மஹிந்த ராஜபக்ஷ: ஓர் ‘அரசன்’ வீழ்ந்த கதை

0
169

Courtesy: bbc

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி முற்றிய நிலையில், பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவரது சகோதரரான கோட்டாபய ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியில் தொடர்ந்துகொண்டிருக்கிறார்.

2005இல் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி ஆனார் என்றாலும் அந்நாட்டில் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு, ராஜபக்ஷ குடும்பத்தின் செல்வாக்கு இலங்கையில் மிகப் பெரிய அளவில் அதிகரித்தது. ராஜபக்ஷ குடும்பத்தின் பின்னணி, அவர்கள் கடந்துவந்த பாதை குறித்த விரிவான கட்டுரை இது.

2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து, உள்நாட்டுப் போர் மேலும் தீவிரமடைந்தபோது சர்வதேச அளவிலான கவனம் அவர் மீது விழுந்தது. அந்தப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முழுமையாக அழிக்கப்பட்டு, யுத்தம் முடிவுக்கு வந்தபோது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனாதிபதிக்கு உரிய செல்வாக்கு, அதிகாரம் ஆகியவற்றையும் தாண்டி ஒரு அரசனுக்குரிய செல்வாக்கோடு வலம்வந்தார் அவர்.

மஹிந்த மட்டுமல்லாமல் அவருடைய சகோதரர்கள் சமல், கோட்டாபய, மஹிந்தவின் மகன் நாமல் என அவருடைய குடும்பமே மிகப் பெரிய செல்வாக்குக்குரியதாக உயர்ந்தது. ஆனால், வெறும் உள்நாட்டுப் போரின் வெற்றி மட்டுமே அவர்களுக்கு செல்வாக்கைத் தரவில்லை. ராஜபக்ஷ குடும்பத்தின் கதை என்பது மூன்று தலைமுறையாக, தொடர்ந்து அரசியலில் செயல்பட்டு, உச்சத்தை அடைந்த ஒரு குடும்பத்தின் கதை.

குடும்பமும் அரசியலும்

இலங்கையின் தென்கோடியில் இருக்கிறது அம்பாந்தோட்டை மாவட்டம். ராஜபக்ஷக்களின் சொந்த மாவட்டம் என்பதால், இலங்கையிலேயே அரசின் கவனிப்பை அதிகம் பெற்ற மாவட்டமாக இருக்கிறது. மிகப்பெரிய துறைமுகம், சர்வதேச விமான நிலையம், சர்வதேச கிரிக்கெட் மைதானம் என மெகா நகரத்திற்கு உரிய எல்லாம் இந்த மாவட்டத்தில் அமைந்திருக்கின்றன. சீனாவின் குவாங்ஸு நகரின் சகோதர நகரமாகவும் அம்பாந்தோட்டை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மாவட்டத்திலிருக்கும் வீரகட்டிய கிராமமே, ராஜபக்ஷக்களின் சொந்த ஊர். அந்த ஊருக்குள் நுழையும் அந்நியர் யாருக்கும் அச்ச உணர்வு ஏற்படும். அந்தச் சிறிய ஊருக்குப் பொருந்தாத வகையில் பெரும் எண்ணிக்கையில் காவலர்கள் இருப்பார்கள். ராஜபக்ஷ குடும்பத்தினரின் வீடு, தோட்டம், அவர்களது பெற்றோரின் நினைவிடம் என எல்லா இடங்களிலும் காவலர்கள் குவிந்திருப்பார்கள்.

ஆனால், ராஜபக்ஷ குடும்பம் முதன்முதலில் அரசியலில் காலடி எடுத்துவைத்தபோது, இந்தப் பிரதேசமே காடுகளும் வறண்ட வயல்வெளிகளும் கொண்ட பகுதியாக மட்டுமே இருந்தது. மக்கள்தொகையும் மிகவும் குறைவு. அதிலும் 90 சதவீதத்திற்கு மேற்பட்டோர் கிராமப்புறங்களிலேயே வசித்துவந்தனர்.

20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் டான் டேவிட் ராஜபக்ஷ என்பவர் வீரகெட்டிய கிராமத்தில் ஒரு கிராம அதிகாரியாகப் பணியாற்றினார். அவருக்கு உள்ளூரில் நல்ல செல்வாக்கும் இருந்தது. இந்த டான் டேவிட்டின் மகன்தான் டான் மேத்யூ ராஜபக்ஷ என்ற டி.எம்.ராஜபக்ஷ. ராஜபக்ஷ குடும்பத்திலேயே முதன்முதலில் அரசியலுக்கு வந்தவர் இவர்தான்.

மஹிந்த ராஜபக்ஷ - கோட்டாபய ராஜபக்ஷ

1936இல் ஸ்டேட் கவுன்சிலுக்கு தேர்தல் நடந்தபோது அம்பாந்தோட்டை தொகுதியிலிருந்து களமிறங்கி வெற்றிபெற்றார் டான் மேத்யூ. அதற்குப் பிறகு அந்தப் பகுதியில் அவரது செல்வாக்கு பெரிதும் உயர்ந்தது. இந்நிலையில், 1945இல் டான் மேத்யூ காலமானார். ஆனால், அத்தொகுதியை விட்டுவிட குடும்பத்தினர் தயாராக இல்லை. யாரைக் களமிறக்கலாம் என்று யோசித்தார்கள். அந்தத் தருணத்தில் அவருடைய மகன்கள் மிகவும் சிறுவர்கள். முடிவில் டான் மேத்யூவின் தம்பி டான் ஆல்வின் ராஜபக்ஷ என்ற டி.ஏ.ராஜபக்ஷவை அம்பாந்தோட்டையில் களமிறக்க முடிவுசெய்யப்பட்டது.

