மலேசிய பிரதமர் மகாதீர் மொஹமத் பதவி விலக முற்றும் நெருக்கடி: 5 இடைத்தேர்தல்களில் தொடர் தோல்வி

0
149

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவின் அரசியல் களத்தில் இந்தளவு பரபரப்பும் திடீர்த் திருப்பங்களும் இருந்ததில்லை. ஆனால் இப்போது நிலைமை தலைகீழ்.

அண்மைய சில ஆண்டுகளாக மூன்று தலைவர்களை மையப்படுத்தியே மலேசிய அரசியல் களம் சுழன்று வருகிறது.

நேற்றைய பிரதமர் நஜீப் ரசாக், இன்றைய பிரதமர் மகாதீர் மொஹமத், நாளைய பிரதமராகக் கருதப்படும் அன்வார் இப்ராஹிம் ஆகிய மூவரையும் மையப்படுத்தி நடந்தேறும் நிகழ்வுகள், மூவரைப் பற்றி வெளியாகும் கருத்துகள், இம்மூவரும் தெரிவிக்கும் கருத்துகளால் மலேசிய அரசியல் களத்தில் புதுப்புது சலசலப்புகள், விவாதங்கள் முளைத்து வருகின்றன.

இந்நிலையில் பிரதமர் பொறுப்பில் இருந்து மகாதீர் விலக வேண்டும் என்றும், அன்வார் இப்ராஹிமை பிரதமராக்க வேண்டும் என்றும் குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன.

அண்மைக்காலமாக மகாதீர் மொஹமத் எப்போது ஊடகவியலாளர்களைச் சந்தித்தாலும் அவர்கள் மறக்காமல், தவறாமல் எழுப்பக்கூடிய ஒரு கேள்வி, “அன்வார் இப்ராஹிம் எப்போது பிரதமராகப் பொறுப்பேற்க உள்ளார்?” என்பதுதான்.

மலேசியாவில் புதிய அரசாங்கம் அமைந்த பிறகு நடைபெற்ற ஐந்து இடைத்தேர்தல்களில் ஆளும் கூட்டணி படுதோல்வி அடைந்ததும் இதற்கொரு காரணமாகக் கூறப்படுகிறது.

1981 முதல் 2003 வரை 22 ஆண்டுகள் பிரதமர் பதவியில் நன்கு அனுபவம் பெற்றுள்ள மகாதீர் ஏன் பதவி விலக வேண்டும்? அவர் பிரதமராக நீடிப்பதில் என்ன சிக்கல்? மலேசிய ஆட்சியாளர்கள் மத்தியில் ஏதேனும் குழப்பங்கள் நிலவுகின்றனவா? என்பன போன்ற கேள்விகளை இக்கட்டுரை அலசுகிறது.

தேர்தலுக்கு முன்பு செய்து கொண்ட உடன்படிக்கை

அன்வார் இப்ராஹிம்
அன்வார் இப்ராஹிம்

மலேசியாவில் தற்போது நம்பிக்கை கூட்டணி என்று அழைக்கப்படும் ‘பக்காத்தான் ஹராப்பான்’ கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இதில் இடம்பெற்றுள்ள கட்சிகள் கடந்த 2018ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு வகுத்துக் கொண்ட குறைந்தபட்ச செயல் திட்டங்களின்படி, தேர்தலில் இக்கூட்டணி வென்றால் மகாதீர் முதலில் பிரதமராகப் பொறுப்பேற்பார், அன்வாரின் மனைவி வான் அசிஸா துணைப் பிரதமராவார் என்று முடிவானது.

குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அன்வாரிடம் பிரதமர் பொறுப்பை ஒப்படைத்து மகாதீர் ஒதுங்கிக் கொள்வார் என்றும் பேசி முடிவெடுக்கப்பட்டதாக அக்கூட்டணித் தலைவர்கள் அறிவித்தனர்.

அச்சமயம் தேசிய முன்னணி கூட்டணி அரசில் பிரதமராக இருந்த நஜீப் ரசாக் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. நாட்டின் பொருளாதாரம் பாதாளத்துக்குச் சென்று விட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

இதையடுத்து பிரதமராக இருந்த நஜீப்புக்கு எதிராக பகிரங்கமாகக் குரல் கொடுக்கத் துவங்கினார் மகாதீர். இத்தனைக்கும் அதே தேசிய முன்னணியின் ஆட்சிக் காலத்தில்தான் முன்பு மகாதீரும் 22 ஆண்டுகள் பிரதமராகப் பொறுப்பு வகித்தார்.

