந்துசெல்கிறார்கள்.

இரவு 9.30 மணி:

தியாகராய நகருக்கு வந்த அடையாறு ஏற்கனவே நிரம்பியிருக்கிறது. துரைசாமி சுரங்கப்பாதைக்குள்ளும் புகுந்துவிடுகிறது. அந்தத் தெருவோரமாக சாப்பிட சென்ற போத்தீஸ் பணியாளர்களெல்லாம் நீரின் வேகம் கண்டு மிரண்டு ஓடிவருகிறார்கள். நல்லவேளையாக அவர்களை ஆற்றுப்படுத்த அங்கு காவலர்கள் இருக்கிறார்கள்.

அடையாறு முதலில் விமானநிலையத்துக்குள் நுழைந்தது. பின்னர் சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலத்தை மூடச்செய்தது. இப்போது மாம்பலம் கடைத்தெருவுக்குள்ளும் வந்துவிட்டது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்