மிக எளிதாக அந்தத் தேர்தலில் வென்ற டான் ஆல்வின், 1947இல் அம்பாந்தோட்டையிலிருந்து பிரிக்கப்பட்ட பெலியத்த தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இப்படியாக சுதந்திர இலங்கையின் முதல் நாடாளுமன்றத்திலேயே இடம்பெற்றார் டி.ஏ.ராஜபக்ஷ. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தே அவர் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார்.

1951இல் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்துசெல்ல அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்கா (எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக) முடிவுசெய்தார். யோசிக்காமல் அவருடன் சென்றார் டி.ஏ. ராஜபக்ஷ. பண்டாரநாயக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைத் தொடங்கியபோது அவருடன் டி.ஏ.ராஜபக்ஷவும் இருந்தாலும், கட்சியில் பெரிய பொறுப்பு ஏதும் அவருக்கு வழங்கப்படவில்லை.

1959 செப்டம்பரில் பண்டாரநாயக கொல்லப்பட்டவுடன் பிரதமராகப் பதவியேற்ற விஜயானந்த தகநாயக்கவின் அமைச்சரவையில் முழுப் பொறுப்புடன் விவசாயம் மற்றும் நிலங்கள் துறையின் அமைச்சராக 1959 செப்டம்பரிலிருந்து 1960 மார்ச் வரை சிறிது காலம் பணியாற்றினார் டி.ஏ.ராஜபக்ஷ.

1960இல் அமைச்சர் பதவியிலிருந்து வெளியேறிய பிறகு, பெலிவத்த தொகுதியின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளராக இருந்தபடியே அம்பாந்தோட்டையைச் சுற்றி தன் அரசியலைச் சுருக்கிக்கொண்டார் டான் ஆல்வின்.

டான் ஆல்வினுக்கு சாமல், ஜெயந்தி, மஹிந்த, சந்திரா, கோட்டாபய, ப்ரீத்தி, பசில், டட்லி, கந்தானி என ஒன்பது குழந்தைகள். இதில் மூன்றாவது குழந்தைதான் மஹிந்த.

“பந்தா ஏதுமின்றி பழகுவார்கள்”

வீரகெட்டிய கிராமத்தைச் சேர்ந்த கே.பி.ஜெயசேகர, மஹிந்தவின் தீவிர ஆதரவாளர். மனிதருக்கு வயது எழுபதாகிவிட்டது. இருந்தாலும், மஹிந்த ராஜபக்ஷவுடனான சிறுவயது நாட்களை துல்லியமாக நினைவுகூர்கிறார்.

“அந்த காலகட்டத்தில் நான், மஹிந்த, கோட்டாபய என எல்லோருமே ஒன்றாகத்தான் விளையாடினோம். சைக்கிள் ஓட்டிக்கொண்டு திரிவோம். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் மகன்கள் என்ற பந்தா ஏதுமின்றி பழகுவார்கள் மஹிந்தவும் அவரது சகோதரர்களும். எனக்கும் பஷிலுக்கும் ஒரே வயது” என்கிறார், கே.பி. ஜெயசேகர.

ராஜபக்ஷ சகோதரர்கள்

21 வயதில் தொடங்கிய அரசியல் வாழ்க்கை

1966வாக்கில் மூத்த மகனான சாமல் ராஜபக்ஷ காவல்துறையில் துணை ஆய்வாளராக வேலைக்குப் போக ஆரம்பித்தார். இதற்கு சில காலத்திலேயே அதாவது, 1967இல் டான் ஆல்வின் ராஜபக்ஷ உடல்நலம் குன்றி இறந்துபோனார். அப்போது மஹிந்த வித்யோதயா பல்கலைக்கழகத்தில் உள்ள நூல்நிலையத்தில் பணியாற்றிவந்தார்.

இந்த காலகட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பு சிறிமாவோ பண்டாரநாயகவின் வசம் வந்திருந்தது.

டான் ஆல்வினின் மறைவுக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு அவரை நினைவுகூரும் சடங்கு ஒன்று ராஜபக்ஷக்களின் பூர்வீக வீட்டில் நடந்தது. அந்த நிகழ்வுக்கு வந்தார் சிறிமாவோ. அப்போது, டான் ஆல்வின் வகித்துவந்த பெலிவத்த தொகுதியின் கட்சி அமைப்பாளர் பொறுப்பை, சாமல் ராஜபக்ஷவுக்குக் கொடுக்க முன்வந்தார் சிறிமாவோ. ஆனால், அவர் அப்போது காவல்துறை பணியில் இருந்ததால், அந்தப் பொறுப்பை மஹிந்தவுக்கு அளிக்கும்படி கேட்டார் அவரது தாயார்.

