கடந்த திங்கட்கிழமை (பிப்.5) மாநிலங்களவையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும், அவையின் உறுப்பினருமான அமித் ஷா கலந்து கொண்டு முதன் முறையாக பேசினார். இதில் சில விவகாரங்களில் அவர் தவறான தகவல்களைக் குறிப்பிட்டார்.

1. ஜன்தன் யோஜனா திட்டத்தின்கீழ் 310 மில்லியன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 73,000 கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்தினரும் வங்கிக் கணக்கு வைத்திருப்பதாகவும் பேசினார்.

உண்மை: கடந்த வெள்ளிக்கிழமை (பிப்.2) மக்களவையில் இது குறித்து பதிலளித்திருந்த மத்திய நிதி இணையமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா, “ஜன.21, 2018 வரை ஜன்தன் யோஜனா திட்டத்தின்கீழ் 310 மில்லியன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 73,588 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

2. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சி வருவதற்கு முன்னர், 18,000 கிராமங்கள் மின்வசதி இல்லாமல் இருந்ததாகவும், தாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் 16,000 கிராமங்களுக்கு மின்வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

உண்மை: மின்வசதியில்லாமல் இருந்த 18,452 கிராமங்களில், 16,282 (88%) கிராமங்களுக்கு மின்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய மின்சாரத்துறை தெரிவித்துள்ளது.

3. பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடி மானியம் செலுத்துவதன் மூலம் வருடந்தோறும், 57 ஆயிரம் கோடி ரூபாய் வரை சேமிக்க முடிகிறது என்றும், மத்திய அரசின் மிகப்பெரிய சாதனையாக தான் கருதுவதாகவும் தெரிவித்தார்.

தவறு: பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடி மானியம் செலுத்துவதன் மூலம் கடந்த 2015-16ஆம் ஆண்டில் 36,144 கோடி ரூபாயும், 2016-17ஆம் ஆண்டில் 57,029 கோடி ரூபாயும் சேமிக்கப்பட்டுள்ளது.

4. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் கறுப்புப் பணம் ஒழிக்கப்பட்டுள்ளதாகவும், மூன்று லட்ச போலி நிறுவனங்களை மூடியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தவறு: பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர், 2,97,000 நிறுவனங்கள் தங்களது வரிக் கணக்குகளை இரண்டு அல்லது மூன்று வருடங்களாக தாக்கல் செய்யாமல் இருந்துள்ளது தெரிய வந்ததாக மத்திய இணையமைச்சர் பி.பி.சவுத்ரி தெரிவித்துள்ளார். இதில் 226,166 நிறுவனங்கள் ரெஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பெனிஸ் மூலம் நீக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த டிச.19ஆம் தேதியன்று மக்களவையில் தெரிவித்துள்ளார். தொடந்து மூன்று வருடங்களாக வரிக் கணக்கு தாக்கல் செய்யாத 309,619 இயக்குநர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

5. இந்தியாவில் ஆழமாக வேரூன்றி இருந்த சாதி அரசியல், குடும்ப அரசியல் ஆகியவைகளைப் பிரதமர் மோடி வேரோடு துடைத்தெறிந்துள்ளதாக அமித் ஷா பேசியிருந்தார்.

தவறு: பாரதிய ஜனதா கட்சியிலும் குடும்ப அரசியல் உள்ளது. மறைந்த பாஜகவின் மூத்தத் தலைவர் பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜன் தற்போது பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராவார். மேலும் இவர் அக்கட்சியின் தேசியச் செயலாளராகவும் உள்ளார்.

அதேபோன்று, மறைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மகள் பிரீத்ம் முண்டே, தற்போது பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராவார். மேலும் இவரது சகோதரி பங்கஜ் முண்டே, மகாராஷ்டிரா மாநில அமைச்சராகவும் உள்ளார்.

வசுந்தர ராஜேயின் தங்கை யசோதரா ராஜே என்பவர் மத்திய பிரதேசத்தில் அமைச்சராக உள்ளார். இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் பிரேம்குமார் தூமலின் மகன் அனுராக் தாகூர் தற்போது பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராவார்.

பழங்குடியினருக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக கடந்த 2014ஆம் ஆண்டில் 6827 வழக்குகளும், 2015ஆம் ஆண்டில் 6276 வழக்குகளும், 2016ஆம் ஆண்டில் 6568 வழக்குகளும் பதிவாகியுள்ளதாகவும், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக கடந்த 2014ஆம் ஆண்டில் 40401 வழக்குகளும், 2015ஆம் ஆண்டில் 38670 வழக்குகளும், 2016ஆம் ஆண்டில் 40801 வழக்குகளும் பதிவாகியுள்ளதாகவும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது.

நன்றி: factchecker

இதையும் படியுங்கள்: எழுதப் படிக்க கஷ்டப்படுகிறதா குழந்தை? இதைப் பாருங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here