“மலேசியாவுக்குத் தமிழர்கள் கூலிகளாக வரவில்லை”

மலேசியாவில் உலகத் தமிழ்ப் பெண்கள் ஒன்றுகூடல்

0
626

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஐயை குழுமம் மற்றும் மலேசியத் தமிழர் முன்னேற்றக் கழகம் ஏற்பாட்டில் உலகத் தமிழ் மகளிர் ஒன்றுகூடல் – மாநாடு மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவின் முதல் கட்டமாக பிற்பகல் இரண்டு மணி தொடங்கி மாலை ஐந்தரை வரை கருத்தரங்கம் நடந்தது. மலேசிய இந்தியத் தூதரகத்தின் கலாச்சாரப் பிரிவு தலைவர் திரு.ஐயனார் அவர்கள் மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசினார்.

அவரைத் தொடர்ந்து ஐயை குழுமத் தோற்றுநர் ஒரிசா பாலு அவர்கள் உரையாற்றினார். அவர் தம் உரையில் தமிழரின் நுழைவாயிலான மலேசியாவில் தமிழர்கள் சஞ்சிக் கூலிகளாக வரவில்லை, தமிழருக்கும் மலேசிய மண்ணுக்கும் காலத்தால் மிக முந்திய பிணைப்பு உள்ளது என்றும் மலேசியத் தமிழ் மக்கள் தங்கள் வரலாற்றைத் திருத்தி எழுத வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் கூறினார்.

மேலும் அவர் தன் உரையில் தமிழ் மகளிரின் திறம் காலம் காலமாய் எவ்வாறு வளர்த்தெடுக்கப்பட்டது என்று சங்காலப் பெண்கள், வேலு நாச்சியார், ஜான்சி ராணி ரெஜிமெண்ட் என்று காலத்துக்கொரு ஒப்புமை காட்டி தமிழ்ப் பெண்களின் வீரத்தைப் போற்றவேண்டிய அவசியத்தையும் தேவையையும் வலியுறுத்திப் பேசினார்.

தொடர்ந்து கட்டுரையாளர்கள் தங்கள் கட்டுரைகளைத் திறம்பட அவையின் முன்வைத்தார்கள். ஆய்வாளர்களின் கட்டுரைகள் திறனாய்வு செய்யப்பட்டன. இந்தப் பன்னாட்டுக் கருத்தரங்கம் உலகத் தமிழ்ப் பெண்களின் திறன் என்ற பொருண்மையில் அமைந்திருந்தது. இது பெண்களால் ஒருங்கிணைக்கப்பட்ட பெண்களுக்கான முதல் தமிழ் கருத்தரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.\

இந்தியா, இலங்கை, சுவிசர்லாந்து, ஸ்காட்லாந்து, மலேசியா என ஐந்துக்கும் மேற்பட்ட நாடுகளில் வசிக்கும் தமிழ் மகளிர் எழுதிய பல்துறை சார்ந்த கட்டுரைகள் இங்கு வாசிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து உலகில் முதல் முறையாக தொல்காப்பியம் காட்டும் வழியில் ஆய்வு செய்தல் பற்றிய அறிமுகமும், கட்டுரையாக்கம் போன்றவற்றில் பயிற்சிப் பட்டறையும் நடத்தப்பட்டது.

இந்த மாநாட்டை கடல்சார் ஆய்வாளரும் ஐயை குழுமத் தோற்றுநருமான ஒரிசா பாலு, தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் சுபாசினி கனகசுந்தரம், பேரா.கண்ணன் நாராயணன் ஆகியோர் வழிநடத்தினர். எத்திராஜ் கல்லூரியின் தமிழ்த்துறை இணைப் பேராசிரியரும் பெண்ணிய மையத்தின் தலைவருமான முனைவர் அரங்க மல்லிகா அவர்கள் அமர்வுப் பொறுப்பாளராக இருந்து கருத்தரங்கை நெறிப்படுத்தினார்.

