தமிழகத்தின் 15வது மாநகராட்சியாக ஆவடியை அறிவித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

சென்னைக்கு அருகில் உள்ள ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் அரசின் உதவிகள் மூலம் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படும் எனவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வந்தனர். 

இதேபோல் தாம்பரம், பல்லாவரம் நகராட்சிகளையும் மாநகராட்சியாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.  அதன்படி இந்த மூன்று நகராட்சிகளையும் மாநகராட்சியாக மாற்ற  தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான பரிந்துரையை தமிழக அரசுக்கு சென்னை மாவட்ட நிர்வாகம் அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில் ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

ஆவடி மாநகராட்சியில் ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகளும், திருநின்றவூர் பேரூராட்சியும் வரும். நெமிலிச்சேரி, நசரத்பேட்டை உள்பட 11 கிராம பஞ்சாயத்துகளும் ஆவடி மாநகராட்சிக்குள் அடங்கும்.

தற்போது தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 14 மாநகராட்சிகள் இருந்தன. தற்போது ஆவடியோடு சேர்த்து தமிழகத்தில் 15 மாநகராட்சிகள் உள்ளன.


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here