எனினும் நாட்டைக் காப்பாற்ற வேண்டுமானால் நஜீப்பை பிரதமர் பொறுப்பில் இருந்து அப்புறப்படுத்தியே ஆக வேண்டும் என்ற அறைகூவலுடன் நிற்காமல், அன்றைய எதிர்க்கட்சிகளை வைத்து பெரும் கூட்டணியை அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.

அப்படி உருவானதுதான் ‘பக்காத்தான் ஹராப்பான்’ கூட்டணி. இந்தப் புதிய கூட்டணி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் முக்கியமாக இடம்பெற்றிருந்த சில அம்சங்களில் ஒன்று, “முதலில் மகாதீரும், அடுத்து அன்வார் இப்ராஹிமும் பிரதமராகப் பொறுப்பு வகிப்பர்” என்பதுதான்.

தேர்தல் பிரசார மேடைகளிலும் இதை அந்தக் கூட்டணித் தலைவர்கள் மறக்காமல் உரக்கச் சொல்லியே வாக்குகள் சேகரித்தனர். கூட்டணி உருவான சமயத்தில் சிறையில் இருந்தார் அன்வார்.

தேர்தலுக்குப் பின்னர் புதிய அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியின் பலனாக அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அன்வார் இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும்?

நஜீப் ரசாக்
நஜீப் ரசாக்

94 வயதிலும் உலகின் மூத்த அரசியல் தலைவரும், மலேசியப் பிரதமருமான மகாதீர் மிகத் தீவிரமாகச் செயலாற்றுகிறார். மலேசியாவை பழையபடி வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே தமது ஒரே குறிக்கோள் என்கிறார்.

எப்போது பிரதமர் பொறுப்பு கைமாற்றப்படும் என்ற கேள்வியை மகாதீர் தவிர்ப்பதில்லை. அதேபோல் அன்வாரும் தாம் அவசரப்படுவதாகக் காட்டிக் கொள்வதில்லை.

அனுபவசாலியான மகாதீருக்கு இந்த விஷயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது நன்கு தெரியும் என்கிறார் அன்வார்.

“நாட்டை சரியான பாதைக்கு திருப்பிவிட்டால் என் பணி முடிந்துவிடும். அதன் பிறகு அன்வாரிடம் பொறுப்பை ஒப்படைப்பதில் தயக்கமில்லை. ஆனால் அதற்கு இது சரியான தருணம் அல்ல. சில காலம் காத்திருக்கத்தான் வேண்டும்,” என்கிறார் மகாதீர்.

ஆனால் அவர் குறிப்பிடும் கால அவகாசம் என்பது சில வாரங்களா, மாதங்களா, ஆண்டுகளா என்பதே அன்வார் ஆதரவாளர்களின் கேள்வியாக உள்ளது.

ஐந்து இடைத்தேர்தல்களில் பக்காத்தான் படுதோல்வி

இந்நிலையில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசு அமைந்த பிறகு இதுவரை ஐந்து இடைத்தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. அவை அனைத்திலும் இந்தக் கூட்டணி தோல்வியை சந்தித்துள்ளது.

தேசிய முன்னணி ஒவ்வொரு முறையும் ஆளும் கூட்டணியின் வேட்பாளரை கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது. இதையடுத்து பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு மக்களிடம் இருந்த செல்வாக்கு குறைந்துவிட்டது என எதிர்த்தரப்பு கூறி வருகிறது.

இது இயல்பு என்றாலும், ஆளும் கூட்டணியைச் சேர்ந்த சிலரும் கூட இதேபோன்ற விமர்சனத்தை முன்வைக்கின்றனர்.

இடையில் மகாதீரின் தலைமை மீதான அதிருப்தியால் இந்தத் தொடர் தோல்வி ஏற்பட்டதா என்ற அலசலும் கூட நடைபெற்றது. அன்வார் ஆதரவாளர்கள் சிலர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, இதுவே மகாதீர் பிரதமர் பொறுப்பை ஒப்படைப்பதற்கான சரியான தருணம் என்று கூறி வருகின்றனர்.

