“காஷ்மீரை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ளது இந்தியா,” என்று மலேசியப் பிரதமர் மகாதீர் தெரிவித்த கருத்து, புதுடெல்லிக்கு எத்தகைய அதிருப்தியை ஏற்படுத்தியதோ, அதே அளவிலான அதிருப்தியை தற்போது மலேசிய தரப்பும் அடைந்துள்ளது.

காஷ்மீர் விவகாரம் குறித்து மலேசியப் பிரதமர் தெரிவித்த கருத்து தற்போது இரு நாடுகளுக்கு இடையேயான மறைமுக வர்த்தகப் போரின் துவக்கப் புள்ளியாக அமைந்துள்ளது எனக் கருதப்படுகிறது.

காஷ்மீர் விவகாரத்தில் மலேசியாவின் நிலைப்பாட்டை அடுத்து, அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் அளவை குறைப்பதற்கான வழிமுறைகளை இந்தியா ஆராய்ந்து வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகமே இல்லாமல் இது இந்தியா கொடுக்கும் பதிலடி என்று ஒருதரப்பு தெரிவிக்கும் நிலையில், கடந்த சில தினங்களாக மலேசியாவில் இருந்து பாமாயிலை இறக்குமதி செய்ய இந்திய வர்த்தகர்கள் தயக்கம் காட்டுவதாகவும் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

மலேசியாவுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் பாமாயிலுக்கான இறக்குமதி வரியை இந்தியா உயர்த்தக் கூடும் என்ற அனுமானத் தயக்கமே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இது மட்டுமல்ல, மலேசியாவில் இருந்து இதர பொருட்களின் இறக்குமதியையும் குறைப்பதற்கு இந்தியா திட்டமிடுவதாகத் தெரிகிறது.

இதனால் மலேசியாவுக்கு வர்த்தக ரீதியில் கணிசமான இழப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது.

இது இருவழி வர்த்தகம் எனச் சுட்டிக் காட்டுகிறார் மலேசியப் பிரதமர்

இந்நிலையில் இந்தியத் தரப்பின் இந்த நடவடிக்கை குறித்தும், அதனால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்தும் ஆராயப்படும் எனத் தெரிவித்துள்ளார் மலேசியப் பிரதமர் மகாதீர். எனினும் இந்த விவகாரத்தில் அவரும் விட்டுக் கொடுப்பதாகத் தெரியவில்லை.

காஷ்மீர் விவகாரம் குறித்த நிலைப்பாட்டில் இருந்து மலேசிய அரசு பின்வாங்குவதற்கான அறிகுறியும் தென்படவில்லை.

“இந்தியாவும் கூட பல்வேறு பொருட்களை மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்கிறது. எனவே இது ஒருவழி வர்த்தகம் அல்ல. இருவழி வர்த்தகம்,” என்று பிரதமர் மகாதீர் சுட்டிக்காட்டி உள்ளார்.

பழுத்த அரசியல்வாதியான மகாதீரின் இந்த வார்த்தைகள் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியவை என்றே கருதப்படுகிறது.

காஷ்மீர் குறித்து மகாதீர் தெரிவித்த கருத்தால் கோபமடைந்த இந்திய இணைய பயனாளர்கள், மலேசியாவையும், அந்நாட்டுப் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும் என அண்மையில் இணையப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவைப் புறக்கணிக்குமாறு மலேசிய இணையப் பயனாளர்களும் சமூக வலைத்தளங்களில் கோபத்தை வெளிப்படுத்தினர். இத்தகைய பிரசாரத்தால் மலேசியாவுக்கு எந்த வகையிலும் பாதிப்பில்லை என்றார் பிரதமர் மகாதீர்.

மேலும் இந்தப் புறக்கணிப்பு பிரசாரம் குறித்து இந்தியத் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் பின்னூட்டமும் வரவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.

ஆனால் இப்போது வரையிலும் பதில் ஏதும் சொல்லாமலேயே மலேசியப் பிரதமரை மீண்டும் பேச வைத்திருக்கிறது இந்தியத் தரப்பு.

மலேசிய பாமாயிலை அதிகம் இறக்குமதி செய்யும் நாடு இந்தியா

உலக அளவில் சமையல் எண்ணெயை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் முதலிடம் வகிக்கிறது இந்தியா. மலேசியாவில் இருந்து பாமாயிலை அதிகம் வாங்கும் நாடும் இந்தியா தான்.

நடப்பாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் மலேசியாவில் இருந்து 3.9 மில்லியன் டன் பாமாயிலை இந்தியா வாங்கியுள்ளதாக மலேசிய பாமாயில் மன்றத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா இறக்குமதி செய்யும் சமையல் எண்ணெயில் மூன்றில் இரண்டு பங்கு பாமாயில் என்பது குறிப்பிடத்தக்கது. மலேசியாவில் இருந்து மட்டும் நடப்பாண்டில் மாதந்தோறும் 4 லட்சத்து 33 ஆயிரம் டன் பாமாயிலை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

மறுபக்கம் இந்தியாவில் இருந்து பெட்ரோலியப் பொருட்கள், இறைச்சி, உலோகம் மற்றும் ரசாயனப் பொருட்களை இறக்குமதி செய்கிறது மலேசியா.