மாநாட்டின் தொடர்ச்சியாக மாலை ஆறு மணிக்கு மேல் நேதாஜி அரங்கில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. பேராக் மாநிலத்தின் சபாநாயகர் டத்தோ தங்கேஸ்வரி இந்த நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். மலேசிய இந்தியர் காங்கிரசைச் சார்ந்த பொறுப்பாளர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சி குறித்து விழாவின் மலேசிய ஏற்பாட்டாளரான நாவலாசிரியை மலர்விழி பாஸ்கரன், “உலக அரங்கில் தமிழ்ப் பெண்களின் திறனை வளர்த்தெடுத்து, தனித்தன்மையோடு தமிழர் பெருமையைத் தரணியெங்கும் நிலைநாட்டி முன்னிறுத்தும் பெருநோக்கோடு 2016ஆம் ஆண்டில், ஒரிசா பாலுவால் துவங்கப்பட்டது ஐயை உலக மகளிர் குழுமம்.

உலகெங்கிலும் உள்ள திறன் சார்ந்த தமிழ் மகளிருக்கான அமைப்பாக இருந்து செயல்படத் துவங்கியிருக்கும் இக்குழுவில் தற்போது பத்துக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 185க்கும் மேல் தமிழ் மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர். தத்தம் இடம் சார்ந்த வரலாற்றுச் சூழலில் தமிழுக்கான தொடர்பைத் தேடுவதும் அவ்விடங்களில் தமிழர் தொன்மை குறித்த புரிதலை மக்களிடையே உருவாக்கவும் தமிழர் கலாச்சார பண்பாட்டுக் கூறுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும் எங்கள் குழுவின் உறுப்பினர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

அதன் ஒரு கட்டமாக ஐயை உலக மகளிர் குழுமத்தை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் நோக்கிலும் அறிவார்ந்தவர்களாய்ப் பெண்கள் சமூகத்தை வளர்த்தெடுக்கும் முயற்சியாகவும் உலகத் தமிழ்ப் பெண்களின் திறன் என்னும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கமும் பயிற்சிப் பட்டறையும் தகைசால் சான்றோருக்கும் பெண் சாதனையாளர்க்கும் விருதளித்து ஊக்கமளிக்கும் விருது விழாவுமாக மலேசிய மண்ணில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது” என்றார்.

நடன வித்தகர் திரு சந்திரமோகன் குழுவின் புஷ்பாஞ்சலி நடனத்தோடு துவங்கிய இவ்விழாவில் தொடர்ந்து சாதனை செய்த தமிழ் மகளிருக்கு விருதுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

புவான் ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் அவர்களுக்கும் பரதக்கலையுலகில் தனிமுத்திரை பதித்திருக்கும் திருமதி இந்திரா மாணிக்கம் அவர்களுக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

துபாய் தமிழ்ச்சங்கத் தலைவரும் தொழில் முனைவருமான திருமதி ஜெயந்தி மாலா சுரேஷ் சிறப்பு விருந்தினராய் வந்திருந்து சிறப்புரையாற்றினார். அவர் தம் சிறப்புரையில் பெண்மையின் தனிச்சிறப்பு பற்றியும் இக்காலப் பெண்கள் வாழ்வில் சாதிக்கத் தேவையான தன்னம்பிக்கை, உழைப்பு மற்றும் துணிவைத் திரட்டுவது எப்படி என்றும் அனைவரும் உணரும் வண்ணம் திறம்படப் பேசினார். மகப்பேறு மருத்துவத்தில் பெரும் சாதனைகள் நிகழ்த்தி தொடர்ந்து எண்ணற்ற பெண்களின் வாழ்வில் ஒளியேற்றிக் கொண்டிருக்கும் சென்னை ஏஆர்சி மருத்துவமனையின் தாளாளரும் மருத்துவருமான திரு சரவணன் மற்றும் திருமதி மகாலட்சுமி சரவணன் அவர்களும் சிறப்பு விருந்தினராய் வந்திருந்து விழாவைப் பொலிவூட்டினர்.

மேலும் எழுத்தாளர் இன்பவள்ளி சுப்ரமணியம், டத்தோ டாக்டர் சுப்ரமணியம், ஆஸ்ட்ரோ ராஜாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை மலேசியத் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டத்தின் தாமரைச் செல்வி சிறப்புற ஏற்பாடு செய்திருந்தார்.

ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்; உங்களால் ஆன உதவிகளை இங்கே, இப்போதே செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here