“கூட்டணித் தலைமை நான் பதவி விலக வேண்டும் என விரும்பினால் உடனடியாக அதைச் செய்யத் தயார். எனக்குப் பிறகு அன்வார்தான் பிரதமர் என்பதில் மாற்றமே இல்லை. ஆனால் பொறுப்புகளை இன்ன தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று ஒப்பந்தம் ஏதும் செய்து கொள்ளவில்லை. அதற்கு உரிய நேரம் வரும்,” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார் மகாதீர்.

ஐந்து இடைத்தேர்தல்களில் தொடர் தோல்வி: மகாதீர் பதவி விலக நெருக்கடி?

தேர்தல் வாக்குறுதிகளின் நிலை என்ன? வெளிநாட்டுக் கொள்கை என்ன?

இதற்கிடையே ‘பக்காத்தான் ஹராப்பான்’ கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் என்னவாயிற்று என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மொத்த வாக்குறுதிகளில் ஐம்பது விழுக்காட்டிற்கும் மேல் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூட்டணித் தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சிகள் இதை மறுக்கின்றன.

சுங்கச்சாவடிக் கட்டணம் ரத்தாகும், சோஸ்மா சட்டம் (பாதுகாப்பு குற்றவியல் சட்டம்) அகற்றப்படும், இந்தியர்களுக்கு குடியுரிமையுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது ‘பக்காத்தான் ஹராப்பான்’ கூட்டணி.

ஆனால் எந்தச் சோஸ்மா சட்டம் அகற்றப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டதோ, தற்போது அதே சட்டத்தின் கீழ்தான் 12 மலேசியத் தமிழர்கள் கைதாகியுள்ளனர். இவ்வாறு, மலாய்க்காரர்கள், தமிழர்கள், சீனர்கள் மத்தியில் இன்னும் அதிருப்திகள் நிலவி வருவதாகவே ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல் மலேசிய அரசின் வெளிநாட்டுக் கொள்கையும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது என்கிறார் அரசியல் விமர்சகர் முத்தரசன்.

மலேசிய வெளியுறவு அமைச்சு தவறான தகவல்கள் பிரதமருக்கு அளிக்கிறதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடிப்பது மலேசியாவுக்கு நல்லதல்ல எனும் கருத்தையும் பலர் கொண்டுள்ளனர்.

கூட்டணிக் கட்சிகளில் நீடித்து வரும் உட்கட்சிப் பூசல்

அனைத்துக்கும் மேலாக ‘பக்காத்தான் ஹராப்பான்’ கூட்டணியின் உறுப்புக் கட்சிகளில் கோஷ்டிப் பூசல்கள் வெடித்துள்ளன.

அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பிகேஆர் கட்சியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக உட்கட்சிப் பூசல் நிலவி வருகிறது.

அக்கட்சியின் துணைத் தலைவரும், மலேசிய பொருளாதார அமைச்சருமான அஸ்மின் அலிக்கும், அன்வாருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகக் கூறப்படுகிறது. மேலும் மகாதீரே தொடர்ந்து பிரதமராக நீடிக்க வேண்டும் என அஸ்மின் அலி விரும்புவதாகவும், இதனால் அவர் மீது அன்வார் தரப்பு கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு ஊடகங்கள் வெளியிட்ட செய்தி ஒன்று, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரது ஆதரவோடு மகாதீர் தலைமையில் புதிய அரசை அமைக்க அஸ்மின் அலி முயற்சி மேற்கொண்டதாகக் கூறப்பட்டது. அவரை எதிர்க்கட்சி எம்பிக்கள் சிலர் சந்தித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அத்தகைய நடவடிக்கைகளில் தாம் ஈடுபடவில்லை என அஸ்மின் அலி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இந்நிலையில் மற்றொரு முக்கிய எதிர்க்கட்சியான பாஸ் கட்சித் தலைவரை மகாதீர் அண்மையில் சந்தித்துப் பேசியதும் புதிய ஆருடங்களுக்கு வித்திட்டுள்ளது. இதன் மூலம் அந்தக் கட்சியின் ஆதரவோடு பிரதமராக நீடிக்க மகாதீர் முயற்சிக்கிறாரா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் அப்படிப்பட்ட எண்ணமே தமக்கு இல்லை என்றும், பொது இடத்தில் சந்திக்கும் போது எதிரிகளாக இருந்தாலும் கைகுலுக்குவது தமது பண்பு என்றும் கூறி, யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மகாதீர்.