மஹிந்தவுக்கு அப்போது வெறும் 21 வயதுதான். இது நடந்தது 1968 மே மாதம். இதற்குப் பிறகு அரசியலில் மஹிந்த படிப்படியாக வளர ஆரம்பித்தார் என்கிறார், ஜெயசேகர. “வீரகெட்டிய பகுதி மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் முன்வந்து நிற்பார். அதனால், இந்தப் பகுதியில் அவருக்கு செல்வாக்கு அதிகரித்தது” என்கிறார் ஜெயசேகர.

1970ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து பெலியத்த தொகுதியில் மஹிந்த தீவிரமாகப் பணியாற்ற ஆரம்பித்தார். அந்தத் தருணத்தில் அவரது தாயார் மிகக் கவனமாக மஹிந்தவை வழிநடத்தினார். எதிர்பார்த்ததைப் போலவே பெலியத்த தொகுதியில் போட்டியிடும் வாய்ப்புக் கிடைத்தது மஹிந்தவுக்கு. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் ரஞ்சித் அட்டபட்டுவை எளிதில் தோற்கடித்தார் மஹிந்த.

இந்த காலகட்டத்தில்தான் அவருடன் இணைந்துகொண்டார் அவருடைய சகோதரரான பஷில் ராஜபக்ஷ. மஹிந்த இல்லாத நேரங்களில் பெலியத்த தொகுதியில் பஷிலைத்தான் அப்பகுதியினர் தொடர்புகொள்ள வேண்டும்.

1977இல் நடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜெ.ஆர். ஜெயவர்த்தன மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார். இந்தத் தேர்தலில் பெலியத்த தொகுதியில் போட்டியிட்ட மஹிந்த, ரஞ்சித் அட்டபட்டுவிடம் தோற்றுப் போனார். சகோதரர் பஷிலும் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றுப் போனார்.

1972இல் இலங்கையில் புதிதாக அரசியல் சாசனம் எழுதப்பட்ட பிறகு, இலங்கையின் சட்ட விவகாரங்களை இளைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு, சட்ட அமைச்சராக இருந்த 1973இல் ஃபெலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தார். அதன்படி, 30 வயதுக்குட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டக் கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம். இந்த விதியைப் பயன்படுத்திய மஹிந்த சட்டப்படிப்பில் சேர்ந்திருந்தார். இப்போது தேர்தலில் தோற்றுப்போனவுடன், பெரிதாக வேலை இல்லாத அந்த காலகட்டத்தைப் பயன்படுத்தி சட்டப்படிப்பை முடித்தார். 1981இல் எம்பிலிப்பிட்டிய, அம்பாந்தோட்டை நீதிமன்றங்களில் செயல்பட ஆரம்பித்தார் மஹிந்த.

நாமல் ராஜபக்ஷ - மஹிந்த ராஜபக்ஷ

இந்த காலகட்டத்தில், சிறிமாவோ பண்டாரநாயகவுக்கும் அவருடைய மகன் அனுர பண்டாரநாயகவுக்கும் எழுந்த மோதலில், அனுர கட்சியைவிட்டு வெளியேற்றப்பட்டார். அந்தத் தருணத்தில் பஷில் ராஜபக்ஷ அனுர பண்டாரநாயகவுக்கு நெருக்கமானவராக அடையாளம் காணப்பட்டார். ஒரு கட்டத்தில் அனுர திரும்பவும் கட்சிக்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டாலும், அவருடன் வெளியேறியவர்களுக்கு பெரிதாக பொறுப்பு கிடைக்கவில்லை. ஆனால், மஹிந்த தொடர்ந்து பெலியத்த தொகுதியின் பொறுப்பாளராக நீடித்தார்.

இந்த காலகட்டத்தில், 1970ல் சிறிமாவோ பிரதமரானபோது, காவல்துறையில் பணியாற்றிவந்த சாமல் ராஜபக்ஷ பிரதமரின் பாதுகாப்புப் பிரிவில் ஒரு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 1977இல் சிறிமாவோ பதவிவிலகும்வரை, அந்தப் பிரிவில் பணியாற்றிவந்தார் சாமல்.

1977இல் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி வந்தபிறகு, சாமல் யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இனியும் காவல்துறையில் இருப்பது பெரிய பலனளிக்காது என்பதைப் புரிந்துகொண்டதாலோ என்னவோ, அந்தப் பணியிலிருந்து ராஜினாமா செய்தார் சாமல்.

1970களின் பிற்பகுதியில், சிறிமாவோவின் மகளான சந்திரிகாவும் அரசியலில் ஆர்வம்காட்ட ஆரம்பித்திருந்தார். இதற்கு நடுவில் இலங்கையின் அரசியல் சாசனம் திருத்தப்பட்டு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி உருவாக்கப்பட்டிருந்தது. 1982இல் நடந்த ஜனாதிபதி தேர்தலிலும் ஜெயவர்தனவே மீண்டும் வெற்றிபெற்றார்.

