உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை நிரந்தரமாக மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அந்த ஆலை எப்படி பயணித்து வந்திருக்கிறது என்பது குறித்த ஒரு பார்வை.

கடந்த 1992-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் கொங்கன் பிராந்தியத்தில் உள்ள ரத்னகிரியில், ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்று கூறி, முதன் முதலில் கால் பதிக்க ஸ்டெர்லைட் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. கட்டுமானப் பணிகளும் துவங்கிவிட்டன. ஆனால், அந்தப்பகுதி மக்களின் கடும் எதிர்ப்பால், அடுத்த ஆண்டே அந்தத் திட்டத்தை நிறுத்த அரசு உத்தரவிட்டது.

அடுத்த ஆண்டே, தமிழகத்தில் அந்த ஆலையின் பிரவேசம் துவங்கியது.

கடந்த 1994-ஆம் ஆண்டு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது. 1995-ல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது.

உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் அதை எதிர்த்து பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.

தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளின்படி அனுமதி வழங்கலாம் என்று நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் உத்தரவிட்டது.

28
நீதிமன்ற ஆணையின் பரிந்துரை என்ன?

1996-ல் தன்னார்வ அமைப்பு தொடர்ந்த வழக்கில், நீரி என்ற தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம், ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுச்சூழல்மாசு தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை அளித்தது. 1998-ல் சமர்ப்பிக்கப்பட்ட அந்த அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலை பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்டிருப்பதாகவும் சுற்றுச்சூழலை பாதிக்கும் செயல்பாடுகள் காணப்படுவதாகவும் கூறியிருந்தது.

அதனடிப்படையில், 1998-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி அந்த ஆலையை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த மாதம், தனது உத்தரவை மாற்றியமைத்த நீதிமன்றம், ஆலை தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கியதுடன், நீரின் அமைப்பு குறித்து மீண்டும் ஆய்வு நடத்த உத்தரவிட்டது. அடுத்த இரு மாதங்களுக்குள் அறிக்கை அளித்த நீரி, அந்த ஆலை முழுத்திறனுடன் செயல்பட அனுமதி வழங்கியது.

நீதிமன்ற ஆணைப்படி, சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பான மதிப்பீடு சோதனை நடத்த ஆலை முழுத்திறனுடன் இயங்கவும் பரிந்துரைத்தது. அதன்பிறகு, பல முறை, அந்த ஆலை அனுமதிக்கப்பட்ட அளவை விட பலமடங்கு அதிகமாக உற்பத்தியில் ஈடுபட்டதாகவும் புகார்கள் வெளிவந்தன.

அதன்பிறகு தொடர்ச்சியாக பொதுமக்கள் தரப்பிலிருந்து பல புகார்கள் கூறப்பட்ட நிலையில், 2004-ல் உச்சநீதிமன்றக் குழு மேற்கொண்ட ஆய்வில் பல விதிமீறல்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

கடந்த 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஸ்டெர்லைட் ஆலையில் பெரும் வாயுக்கசிவு ஏற்பட்டதாக வந்த புகாரை அடுத்து, அந்த ஆலையை மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்தது. ஆனால், அந்த வாயுக்கசிவு தங்களால் ஏற்பட்டதல்ல என்றும், சிப்காட் தொழில் வளாகத்தில் உள்ள வேறு எந்த ஆலையின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று ஸ்டெர்லைட் வாதிட்டது.

ஆனால், அதற்கு அடுத்த மாதம், அந்த ஆலை செயல்பட நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும், அந்த ஆலையின் சுற்றுச்சூழல் மாசு காரணமாக பாதிக்கப்படும் மக்களுக்காக 100 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அந்த உத்தரவு, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மறு ஆய்வு செய்யப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிப்பு

மேலும், அந்த ஆலை உற்பத்தித் திறனை அதிகரித்தால், அதற்கு ஏற்றவாறு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதிய விதிமுறைகளை அறிவிக்கலாம் என்றும் தெரிவித்தது.

இந்த ஆண்டு, ஜனவரி மாதம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அந்த ஆலையில் சோதனை நடத்தியது. அந்த ஆலை, விதிமுறைகளைக் கடைபிடிக்கவில்லை என்று கண்டறிந்த வாரியம், 90 நாள் கெடு விதித்தது. அதன்பிறகு, ஏப்ரல் மாதம் மீண்டும் ஆய்வு நடத்தி, அப்போதும் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறியது.

அதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் மாதம் அந்த ஆலைக்கான மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், தமிழக அரசு அந்த ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டிருக்கிறது.

இரண்டாவது பிரிவின் நிலை

33750354_231964160912807_8351585815700176896_n

இதே நேரத்தில், கடந்த ஆண்டு இந்த ஆலையின் இரண்டாவது பிரிவைத் துவக்க அரசு அனுமதி வழங்கியிருந்தது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் ஒப்புதல் வழங்கியது.

இதை எதிர்த்து, பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. பிப்ரவரி மாதம் அந்தப்பிரிவுக்கான கட்டுமானப்பணி துவங்கியது.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவில், அந்த கட்டுமானப் பணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது சுற்றுச்சூழல் அனுமதிக்கு, சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பான ஆய்வு நடத்தவும் உத்தரவிட்டது.

மேலும், நான்கு மாதங்களுக்குள் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது, ஆலையின் முதல் பிரிவை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இரண்டாவது பிரிவும் சாத்தியமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

Courtesy : BBC Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here