காரசாரமான இந்த பூண்டு சட்னி செய்வதற்கு எளிது. எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்தமானது. இந்த சட்னி செய்யும் அன்று கூடுதலாக இரண்டு இட்லி சாப்பிடுவார்கள். புளிப்பும் காரமும் சேர்ந்து மிகவும் ருசியுடன் இருக்கும் பூண்டு பிடிக்காதவர்கள் கூட இந்த சட்னியை விரும்பி சாப்பிடுவார்கள்.
ரொம்ப தூரம் பிரயாணம் செய்பவர்கள் இதை தாரளமாக எடுத்துச் செல்லலாம். இரண்டு மூன்று நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாது. நான் இட்லிக்கு மட்டும் இல்லாமல் குழிப் பணியாரம், அரிசி ரவையில் செய்யும் கொழுக்கட்டை எல்லாவற்றிக்கும் தொட்டுக் கொள்ள செய்வேன்.
முக்கியமாக பூண்டு நம் உடல் நலனுக்கு பெரும் உதவி செய்கிறது. எனவே நாம் சாப்பிடும் உணவில் தினமும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது நான் பூண்டு சட்னி செய்வது எப்படி என்று சொல்கிறேன்.
தேவையான பொருட்கள்
பூண்டு – 1கிண்ணம்
சிவப்பு மிளகாய் -5
புளி – நெல்லிக்காய் அளவு
உப்பு – ருசிக்கேற்ப
கடுகு – தாளிப்பதற்கு
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை -சிறிதளவு
செய்முறை:
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் பூண்டு, மிளகாய் இரண்டையும் போட்டு கருகாமல் நன்கு சிவக்கும் வரை வதக்கவும். ஆறியவுடன் புளி, உப்பு போட்டு அரைத்து எடுக்கவும். அதற்குப் பிறகு கடுகு தாளித்து அரைத்து வைத்த சட்னி மேல் போடவும். சுவையான சத்தான பூண்டு சட்னி ரெடி.