1983இல் நடந்த இடைத் தேர்தலிலும், பெலியத்த தொகுதியில், மஹிந்தவுக்குத் தோல்வியே கிடைத்தது. இந்த நேரத்தில்தான் ஜனதா விமுக்தி பெரமுனவின் கலகங்கள் தலையெடுக்க ஆரம்பித்தன. அதனை ஒடுக்குவதற்காக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், கடும் விமர்சனத்திற்கு உள்ளாயின. பலர் காணாமலாக்கப்பட்டனர். பலர் கைதுசெய்யப்பட்டார்கள்.

மனித உரிமை காவலர் மஹிந்த”

பல மனித உரிமை அமைப்புகள், இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தன. இந்தத் தருணத்தில் பத்திரிகையாளரும் அரசியல் செயல்பாட்டாளருமான குஷால் பெரேரா மஹிந்தவைத் தொடர்புகொண்டு, தென்பகுதியில் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். பிறகு, மனித உரிமை தொடர்பான விவகாரங்களில் இருவரும் சேர்ந்து செயல்பட ஆரம்பித்தனர்.

1989 பிப்ரவரியில் நடந்த தேர்தலில் போட்டியிட்ட மஹிந்த வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். அதன்பிறகும் மனித உரிமை மீறல்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து சர்வதேச கவனத்திற்குக் கொண்டுவந்தபடி இருந்தார் மஹிந்த. 1991-92 காலகட்டத்தில் மஹிந்தவின் செல்வாக்கு வளர ஆரம்பித்தது. ஜனாதிபதி பிரேமதாசவுக்கு எதிரான அவரது குரல்கள் கவனிக்கப்பட்டன. அதேபோல, தொழிற்சாலைகளில் போராட்டங்கள் நடத்திய சிலர் காணாமல்போனபோது அவர்களுக்காகவும் பேச ஆரம்பித்தார் மஹிந்த.

ஆனால், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. அதாவது, மஹிந்த ராஜபக்ஷ மனித உரிமை ஆர்வலராக உருவெடுத்த காலகட்டத்தில் இலங்கையின் வடக்கு – கிழக்குப் பகுதிகளிலும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் வெகுவாக நடைபெற்றாலும் அவரது கவனம் நாட்டின் தென்பகுதி மீதே இருந்தது.

“வடக்கு – கிழக்கு விவகாரங்களில் கவனம் செலுத்துவதன் மூலம், தென் பகுதி சிங்கள மக்களின் மனித உரிமை காவலர் என்ற பெயரை இழக்க அவர் தயாராக இல்லை” என்கிறார், மனித உரிமை ஆர்வலரும் அரசியல் செயல்பாட்டாளருமான குஷால் பெரேரா.

மஹிந்த ராஜபக்ஷ

இதற்கிடையில் சில சம்பவங்கள் இலங்கையில் நடைபெற்றிருந்தன. சிறிமாவோ பண்டாரநாயகவின் மகள் சந்திரிகாவின் கணவர் விஜேய குமாரதுங்கே கொல்லப்பட்டார். இதற்குப் பிறகு நாட்டை விட்டு வெளியேறி பிரிட்டனுக்குச் சென்ற சந்திரிகா குமாரதுங்க, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1991 ஆம் ஆண்டு தொடக்கத்தில், நாடு திரும்பினார்.

மஹிந்த தொடர்ந்து தென் பகுதியின் மனித உரிமை விவகாரங்களைப் பேசுவதிலும் பிரதமர் ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிரான குரலை ஒலிப்பதிலும் நாடாளுமன்றத்தில் தீவிரமாக இயங்கிவந்தார். அந்தத் தருணத்தில், பல அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தன.

இதனை எதிர்த்து என்ன செய்யலாம் என விவாதித்தபோது, பாத யாத்திரை நடத்தலாம் என யோசனை தெரிவித்தார் குஷால் பெரேரா. கொழும்புவில் தொடங்கி கடற்கரை ஓரமாகவே, காலி சாலை வழியாகச் செல்லும் அந்த யாத்திரை கொழும்பு, காலி, மாத்தர மாவட்டங்களைக் கடந்து அம்பாந்தோட்டையை அடைந்து மொனேராகல பகுதியை அடையுமெனத் தீர்மானிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் அசைக்க முடியாத செல்வாக்குடன் இருந்தார் பிரேமதாச. அப்படியான சூழலில் இந்த பாத யாத்திரையை எப்படி வெற்றிகரமாக நடத்த முடியுமெனப் பலரும் கேள்வியெழுப்பினர்.

இருந்தபோதும் மஹிந்த தீவிரமாக ஆதரவு திரட்ட ஆரம்பித்தார். இந்த பாத யாத்திரையில் நான்கு பிரதானமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 1. 1988-90 ஆம் ஆண்டுகளில் நடந்த கலவரம், அதையொட்டிய அரசின் நடவடிக்கைகளில் காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து அரசு அறிவிக்க வேண்டும். 2. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். 3. தனியார்மயமாக்கலை நிறுத்த வேண்டும். 4. உரிமைக்காக போராடிவரும் குழுக்களுடன் சண்டையிடாமல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

மஹிந்தவும் குரக்கன் சால்வையும்

இந்த பாத யாத்திரை 1992 ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதிக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு முன்பாக, 1991 ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி மனித உரிமை தொடர்பான மிகப் பெரிய பொதுக் கூட்டம் ஒன்றும் கொழும்பு நகரில் மஹிந்த தலைமையில் ஏற்பாடுசெய்யப்பட்டது. அரசுக்கு எதிர்த்தரப்பில் இருந்த பலரும் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். அந்தத் தருணத்திலேயே மஹிந்தவின் செல்வாக்கு குறிப்பிடத்தக்கதாக உயர ஆரம்பித்தது.