வர்த்தகர்கள் பார்வை மலேசியாவை புறக்கணித்து இந்தோனீசியா பக்கம் திரும்பக்கூடும்:

மலேசிய பாமாயிலுக்கான இறக்குமதி வரியை இந்தியா உயர்த்தினால், வர்த்தகர்களின் பார்வை இந்தோனீசியா பக்கம் திரும்பக் கூடும். பாமாயில் உற்பத்தியில் அந்நாட்டுக்கும் கணிசமான பங்களிப்பு உண்டு.

மலேசிய பாமாயிலுக்கான இறக்குமதி வரியை உயர்த்துவது குறித்து இந்திய அரசுத் தரப்பில் இருந்து இதுவரை வெளிப்படையான அறிவிப்பு ஏதும் வரவில்லை. இதுகுறித்து கருத்துரைக்கக் கேட்ட போது, இந்திய வர்த்தக அமைச்சு முகம் கொடுக்கவில்லை என ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நவம்பர் மாதத்துக்குரிய தங்களது இறக்குமதி அளவான 5 ஆயிரம் டன் மலேசிய பாமாயிலுக்கு உரிய ஆர்டரை முன்வைக்க மும்பையைச் சேர்ந்த ஒரு வணிகர் தயங்குவதாக குறிப்பிட்டுள்ள ராய்ட்டர், மலேசியாவுடன் வர்த்தகத்தை தொடர வேண்டும் எனில் சில விஷயங்களில் தெளிவு ஏற்பட வேண்டியுள்ளது என இந்த வணிகர் தயங்குவதாகத் தெரிவித்துள்ளது.

இல்லையெனில் தேவையான பாமாயிலை இந்தோனீசியாவில் இருந்து இறக்குமதி செய்வது தான் ஒரே வழி என்று அந்த வணிகர் தெரிவித்ததாகவும் ராய்ட்டர் குறிப்பிட்டுள்ளது. இவர் மட்டுமல்லாமல், ஏனைய பல வணிகர்களும் இதே முடிவை எடுப்பதற்கான வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

மலேசிய பாமாயிலின் விலையும், ஏற்றுமதி அளவும் இவ்வாரத்தின் முதல் இரு தினங்களில் சரிவு கண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருதரப்பு வணிகர்களும் குழப்ப நிலையில் இருப்பதாகவும், எனவே ஏற்றுமதி குறித்து இரு தரப்பாலும் திட்டமிட முடியவில்லை என்றும் மும்பையைச் சேர்ந்த தாவர எண்ணெய் இறக்குமதி நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி சந்தீப் பஜோரியா தெரிவித்ததாக ஊடக செய்தி ஒன்று விவரிக்கின்றது.

இந்தோனீசியாவும் கூட பாமாயிலை அதிகளவு உற்பத்தி செய்கிறது. மேலும் சந்தை விலையை விட சற்று குறைவாக நிர்ணயித்து மலேசியாவுக்கு விற்பனை செய்கிறது. ஒருவேளை மலேசியாவைப் புறக்கணித்து இந்திய வர்த்தகர்களின் கவனம் இந்தோனீசியா பக்கம் திரும்பும் பட்சத்தில், மலேசியாவுக்கான ஏற்றுமதியை அந்நாடு முற்றிலுமாக நிறுத்தக் கூடும் என்றும் வணிக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்தியாவுடனான உறவில் நெருடல்; பாகிஸ்தானை ஆதரிக்கும் மலேசியா

இந்தியா, மலேசியா உறவில் திடீர் நெருடல் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானுடன் மலேசியா காட்டி வரும் நெருக்கம் கவனிக்கத்தக்கதாக உள்ளது.

பாகிஸ்தான் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் மலேசியாவுக்கு பயணம் மேற்கொண்ட இம்ரான் கானுக்கு உரிய ஆதரவையும் உதவியையும் அளிப்பதாக மகாதீர் உறுதி அளித்திருந்தார்.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதாக இந்தியா அறிவித்தபோது, இம்ரான்கான் தொடர்பு கொண்ட பல்வேறு உலகத் தலைவர்களில் மகாதீரும் ஒருவர். இம்ரான் எதிர்பார்த்த ஆதரவை வழங்கினார் மகாதீர்.

மேலும் இந்த ஆதரவின் நீட்சியாக ஐநா பாதுகாப்பு மன்றத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் முறையிட்ட போது அதன் பக்கம் நின்றது மலேசியா.

பின்னர் ஐநா பொதுப் பேரவையில் உரையாற்றிய போதும் காஷ்மீர் விவகாரம் குறித்து குறிப்பிட்ட மகாதீர், இந்தியாவை குறைகூறினார். இதனால் அதிருப்தி அடைந்த இந்திய தரப்பு, தங்களது உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என மலேசியாவுக்கு அறிவுறுத்தியது.

