மாசற்ற மக்களின் மாசடைந்த தொகுதி ராயபுரம்

0
156

வடசென்னையின் மிக முக்கியமான தொகுதி ராயபுரம். மீனவர்களும், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, உழைப்பாளிகள் அதிகம் நிறைந்த பகுதி. 2001, 2006, 2011ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து அதிமுகவிலிருந்து டி.ஜெயக்குமார் எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்ற உறுப்பினராக 15 ஆண்டுகளை டி. ஜெயகுமார் முடிக்கப் போகும் நிலையில், 2011 லிருந்து 2015 வரையிலான ஐந்து ஆண்டுகளில் தொகுதி மக்களுக்காக என்னென்ன செய்திருக்கிறார். என்ன செய்யவில்லை என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

குடிநீர்

இந்தத் தொகுதியின் முக்கியமான பகுதி 52வது வட்டம். இங்குள்ள ஆட்டுதொட்டி ஆஞ்சநேயர் நகரில் ஆதி ஆந்திரா, துப்புரவுத் தொழிலாளர்கள், தலித்துகள் என ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். சுமார் 4800 வாக்குகள் உள்ள இந்தப் பகுதியில் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படாத நீண்ட நாள் பிரச்சனையாகவே இருக்கிறது. மக்களின் தொடர் போராட்டத்திற்குப் பிறகு மெட்ரோ வாட்டர் நிர்வாகமே தண்ணீர்த் தொட்டி ஒன்று கட்டித் தருவதாக சொல்லியும் இன்னும் மக்களுக்கு விடிவு ஏற்படவில்லை.

ரேஷன் கடை

எளிதில் மக்கள் வந்து செல்லக் கூடிய இடத்திலிருந்த ரேஷன் கடை அருகிலுள்ள மாநகராட்சி மைதானத்தின் உடற்பயிற்சிக் கூடத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் அங்குள்ள இளைஞர்களால் உடற்பயிற்சியை மேற்கொள்ள முடியவில்லை. ரேஷன் கடைக்குச் செல்ல வேண்டும் என்றால் மைதானத்திற்கு உள்ளே சென்றுதான் பொருட்களை வாங்கி வர முடியும். இந்தச் சிரமங்களைப் போக்கும் வகையில் அனைவரும் எளிதில் வந்து செல்லக்கூடிய வகையில் ரேஷன் கடையைத் திறக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சுகாதாரம்

இந்தப் பகுதியில் இருந்த சமூக நலக்கூடம் ஆரம்ப பொது சுகாதார நிலையமாக மாற்றப்பட்டது. ஆனால் மருத்துவர்கள் இங்கு வருவதேயில்லை. இந்தக் காரணத்தைக் காட்டி சுகாதார நிலையமும் மூடப்படும் நிலை உருவாகி உள்ளது.

பட்டா இல்லை

53வது வட்டப் பகுதியில் உள்ளது ராம்தாஸ் நகர். இங்குள்ள மயானத்திற்குச் செல்லும் வழியில் வசித்து வரும் மக்கள், அரசு வீடுகள் கட்டித்தரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஸ்டான்லி நகர் உள்ளிட்ட பகுதியில் ஏழை மக்களுக்குப் பட்டா வழங்கப்படாமல் இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

பாழடைந்த குடிசைமாற்று வாரிய வீடுகள்

எம்.எஸ்.நகர், கிழக்கு கல்லறை சாலையில் உள்ள குடிசைமாற்று வாரிய வீடுகள் அனைத்தும் பாழடைந்த நிலையில் இருக்கின்றன. அவற்றை சீர்படுத்தியும் தரவில்லை. இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித்தரப்படாமலும் உள்ளன. கழிவு நீர் கசிவு ஏற்படுவதும், மேற்கூரைகள் இடிந்து எப்போது விழுமோ என்ற அச்சத்திலும் மக்கள் வாழ்கின்றனர்.

பாதாள சாக்கடை

அமராஞ்சிபுரம், காமராஜர் நகர் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை இல்லை. அண்மையில் பாதாள சாக்கடை கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. என்றாலும் இடையில் பணம் இல்லை என்று கூறி பாதியில் வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் இங்குள்ள மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இவைகள் தவிர, பல இடங்களில் மின் விளக்குகள், சாலைகள் பிரச்சனை, குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது என பல பிரச்சனைகள் இந்தத் தொகுதியின் மையப் பிரச்சனையாக மக்கள் முன் வைக்கின்றனர். தடை செய்யப்பட்ட ஒன் நம்பர் லாட்டரியும் இந்த இடத்தில் திரைமறைவாக விற்கப்படுவதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனால் உழைக்கும் மக்களின் பணம் காலியாவதோடு அவர்களின் குடும்பமும் பாதிக்கப்படுவதாக பெண்கள் கூறுகின்றனர்.

50வது வட்டம் உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறினர்.

இது குறித்து ராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடம் இப்போது.காம் சார்பில் கேட்ட போது, “தொகுதி நிதியில் இருந்து 98 சதவீதம் தொகுதி மேம்பாட்டிற்காக செலவு செய்திருக்கிறேன். இது தவிர அரசின் எந்த நலத்திட்டமாக இருந்தாலும் அதனைத் தொகுதிக்குச் சென்று சேர்த்திருக்கிறேன்” என்றார்.

இரண்டு முறை அமைச்சராகவும் ஓராண்டிற்கும் மேல் சபாநாயகராகவும் இருந்த டி.ஜெயகுமார். தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றவர். 4வது முறையும் அதிமுக தலைமை சீட் கொடுத்தால் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிடும் துடிப்பில் இருப்பவர். இவரிடமிருந்து இன்னும் அதிகமான நலப்பணிகளையும், அடிப்படை வசதிகளையும் உழைக்கும் மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்