இதற்குப் பிறகு, பாத யாத்திரைக்கான ஏற்பாடுகள் பரபரப்பாக செய்யப்பட்டன. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலிருந்த சிறிமாவோ அது குறித்து ஏதும் குறிப்பிடவில்லையென்றாலும், அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இந்த யாத்திரையில் பங்கேற்றனர். சந்திரிகா குமாரதுங்கவும்கூட பாத யாத்திரை தொடங்கிய தினத்தில் அதில் பங்கேற்றார். மிகப் பெரிய ஊடக கவனமும் அந்த பாத யாத்திரைக்குக் கிடைத்தது. தோல்வியால் சோர்வுற்றிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு அந்த பாத யாத்திரை பெரும் உற்சாகத்தை அளித்தது.

இந்த பாத யாத்திரை மாத்தர பகுதியை அடைந்தபோது, மஹிந்த தற்போது பிரபலமான குரக்கன் சால்வையை அணிந்துகொண்டார்.

ராஜபக்ஷக்களின் சொந்த ஊரான வீரகெட்டியவிலும் அம்பாந்தோட்டை பகுதியிலும் குரக்கன் எனப்படும் கேப்பை பெருமளவில் விளைந்துவந்தது. வாக்குப் பெட்டிகளை அடையாளமாக வைத்து தேர்தல் நடந்த காலத்தில், தன்னுடைய வாக்குப் பெட்டியின் நிறமாக கேப்பையின் நிறத்தைத் தேர்வுசெய்தார் மஹிந்தவின் பெரியப்பாவான டான் மேத்யு ராஜபக்ஷ. அந்தத் தேர்தலில் அவர் வெற்றிபெற்ற பிறகு, அதே நிறத்தில் அவர் சால்வை அணிய ஆரம்பித்தார். அப்போதிலிருந்து அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அந்த நிறத்தில் சால்வையை அணிந்து வந்தனர். பாத யாத்திரைக்கு முன்பாக ராஜபக்ஷ சகோதரர்களின் சாமல் ராஜபக்ஷ மட்டும் அவ்வப்போது அந்த சால்வை அணிந்து வந்தார்.

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க

தேசிய தலைவராக உயர்ந்த ராஜபக்ஷ

“இந்த யாத்திரைக்குப் பிறகு, மஹிந்த ராஜபக்ஷ ஒரு தேசியத் தலைவராக உயர்ந்தார்”, என்கிறார் குஷால் பெரேரா. பல தேர்தல் கூட்டங்களுக்கு மஹிந்த ராஜபக்ஷ அழைக்கப்பட்டார்.

இந்தத் தருணத்தில்தான் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, மே 1 ஆம் தேதியன்று கொழும்பு நகரின் ஆர்மர் வீதியில் தற்கொலை குண்டுதாரி ஒருவரால் கொல்லப்பட்டார். பிரேமதாசவின் மரணம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. பிரேமதாச கொல்லப்பட்ட பிறகு, பிரதமராக இருந்த டிங்கிரி பண்டா விஜேதுங்க ஜனாதிபதியானார். ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவியேற்றார். ஆனால், மக்கள் மத்தியில் இருவரும் ஈர்ப்பை ஏற்படுத்துபவர்களாக இல்லை.

மாறாக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த போன்றவர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர். மூன்று மாகாண சபைகளுக்கு நடந்த தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியைச் சந்தித்தது.

இதற்கு நடுவில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் சில மாற்றங்கள் நடந்தன. சிறிமாவோவின் மகனும் சந்திரிகாவின் சகோதரருமான அனுர பண்டாரநாயக கட்சியைவிட்டு வெளியேற்றப்பட்டார். ஆகவே, அக்கட்சியின் அடுத்த தலைமையாக சந்திரிகா குமாரதுங்கதான் இருப்பார் என்பது உறுதியானது.

1994ல் ஜூனில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ஆகஸ்ட் மாதத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தருணத்தில் மஹிந்தவுக்கு இருந்த செல்வாக்கை வைத்துப் பார்க்கும்போது, தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெற்றிபெற்றால், மஹிந்த நிச்சயம் அமைச்சராகக்கூடும் எனப் பலரும் கருதினார்கள்.

மஹிந் ராஜபக்ஷ
தேர்தல் நடந்த காலத்தில், தன்னுடைய வாக்குப் பெட்டியின் நிறமாக கேப்பையின் நிறத்தைத் தேர்வுசெய்தார் மஹிந்தவின் பெரியப்பாவான டான் மேத்யு ராஜபக்ஷ.