இடைத்தேர்தல்களில் அடுத்தடுத்த தோல்வியால் நெருக்கடி

இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் ஆளும் பக்காத்தான் கூட்டணி தோல்வி கண்டது. இதையடுத்து, கூட்டணிக் கட்சிகள் மக்கள் ஆதரவைப் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும் என மகாதீர் வலியுறுத்தி உள்ளார்.

இல்லையெனில் இந்த ஒரு தவணையுடன் பக்காத்தான் கூட்டணியின் ஆட்சிக்காலம் முடிந்து போகவும் வாய்ப்புள்ளது என அவர் எச்சரித்துள்ளார்.

“ஐந்து இடைத்தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளோம். ஆனால் இன்னும் நிலைமையைப் புரிந்து கொள்ளவில்லை.”

“நான் சொல்வது ஒன்றுதான். ஒரு ஜனநாயக ஆட்சியில் உங்களுக்கு மக்களின் ஆதரவு தேவை. ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதுடன், மக்களை பிளவுப்படுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் செயல்பாட்டை மாற்றாவிட்டால் மீண்டும் வெற்றிபெற முடியாது,” என்கிறார் மகாதீர்.

இடைத்தேர்தல் தோல்விகள் குறித்து கூட்டணியின் உயர்மட்டக் குழு ஆராயும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஊழல் புகார்: வழக்குகளால் திணறடிக்கப்படும் முன்னாள் பிரதமர்

நஜீப் ரசாக்
நஜீப் ரசாக்

இந்நிலையில், ‘பக்காத்தான் ஹராப்பான்’ கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் சுட்டிக்காட்டி உள்ளார்.

நஜீப் ரசாக் தம் மீதான ஊழல் வழக்குகளின் விசாரணை எதிர்கொண்டுள்ளார் அவர். நஜீப்பின் மனைவி மீதும் ஊழல் வழக்குகள் பதிவாகியுள்ளன. அவரும் விசாரிக்கப்படுகிறார்.

ஆனால் இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு வரும் நெருக்கடிக்கு மத்தியிலும் மகாதீர் அரசுக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொள்ள நஜீப் தயங்குவதே இல்லை.

இவரது ஆட்சிக் காலத்தில் நாட்டின் வளங்கள் கொள்ளையடிக்கப் பட்டதாக பிரசாரம் மேற்கொண்டு ஆட்சிக்கு வந்தது பக்காத்தான். ஆனால் ஊழல் தொடர்பான வழக்குகளின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும், எதிர்க்கட்சிகளிடம் இரு தினங்களுக்கு முன்பு இடைத்தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது பக்காத்தான் கூட்டணி.

இது குறித்த ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார் மகாதீர்.

அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நஜீப்தான் சிறந்தவர் என மக்கள் கருதுகிறார்கள் எனில், அதை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார்.

“திருடியதற்காகவும் ஏமாற்றியதற்காகவும் வழக்குகளை எதிர்கொண்ட ஒருவரால் எப்படி மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் எனத் தெரியவில்லை.”

“அவர்தான் தேவையெனில் அடுத்த பொதுத்தேர்தலில் அவரையே தேர்வு செய்யுங்கள். ஆனால் அதன் பிறகு நடக்கும் தவறுகளை எல்லாம் சரிசெய்ய மீண்டும் பக்காத்தான் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.”

“நிறைய பணம் கொடுப்பார்கள் என்பதால் அப்படிப்பட்ட வஞ்சகர்கள் தான் நாட்டை ஆள வேண்டும் என நினைப்பவர்கள் அதைச் செய்யுங்கள். ஆனால் பக்காத்தான் திருடப்பட்ட பணத்தை மக்களுக்குக் கொடுக்காது,” என்றார் மகாதீர்.

மலேசியாவின் பொருளாதாரம் நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ள பிரதமர், அடுத்த சில மாதங்களுக்குள் தனது இலக்கின்படி நாட்டை சரியான பாதையை நோக்கிச் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து முடிப்பாரா? எனும் கேள்வி எழுந்துள்ளது.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மலேசியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதே மில்லியன் டாலர் கேள்வி.

நன்றி : bbc

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here