மலேசியா சுதந்திரம் பெற்ற நாள் முதற்கொண்டே பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்து வந்துள்ளது. இருதரப்புக்கும் இடையே நல்ல உறவுகள் நீடித்து வருவதாகச் சுட்டிக் காட்டுகிறார் மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் வியூக ஆய்வு நிபுணரான ரவிச்சந்திரன் தட்சிணாமூர்த்தி.

“இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் ஒத்துழைப்பு அளவில் மலேசியாவும் பாகிஸ்தானும் நல்ல தொடர்புகளை வைத்துள்ளன. அதே சமயம் சீனாவுடனான இவ்விரு நாடுகளின் உறவு முற்றிலும் மாறுபட்டவை. சீனா, மலேசியா இடையே வழக்கமான உறவு நிலவுகிறது. அதே சமயம் சீனாவுடனான பாகிஸ்தானின் உறவு மிகவும் சிறப்பு வாய்ந்தது.

“பாகிஸ்தானுக்கு அதிகளவில் ஆயுதங்கள் வழங்கும் நாடு சீனா. இவ்விரு நாடுகளுக்குமே இந்தியாவுடன் நல்லுறவு இல்லை. மலேசியப் பிரதமராக மகாதீர் இருக்கும் வரை பாகிஸ்தானுடனான உறவு நன்றாக இருக்கும்,” என்கிறார் ரவிச்சந்திரன்.

மலேசியா – இம்ரான்கான் நெருக்கத்தின் தொடக்கப் புள்ளி

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்றார் இம்ரான்கான். இதையடுத்து நவம்பரில் மலேசியாவுக்கு பயணம் மேற்கொண்டார்.

அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் தமது 92ஆவது வயதில் மலேசியப் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றார் மகாதீர். இருவருமே தங்களது தேர்தல் பிரசாரத்தில் ஊழலை முக்கிய விஷயமாக முன்வைத்திருந்தனர்.

மகாதீர் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர். இதற்கு முன்பு 1981 முதல் 2003 வரை 22 ஆண்டுகள் மலேசியப் பிரதமராக பதவி வகித்த பெரும் அனுபவம் அவருக்கு உண்டு. மறுபக்கம் இம்ரான்கான் ஒரு கிரிக்கெட் வீரராக மட்டுமே இருந்துள்ளார்.

மீண்டும் பிரதமராக பொறுப்பேற்ற கையோடு, சீனாவுடனான 22 பில்லியன் டாலர் மதிப்புள்ள திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தார் மகாதீர். இது தேவையற்ற திட்டம் என்றும் கூறினார். ஆனால் இதற்கு நேர்மாறாக, 60 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பாகிஸ்தானில் சீனா செயல்படுத்தும் திட்டத்தில் மிகுந்த ஆர்வம் காட்டினார் இம்ரான்கான்.

கடந்த ஆண்டு இம்ரான்கான் கோலாலம்பூருக்குச் சென்ற போது, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பாகிஸ்தானும் மலேசியாவும் ஒரே பாதையில் பயணிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

“ஊழல்களால் சலிப்படைந்துள்ள மக்கள் என் மீதும், மகாதீர் மீதும் நம்பிக்கை வைத்து அதிகாரத்தை அளித்துள்ளனர். இரு நாடுகளுமே கடன் பிரச்சினையால் தவிக்கின்றன. இருதரப்பும் இணைந்து பிரச்சினைகளைக் கையாள முடியும்.

“மலேசியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வந்துள்ளார் மகாதீர். அவரது அனுபவத்தில் இருந்து பாடம் கற்க முடியும் என நம்புகிறோம்,” என்றும் பிரதமர் இம்ரான்கான் மேலும் தெரிவித்தார்.

இது தான் மலேசியாவுக்கும் அவருக்குமான நெருக்கத்தின் துவக்கப்புள்ளியாக அமைந்தது. எப்போதெல்லாம் இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றச்சூழல் ஏற்படுகிறதோ, மகாதீர் மொஹமத்தை தவறாமல் அழைக்கிறார் இம்ரான்கான்.

மலேசியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளி இந்தியா

மலேசியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளிகளின் பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது இந்தியா. இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மகாதீர் தெரிவித்த கருத்துக்காக அவரை தண்டிக்கும் வகையில் மலேசியாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை இந்தியா குறைக்கும் பட்சத்தில், இரு நாடுகளுக்கிடையேயான மறைமுக வர்த்தகப் போர் துவங்கும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

ஒருபக்கம் அமெரிக்கா, சீனா இடையேயான வர்த்தகப் போர் உலகளவில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், தென்கிழக்கு ஆசியாவின் முக்கிய பொருளாதார சக்தியான மலேசியாவுடன் இந்தியா வர்த்தகப் போரில் ஈடுபடுவது ராஜதந்திர ரீதியில் ஆராயப்பட வேண்டிய விஷயம் என்றே கருதப்படுகிறது.

நன்றி : bbc

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here