தேர்தல் முடிவுகள் வெளியானபோது யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் உதவியுடன் ஆட்சியமைத்தார் சந்திரிகா. உடனடியாக ப்ளாட், ஈரோஸ், டெலோ, டக்ளஸ் தேவானந்தாவின் இபிடிபி ஆகியவை அரசுக்கு தங்கள் ஆதரவை அளித்தன. எதிர்பார்த்தபடியே மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரானார். ஆனால், அவர் எதிர்பார்த்தது விவசாய அமைச்சகத்தை. ஆனால், சந்திரிகா அவருக்கு தொழிலாளர் மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சகத்தை வழங்கினார். விவசாயத் துறை கிடைத்தால், தனது தொகுதியில் செல்வாக்கை மேலும் வளர்த்துக்கொள்ள அது உதவியாக இருக்குமெனக் கருதினார் மஹிந்த.

தொழில்துறையை ஏற்றுக்கொண்ட பிறகு, என்ன செய்வது என்று யோசித்த மஹிந்த, தொழிலாளர்களுக்கான தேசிய சாசனம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தார். ஆனால், அந்த காலகட்டத்தில் புலிகள் அமைப்புடன் சந்திரிகா தொடங்கியிருந்த பேச்சுவார்த்தை சர்வதேச கவனத்தை ஈர்த்திருந்ததால், மஹிந்த மீதான ஊடக கவனம் குறைவாகவே இருந்தது. இதற்கிடையில் 1994இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு பெரும் வெற்றிபெற்றார் சந்திரிகா.

இருந்தபோதும் தொழிலாளர் நலன் சார்ந்து பல யோசனைகளை முன்வைத்தபடி இருந்தார் மஹிந்த. இவையெல்லாம் சேர்ந்த மஹிந்த ஒரு முற்போக்கான அமைச்சர் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியபடி இருந்தன. ஆனால், இது நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1997இல் ஜெனீவாவில் நடந்த சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மாநாட்டுக்காக மஹிந்த சென்றிருந்தபோது அவரிடமிருந்து தொழிலாளர் துறை பறிக்கப்பட்டது. கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் துறையின் அமைச்சராக்கப்பட்டார் மஹிந்த.

சந்திரிகாவின் இந்த நடவடிக்கையால் மஹிந்த சற்று சோர்வடைந்தாலும், தனக்களிக்கப்பட்ட அமைச்சகத்தின் மூலம் மக்களை எந்த அளவுக்கு சென்றடைய முடியும் என்று யோசித்து செயல்பட ஆரம்பித்தார். இந்த காலகட்டத்தில்தான் அவரது அரசியல் சிங்கள – பௌத்த அரசியலாக தீவிரமாக உருவெடுத்தது.

1999இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்வுசெய்யப்பட்டார் சந்திரிகா குமாரதுங்க. இதற்குப் பிறகு, தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வை அளிக்கக்கூடிய புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கி அதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய விரும்பினார் சந்திரிகா குமாரதுங்க. இதற்கு பௌத்த பிக்குமார்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

மஹிந்தவும் இந்த புதிய அரசியல் சாசனத்தை ஏற்கவில்லை என்கிறார், குஷால் பெரேரா. “இந்த அரசியல் சாசனம் நிறைவேறினால் நான் எனது மக்களிடம் செல்ல முடியாது” என மஹிந்த தன்னிடம் கூறியதாக தனது Rajapaksa – The Sinhala Selfie நூலில் குறிப்பிடுகிறார் அவர்.

இந்த அரசியல் சாசனம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால், மஹிந்த எதிர்ப்பார் என்று செய்தி பரவிய நிலையில், அந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவேயில்லை. இதற்குப் பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியே மீண்டும் கூடுதல் இடங்களைக் கைப்பற்றியது.

ஆனால், ஆட்சியமைப்பதில் ஏற்பட்ட குழப்பங்களில் நாடாளுமன்றம் மீண்டும் கலைக்கப்பட்டு, 2001ல் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைப் பிடிக்க, எதிர்க்கட்சித் தலைவரானார் மஹிந்த. இந்த காலகட்டத்தில், பெரிய சலசலப்புகளை ஏற்படுத்தாதவராகவே இருந்தார்.

தமிழ்ப் பகுதிகளுக்கு அதிகாரப் பகிர்வுகளை அளிப்பதில் ஏற்பட்ட சிக்கல்களால், 2004 ஏப்ரலில் மீண்டும் ஒரு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் பெரும்பான்மை இடங்களை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டணி வெல்ல, தன் ஆதரவாளரான ரத்ன ஸ்ரீ விக்ரமசிங்கேவை பிரதமராக்க விரும்பினார் சந்திரிகா. ஆனால், பௌத்த பிக்குகளின் ஆதரவு மஹிந்தவுக்கே இருந்தது.

முடிவில், தனக்கு விருப்பமில்லாத நிலையிலும் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் சந்திரிகா குமாரதுங்க. 2005 ஆகஸ்ட்டில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த லக்ஷ்மண் கதிர்காமர் கொல்லப்பட்டதையடுத்து, போர் நிறுத்தத்திற்கு எதிரான ஒரு மன நிலையையும் தீவிர புலிகள் எதிர்ப்பு மன நிலையையும் அடுத்த ஜனாதிபதியாக தீவிர சிங்கள ஆதரவு மனநிலை கொண்டவரே வரவேண்டுமென்ற மனநிலையும் நாட்டின் தென்பகுதியிலும் சிங்கள அரசியல் சக்திகள் மத்தியிலும் உருவாகியது.

