நமது வேளாண் குடிகளின் கதை மீது பெரிய வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறது “என்றாவது ஒரு நாள்” திரைப்படம்.

மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதியன்று (2021) தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரைக்கு அருகில் வயலில் வேலை செய்யும் பெண்களோடு வரப்பில் நின்று பேசினார். அந்தக் கிராமத்தின் பெயர் நாட்டார்பட்டி. கையில் நாற்றோடு முன்னால் நின்று ஒரு பெண் தைரியமாகப் பேசுவார். “எனக்கு அஞ்சு மாடு இருக்குதுங்க. ஆனா வீடுதான் இல்லங்க. உதவி பண்ணுங்க” என்று அவர் சொல்லுவார். நமக்கான உணவை உற்பத்தி செய்யும் ஊர்களின் கதைகள் எப்படி இருக்கின்றன? வெற்றி துரைசாமி இயக்கத்தில், ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் “என்றாவது ஒரு நாள்” திரைப்படம் நமது வேளாண் குடிகளின் கதை மீது பெரிய வெளிச்சம் பாய்ச்சுகிறது. ”மாட்டு மணி சத்தம்…எங்க கோயில் மணி சத்தம்…வீடு இல்லாம இருப்பதுண்டு மனுஷ சாதி. ஆனா மாடு இல்லாம இருப்பதில்ல உழவு சாதி…” என்கிற அழகிய பாடல் வரிகளுடன் படம் ஆரம்பத்திலேயே உங்களைக் கிராமத்தின் நெஞ்சுக்குள் அழைத்துச் செல்கிறது. உழவு மாடுகளை அழகான கதாபாத்திரங்காளாக்கியதுதான் இந்தப் படத்தின் வெற்றி.

“ரேஷன் கார்டு எழுதும்போது பேர விட்டுப்போச்சு” என்று மாடுகளிடம் அன்போடு சமாதானம் பேசும் கதாபாத்திரங்களில் விதார்த்தும் ரெம்யா நம்பீசனும் வாழ்ந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டின் நீர்ப் பற்றாக்குறையை, நகர்மயமாக்கலின் சவால்களைச் சமகாலத்தின் அத்தனைத் தீவிரத்துடனும் உணர்ந்து கொள்வதற்கு இந்தப் படம், ஒரு கலை வடிவ வாசலாக இருக்கிறது. விவசாயம், வறுமை, நம்பிக்கை என்கிற மூன்று தளங்களில் அழகாகப் பயணிக்கிறது கதை. வெற்றி துரைசாமி அறிமுக இயக்குனர் என்ற எண்ணம் வராத அளவுக்குப் படம் நேர்த்தியாக வந்திருக்கிறது. கந்து வட்டிச் சவால், குழந்தைத் தொழிலாளர்கள் உருவாதல் ஆகியவை எப்படி நமது தினசரி செயல்பாடுகளுடன் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பதைக் கதையின் போக்கில் சொல்லிச் செல்கிறார் இயக்குனர். பள்ளி செல்லும் சிறுவனாக, முக்கிய பாத்திரத்தில் வரும் மாஸ்டர் ராகவன் நடிப்பில் மிளிர்கிறார். மாட்டிடம் அன்பு செலுத்தும் காட்சிகளிலும், குழந்தைத் தொழிலாளியாக வரும் காட்சிகளிலும் தேர்ந்த கலைஞர்களின் தெளிவைப் பார்க்க முடிகிறது. நாம் தேர்வு செய்துகொண்ட விவசாய வாழ்வின் பலனாக வருவது வறுமைதான் என்றால் அதை ஏற்றுக் கொள்கிற பக்குவம்தான் இந்தக் கதையின் அடிநாதமாக இருக்கிறது. நமது உணவை உற்பத்தி செய்கிற மக்களின் அன்றாட பாடுகளை அழகான சித்திரமாக்கியிருக்கிறது “என்றாவது ஒரு நாள்.” மழைத் துளிகளும் வியர்வைத் துளிகளும் எவ்வளவு ரம்மியமானவை என்பதை ஆழ்ந்து நோக்கினால் அறியலாம்.

ஹூக்ளி நதியை ஆளும் தமிழச்சி

இப்போது: தலைமை இடத்தில் தமிழ் ஊடகம்

Exclusive: The Raya Sarkar Interview

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here