பஞ்ச பூதங்களில் முதன்மையானது தண்ணீர். நம் உடலில் முக்கால் பாகம் நீரால் ஆனது. உயிரியல் வகுப்புகளில் கடல் நீரிலிருந்து உயிரினம் தோன்றியதாக் சொல்லித் தருவார்கள். அதே அறிவியல், நீரை உயிரற்ற பொருள் என்கிறது. ஆனால், உயிரற்ற அந்த தண்ணீர்தான் நம்மைப் போன்ற உயிருள்ள ஜீவன்களை வாழ வைக்கிறது.

இந்தப் புவி 75 சதவிதம் கடல்நீரால் சூழப்பட்டது. மீதமிருக்கும் நிலத்தில் ஆங்காங்கே ஒளிந்திருக்கும் தண்ணீர்தான் உயிரினங்களை வாழ வைக்கிறது. இந்த நீர், நிலத்தடி நீராகவே அதிக அளவில் உள்ளது. அடுத்து ஆறு, குளம், ஏரி, மழை இவையே உயிரினங்கள் நம்பியிருக்கும் நீர் ஆதாரங்கள். ஒரு ஆச்சரியமான விஷயம் சொல்ல இருக்கிறது. நாலாபுறமும் கடல் சூழ்ந்த தீவிலும்கூட நல்ல இனிப்பான நிலத்தடி நீர் கிடைக்கும். இப்படியான சிறப்புமிக்க நிலத்தடி நீரை வேகமாக உறிஞ்சிக் கொண்டிருக்கிறோம் நாம்! நிலத்தடி நீரை தக்கவைக்கும் ஒரே வாய்ப்பு மழை நீரை திருப்பி பூமிக்குள் அனுப்புவதில்தான் இருக்கிறது.

கடலிலிருந்து ஆவியாகும் நீர் நமக்கு இரண்டு பருவங்களில் மழையாகப் பொழிகிறது. ஜூன், ஜூலை மாதங்களில் பொழியும் தென்கிழக்கு பருவமழை. இது கேரளாவுக்கு எவ்வளவு மழையைத் தர முடியுமா அவ்வளவையும் பொழிந்துவிட்டு, கொஞ்சமாக தமிழ்நாட்டிலும் பெய்துவிட்டுப் போகும். இந்த மழையைப் பொறுத்தவரை நிழல் மழை பிரதேசமாக தமிழ்நாடு இருக்கிறது.

நமக்கு அதிக அளவிலான மழைநீர், வடகிழக்கு பருவமழையில் கிடைக்கிறது. இது வடகிழக்கில் அஸ்ஸாம், வங்காளம் தாண்டி வந்து அப்படியே வங்காள விரிகுடாவில் இருக்கும் நீரை எடுத்து நம்மீது மழையாகப் பொழிந்துவிட்டுச் செல்லும். சில சமயம் இது புயலாக மாறி அதிக மழையையும் கொட்டி விட்டுச் செல்வதுண்டு. இந்த பருவத்தில் பெய்கிற தண்ணீர் பெரும்பாலும் வீணாகி, கடலுக்குள் போய்ச் சேருகிறது என்பதே நிதர்சனம்.

இப்படி வருகிற மழை, வெறும் நீராக மட்டும் கடலில் சேர்வதில்லை. நிலத்தின் மேல் மண்ணையும் அரித்துக் கொண்டுபோகிறது. ஒரு இன்ச் மேல் மண் உருவாக கிட்டத்தட்ட 250 ஆண்டுகள் ஆகிறது. இந்த மேல்மண்ணில்தான் உயிரினங்களை வாழவைக்கக்கூடிய தனிமச் சத்தும் மூலப் பொருட்களும் இருக்கின்றன. ஆக, இப்படி வீணாகும், மண் அரிப்பை ஏற்படுத்தும் மழை நீரை என்ன செய்யலாம்? அறுவடை செய்யலாம்!