சந்திரிகா குமாரதுங்கவின் இரண்டாவது ஜனாதிபதி பதவிக்காலம் முடிவுக்கு வந்துகொண்டிருந்தபோது, அவரது குடும்பத்திற்குள் அவர் முன்னிறுத்தக்கூடியவகையில் யாரும் இல்லை. முடிவில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தக்கூடியவரா மஹிந்த ஒருவரே தென்பட்டார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவே இருப்பார் என 2005ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கட்சி அறிவித்தது. மிக வேகமாக தனது தேர்தல் பிரசாரத் திட்டங்களை வகுக்க ஆரம்பித்தார் மஹிந்த.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். போர் நிறுத்தத்தின் மூலம் அமைதியைக் கொண்டுவரும் ஜனாதிபதியாக தன்னை ரணில் முன்னிறுத்திவந்த நேரம், ‘ஒரே இலங்கை’ என்ற கோஷத்தை முன்வைத்து சிங்கள மக்களை ஒன்று திரட்டினார் மஹிந்த.

ஜனாதிபதியானார் மஹிந்த

இந்த நிலையில்தான், தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமென அழைப்பு விடுத்தது புலிகள் இயக்கம். ஆனால், புலிகளின் இந்த அழைப்பு தனக்கு பாதகமாக முடியுமென ஐக்கிய தேசியக் கட்சி கருதவில்லை. புலிகளின் அறிவிப்பின்படி வடக்கிலும் கிழக்கிலும் இருந்த தமிழ் பேசுவோர் பங்கேற்கவில்லை.

தேர்தல் முடிவுகள் வெளியாயின. மஹிந்த 50.29 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றிருந்தார். ரணிலைவிட சுமார் ஒரு லட்சத்து என்பதாயிரம் வாக்குகளை அவர் கூடுதலாகப் பெற்றிருந்தார்.

வெற்றிக்குப் பிறகு பேசிய மஹிந்த, தான் எல்லா மக்களுக்குமாகச் சேர்த்து பாடுபடப்போவதாகவும், புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த மேலும் உகந்த சூழலை உருவாக்க வேண்டுமானால், போர் நிறுத்த ஒப்பந்தத்தைக்கூட திருத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார் மஹிந்த.

ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு, உடனடியாக இருவருக்கு முக்கியப் பதவி வழங்கப்பட்டது. அதில் ஒருவர் அவருடைய சகோதரரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ. அவர் பாதுகாப்புச் செயலராகப் பதவியேற்றார். மஹிந்த ஜனாதிபதியான பிறகு, சில மாதங்களில் புலிகள் தரப்போடு பேச்சுவார்த்தை முயற்சிகள் நடந்தாலும் அதில் வெற்றி ஏதும் கிடைக்கவில்லை.

2006ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருகோணமலையில் உள்ள மாவிலாறு அணை மூடப்பட்ட விவகாரம், இரு தரப்புக்கும் இடையில் புதிய மோதல் துவங்குவதற்கான புள்ளியாக அமைந்தது. இதற்குப் பிறகு 2007ல் கிழக்குப் பகுதி முழுமையாக இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் வர, 2008ஆம் ஆண்டின் தொடக்கத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து வெளியே வந்தார் மஹிந்த.

இந்த காலகட்டத்தில் பாதுகாப்புத் துறை செயலர் என்ற வகையில் கோட்டாபய ராஜபக்ஷவின் இமேஜ் தொடர்ந்தது அதிகரித்தது. ஆட்கடத்தல், சட்டவிரோதமாக பிடித்துவைத்தல், காணாமலாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ராணுவத்தின் மீது சுமத்தப்பட்டன. முடிவாக, 2009 மே 17ஆம் தேதி யுத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

கேள்வியே கேட்க முடியாத அரசன்

இந்த கட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷவின் செல்வாக்கு உச்சத்தைத் தொட்டது. ஜனாதிபதி என்ற நிலையிலிருந்து கேள்வியே கேட்க முடியாத அரசன் என்ற நிலைக்கு உயர்ந்தார் மஹிந்த.

2010இல் மீண்டும் ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது, மீண்டும் போட்டியிட்டார் மஹிந்த. அவரை எதிர்த்து, பொது வேட்பாளராக இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சரத் பொன்செக நிறுத்தப்பட்டார். ஆனால், சரத் பொன்செகவைவிட 17 சதவீத வாக்குகளை அதிகம் பெற்று மீண்டும் ஜனாதிபதியானார் மஹிந்த ராஜபக்ஷ.

இந்த இரண்டாம் முறை தேர்வுசெய்யப்பட்டபோது, வீரகெட்டிய கிராமத்தில் தனது அரசியல் வாழ்வைத் துவங்கிய மஹிந்த, அங்கிருந்து வெகு தூரம் சென்றிருந்தார்.

மஹிந்த ராஜபக்ஷ - கோட்டாபய ராஜபக்ஷ

“காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் அவர் செயல்பட்ட விதத்தை வைத்து அவரை நாங்கள் மிகவும் நம்பினோம். ஆனால், அதிகாரம் வந்த பிறகு அவர் மாறிவிட்டார். சந்தர்ப்பவாதியாகிவிட்டார். மனித உரிமை ஆர்வலராகச் செயல்பட்டதெல்லாம், ஒரு விளம்பரத்திற்காத்தான் என்பது புரிகிறது” என்கிறார், ஒரு காலகட்டத்தில் மஹிந்தவுடன் இணைந்து மனித உரிமை ஆர்வலராகச் செயல்பட்ட பிரிட்டோ.

ஒரு காலத்தில் மனித உரிமைகள் போராளியாக அறியப்பட்டு, அரசியலில் முக்கியத்துவம் பெற்ற மகிந்த ராஜபக்ஷ, 2009 மே மற்றும் அதற்கு முந்தைய மாதங்களில் நடந்த இறுதிப்போரில் மனித உரிமை மீறல்களிலும் போர் குற்றங்களிலும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், வெளிநாடுகளில் எந்த அளவுக்கு ராஜபக்ஷ மீது கண்டனங்கள் எழுந்தனவோ, அதே அளவுக்கு அவருக்கு உள்நாட்டில் அரசியல் செல்வாக்கும் உயர்ந்தது.

விடுதலைப் புலிகளை வீழ்த்தியதில் இப்போதைய ஜனாதிபதியும், அப்போதைய பாதுகாப்புச் செயலருமாகிய கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், அப்போதைய ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவுக்கும் அதிமுக்கியமான பங்குண்டு என்றாலும் மஹிந்தவின் அரசியல் தலைமையால்தான் அது சாத்தியமானது என்று இலங்கையின் பெரும்பான்மை சமூகம் நம்பியது.

இரண்டாவது முறை மஹிந்த ஜனாதிபதியானதும், அவரது சகோதரர், மகன் மற்றும் குடும்பத்தினருக்கு கொடுக்கப்பட்ட பதவிகள் அவரது செல்வாக்குக்கு பலத்த சேதத்தை உண்டாக்கின.

இரண்டு முறைக்கு மேல் ஒருவர் ஜனாதிபதி ஆக முடியாது என்ற இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் சரத்தை தமது இரண்டாவது பதவிக் காலத்தின்போது திருத்திய மஹிந்த, 2015 ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையாகப் போட்டியிட்டார். ஆனால், பல எதிர்க்கட்சிகளின் கூட்டு வேட்பாளராகப் போட்டியிட்ட, பெரிய அரசியல் செல்வாக்கோ, மக்கள் செல்வாக்கோ இல்லாத மைத்திரிபால சிறிசேன இந்தத் தேர்தலில் மஹிந்தவை வீழ்த்தினார். (மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்ததும் அரசமைப்புச் சட்டம் மீண்டும் திருத்தப்பட்டு இருமுறை ஜனாதிபதி பதவி வகித்தவர் மூன்றாவது முறை போட்டியிட முடியாது என்ற பழைய விதியே கொண்டுவரப்பட்டது. ஜனாதிபதி பதவிக்காலமும் ஐந்து ஆண்டுகளில் இருந்து நான்கு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.)

மைத்திரிபால சிறிசேன

வீழ்ந்த ராஜபக்ஷ

ஏற்கெனவே இரண்டு முறை ஜனாதிபதி பதவியில் மஹிந்த இருந்தார் என்பதால், 2019 ஜனாதிபதி தேர்தலில் அவரால் போட்டியிட முடியவில்லை. இதனால், 2016இல் மஹிந்த ராஜபக்ஷ உருவாக்கிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட மஹிந்தவின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாசவை வீழ்த்தி ஜனாதிபதியானார்.

இதற்குப் பிறகு, ரணில் பிரதமர் பதவியில் இருந்து விலகிவிட அதன்பின் சிறுபான்மை அரசின் பிரதமராகப் பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷ, ஆகஸ்டு 2020இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வென்று மீண்டும் பிரதமரானார்.

ஆனால், இலங்கையில் அடுத்தடுத்து பொருளாதார ரீதியாக ராஜபக்ஷ சகோதரர்கள் இணைந்து எடுத்த முடிவுகள், நாட்டை மிக மோசமான சூழலுக்குத் தள்ளின. முடிவில் மே ஒன்பதாம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார் மஹிந்த.

1970இல் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் வென்றதன் மூலம் தன் அரசியல்வாழ்வைத் தொடங்கிய மஹிந்த, அமைச்சர், பிரதமர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்று உயர்ந்து, தற்போது பாதுகாப்புக் காரணங்களுக்காக திருகோணமலை கடற்படைத் தளத்தில் அடைக்கலம் புகும் அளவுக்கு வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறார்.

ஆனால், இலங்கை அரசியலில் நிகழ்வுகள் மிக வேகமாக நடக்கும். ஒருபோதும் நடக்கவே நடக்காது எனத் தோன்றக்கூடிய நிகழ்வுகள் சர்வசாதாரணமாக நடந்துவிடும். ஆகவே, மஹிந்தவின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதாக ஒருவர் இப்போதே முடிவுரை எழுதிவிட முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here