மழைநீர் அறுவடை என்றதும் அரசாங்கம் செய்யச் சொன்னதே… ஒரு அடிக்கு ஒரு அடி தொட்டி கட்டி, கருங்கல், கூழாங்கல், மணல் போட்டு வைப்பது அல்ல. அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை! கட்டடங்கள் நிறைந்த மாநகரங்களைப் பொறுத்தவரை, அந்தக் கட்டடம் கட்டும்போதே மண்பரிசோதனை செய்து, அந்த மண்ணில் பாறைகள் அதிகமாக இருக்கிறதா, மண்ணின் இயல்பு எப்படி இருக்கிறது என்று சோதித்து அதற்கேற்றபடி நீர் அறுவடைத் தொட்டிகளை அமைக்க வேண்டும். 6 அடி உயரம் 4 அடி அகலம் என்று சொல்வதெல்லாம் ஒரு உதாரணத்துக்குத்தான். அது எல்லா இடத்துக்கும் பொருந்தாது. இப்படி முறையாகச் செய்யப்படும்போதே மழைநீர் நிலத்துக்குள் இறங்கி நிலத்தடி நீராக சேகரமாகும்.

தண்ணீர் மிகத் தட்டுப்பாடாக இருக்கும் இடங்களில் அறுவடைத் தொட்டிகளில் நீரைச் சேமித்து, அதை சுத்தப்படுத்தி அன்றாடப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்தலாம். மாநகரங்களில் இருப்பவர்கள் இப்படி செய்யலாம்.

கிராமப்புறங்களில் எப்படி மழைநீரைச் சேமிப்பது? முன்பெல்லாம் ஒவ்வொரு கிராமத்திலும் கோயில், தோப்பு, குளம் என்கிற அமைப்பு இருக்கும். கோயிலை ஒட்டி இருந்த தோப்புகளில் இருந்த மரங்கள் உதிர்க்கும் இலைகள், சருகுகளாக நிலத்தின் மேல் விழுந்து மக்கி, அந்த மண்ணை ஸ்பாஞ்ச் போல ஆக்கிவிடும். மழை பொழியும்போது நீரானது இந்த ஸ்பாஞ்சால் உறிஞ்சப்பட்டு, அப்படியே குளத்துக்குள் அனுப்பப்படும். குளத்தின் நீர் உயரும்போது நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து கிராமத்து கிணறுகளில் நீர் பெருகும்.

இப்போது இந்தத் தோப்புகளை வெட்டி, தரைமட்டமாக்கி கட்டடங்கள் எழுப்பிவிட்டோம். குளம் வற்றிவிட்டது. நிலத்தடி நீரும் இல்லை;கிணறுகளிலும் நீர் இல்லை. விவசாயம் பொய்த்துவிட்டது. நிலத்தடி நீரைச் சேமிக்க மிகப் பெரிய நீர் மேலாண்மை திட்டங்களையெல்லாம் போடவேண்டியதில்லை. குளம், ஏரிகளை சுத்தம் செய்து, மழைக்காலங்களில் பொழியும் மழைநீரை சேமித்தாலே போதும்; தண்ணீர் பிரச்சினை தானாக சரியாகிவிடும்!

தொடர்புடைய பதிவுகள்: இயற்கையின் சமிக்ஞைகளுக்குக் காதுகொடுங்கள்: பேராசிரியர் இஸ்மாயில்

1 COMMENT

  1. //குளம், ஏரிகளை சுத்தம் செய்து, மழைக்காலங்களில் பொழியும் மழைநீரை சேமித்தாலே போதும்; தண்ணீர் பிரச்சினை தானாக சரியாகிவிடும்!// பேருண்மையான கருத்து, அங்கிருந்து தண்ணீர் வேண்டும், இங்கிருந்து தண்ணீர் வேண்டும் என அரசியல் செய்து, நம்மைநாமே ஏமாற்றிக்கொண்டு காலம் கடத்துவதைவிட, இதுப்போன்ற சுய முயற்சி செய்தாலே போதும் எனத் தோன்றுகிறது.

    தமிழகத்திற்கு அண்டை மாநிலங்களில் இருந்து தண்ணீர் தரவேண்டும் என்பதும் அதைபெற்றே ஆகவேண்டும் என்பது நமது ஜீவாதர உரிமை. அதற்காக அதை மட்டுமே நினைத்துக்கொண்டு காலம் கடத்துவது மடமையின் அறிகுறி!

    போராட்டம் நடத்துவோர், குளம்,குட்டை,ஏரிகளை சுத்தம் செய்யும் போராட்டமும் செய்திருந்தால் இப்போது தண்ணீர் பற்றாக்குறையில்லாத – மிக செழிப்பான மாநிலமாக நமது தமிழகம் இருந்திருக்கும். இனியேனும் செய்வோமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here